பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை நீக்குக! மதசார்பற்ற ஜனநாயக அரசியல் கட்சிகள், இயக்கங்கள் வேண்டுகோள்!

0

பத்திரிக்கை செய்தி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு ஜார்க்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை நீக்குக! பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுக!  தமிழகத்தின் இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற ஜனநாயக அரசியல் கட்சிகள், இயக்கங்கள் வேண்டுகோள்!

எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒருங்கிணைத்த இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற ஜனநாயக அரசியல் கட்சிகள், இயக்க தலைவர்களின் ஒருங்கிணைப்பு ஆலோசனைக்கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று(மார்ச்.02) நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 2007ஆம் ஆண்டு தொடங்கி ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய இந்திய அரசமைப்பின் விழுமியங்களைப் போற்றி இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருவதை அறிவோம். தமிழ்நாட்டிலும் அது தனித்தும் பிற ஜனநாயக அரசியல் இயக்கங்கள், கட்சிகளோடு இணைந்தும் அறப் போராட்டங்களிலும் ஆக்கப் பணிகளிலும் ஈடுபட்டு வருவதைக் கண்டுள்ளோம்.

இந்நிலையில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான ஜார்க்கண்டு மாநில அரசு திடீரென்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை அம்மாநில அளவில் தடை செய்திருப்பது அதிர்ச்சியும் கவலையும் தருகிறது.

1908ஆம் ஆண்டின் குற்றவியல் திருத்தச் சட்டம் பிரிவு 16இன் படி இத்தடையை விதிப்பதாக ஜார்க்கண்டு மாநில அரசு சென்ற பிப்ரவரி 20 நாளிட்ட தன் செய்திக் குறிப்பில் கூறியுள்ளது. தடைக்குத் தரப்பட்டுள்ள காரணம் தென் மாநிலங்கள் சிலவற்றில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்குப் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களிடையே செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்தின் ஆபத்து குறித்துக் குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பாப்புலர் ஃப்ரண்ட்தான். ஐ.எஸ்.ஐ எஸ்சுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் சிறப்பானதொரு வெளியீடே கொண்டுவந்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்டைத் தடை செய்ய எவ்விதக் காரணமும் இல்லை என்று கேரளம், கர்நாடகம் ஆகிய தென்மாநில அரசுகள் அண்மையில்தான் தெளிவாக அறிவித்துள்ளன. மேலும் அதனைத் தடை செய்யுமாறு இந்திய அரசுக்கு அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என்றும் இந்த மாநில அரசுகள் தெளிவாகத் தெரிவித்துள்ளன.

ஜார்க்கண்டு மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்டை ஒரு காலவழுச் சட்டத்தின் விதிகளைச் சொல்லித் தடை செய்திருப்பது உண்மைகளின் அடிப்படையிலோ சட்டத்தின் அடிப்படையிலோ நியாயப்படுத்த முடியாத நடவடிக்கை என்பதைச் சுட்டிக்காட்ட விழைகிறோம்.

அமைதியை நேசிப்பதும் சட்டப்படி இயங்குவதுமான ஓர் சமூக அரசியல் அமைப்பின் மீதான கிஞ்சிற்றும் தேவையற்ற இத்தடை சங்கம் சேரும் உரிமையையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள பிற அடிப்படை உரிமைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும் எனக் கருதுகிறோம். தலைமையமைச்சர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான இப்போதைய இந்துத்துவ அரசாட்சியில் அன்றாட வாடிக்கை ஆகி விட்ட சிறுபான்மையினர் மற்றும் அவர்தம் உரிமைகள் மீதான தொடர்ந்த கொடுந்தாக்கின் ஒரு கூறாகவே இத்தடையையும் கருதலாம்.

இந்தத் தடைக்கு உண்மைக் காரணம் ஜார்க்கண்டு மாநில அரசின் மனித உரிமை மீறல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உறுதியாக எதிர்த்து வருவதே ஆகும். காவல்துறை நடத்தும் சட்ட விரோதக் கொலைகளும், இந்துத்துவ ஆற்றல்கள் வேண்டாதவர்களை அடித்துக் கொலை செய்வதும், மாற்றார் மீது வெறுப்புமிழ்ந்து பேசுவதுமான குற்றங்களை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு சட்ட வழியிலும் ஜனநாயக வழியிலும் தொடர்ந்து உறுதியாக இயங்கி வருவதால் மாநில இந்துத்துவ ஆற்றல்களும் அரசும் எரிச்சலடைந்ததன் விளைவுதான் இந்தத் தடை.

ஜார்கண்டு மாநிலத்தில் தன் மீது விதித்துள்ள தடை நியாயமற்றது என்று பாப்புலர் ஃப்ரண்ட் கருதிய போதிலும், தடையை மதித்து அம்மாநிலத்தில் தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டு விட்டது. ஆனால் அதற்குப் பிறகும் மாநில அரசும் காவல்துறையும் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களைக் கைது செய்து பொய் வழக்கில் சிக்க வைக்கும் வேலை நடப்பதாக அறிகிறோம்.

இந்திய அரசின் பொருளியல், அரசியல் நடவடிக்கைகள் போகும் திசையை உற்றுக் கவனிக்கும் போது ஜனநாயக உரிமைகளை வளர்ச்சித் திட்டங்களுக்குத் தடைகள் என்பது போல் இந்திய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் பார்த்து வருகின்றன. மக்கள் மீது சுமைகள் ஏற ஏற, அதற்கு மக்களின் எதிர்ப்பு வளர வளர, உண்மையாக மக்கள் பக்கம் நின்று அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளின் மீதான தடை உள்ளிட்ட அடக்குமுறைகள் தீவிரமடைகின்றன. ஆகவே, இன்று ஜார்க்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் மீது பாய்ந்துள்ள தடை நாளை எந்த மாநிலத்திலும் எந்த ஜனநாயக அமைப்பின் மீதும் பாயும் ஆபத்துள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜார்க்கண்டு மாநில அரசும் இந்திய அரசும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடையை உடனே விலக்கிக் கொள்ளுமாறும், அவ்வியக்கத்தவர் மீதான பொய் வழக்குகளை விலக்கிக் கொண்டு, சிறையிலிருப்பவர்களை உடனே விடுதலை செய்யுமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த இந்த தடையை திரும்பபெற வலியுறுத்தி எதிர்வரும் மார்ச் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 03 மணியளவில் சென்னையில் தமிழகத்தின் இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற ஜனநாயக அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் ஒருங்கிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் தாமோதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாக்கியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டாக்டர். ரவீந்திரநாத், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், மே.17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு, PUCL தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி, கிருஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் பிரதிநிதி ஜெயக்குமார், தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு பிரதிநிதி ஃபாத்திமா முஸாஃபர், தேசிய லீக் கட்சி மாநில தலைவர் எம். பஷீர் அஹமது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லபிமி, இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைத்தலைவர் முஹம்மது முனீர், இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் நிஜாமுதீன், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், CPML மக்கள் விடுதலை சதீஸ்குமார், இந்திய குடியரசு கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு வேந்தன், ஆல் இந்தியா மில்லி கவுன்சில் துணைத்தலைவர் இப்னு சவூத், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளர் சே.மு.மு.முஹம்மது அலி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி யூசுஃப் கான், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் ஜலாலுதீன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பஈ, தமிழர் தொழில் வணிக வேலாண் பெருமன்ற பொருளாளர் பிச்சை முத்து, அகில இந்திய கிருஸ்தவ நீதிக்கட்சி கே.எஸ்.பாஸ்கரன், ஜமாத்தே உலாமே ஹிந்த் மன்சூர் காஷிஃபி, சமுதாய ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனீஃபா, மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், அகில இந்திய தேசிய லீக் கட்சியின் இனாயத்துலாஹ், தமிழர் விடுதலை கழகம் சுந்தர மூர்த்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி வினோத் குமார், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர்கள் உமர் பாரூக், அமீர் ஹம்ஸா, ரத்தினம், மாநில பொருளாளர் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், முஹம்மது ஃபாரூக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில துணைத்தலைவர் முஹம்மது ஷேக் அன்சாரி ஆகியோர் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து கட்சி தலைவர்களின் கையொப்பமிட்ட கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

ஏ.கே.கரீம்
மாநில ஊடக ஒருங்கினைப்பாளர்
எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு

Comments are closed.