பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை துணை ஆய்வாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு

0

கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியில் உள்ள யுனிவெர்சிட்டி காவல்நிலைய துணை ஆய்வாளர் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அப்பகுதியில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதன் எதிரொலியாக துணை ஆய்வாளர் ராகவேந்திராவை பணியிடை நீக்கம் செய்து குல்பர்கா எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். ஆனால் அவரின் பணியிடை நீக்க உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டு அவர் மல்கேத் பகுதிக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் துணை ஆய்வாளர் ராகவேந்திரா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது காவல்துறைக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இந்த குற்றம் நடைபெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கை காவல்துறை மிகவும் தாமதப்படுத்தி வந்ததை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் சட்ட நிபுணர்கள் குல்பர்கா நீதிமன்றத்தை நாடி தவறிழைத்த இந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க விண்ணப்பித்தனர். இதனையடுத்து நீதிமன்றம் எம்.பி. நகர் காவல்நிலைய ஆய்வாளரிடம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் முகம்மத் முஹ்சின் காவலர்களால் தாக்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 323, 324, 326, 504, 506, 149 மற்றும் காவல்துறை சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவை வரவேற்றுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட பொதுச் செயலாளர் ஏஜாஸ் அலி, பல பக்கங்களில் இருந்து தங்களுக்கு அழுத்தம் இருந்தாலும் இந்த வழக்கை தாங்கள் சட்டப்படி நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய தாங்கள் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை துணை ஆய்வாளர் ராகவேந்திரா தவிர்த்து காவலர்கள் சுல்தான், சந்தோஷ், மல்லிகார்ஜூன், சதாசிவ சுவாமி, ஜெயானந்த் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.