பாப்புலர் ஃப்ரண்ட்: மதுரை உரிமை முழக்க மாநாடு தீர்மானங்கள்

0

உரிமை முழக்க மாநாடு தீர்மானங்கள்

தீர்மானம் 1: பாசிசத்திற்கு எதிரான கூட்டமைப்புகள் வலுவாகி களப்பணி ஆற்ற  வேண்டும்

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்நாட்டின் அடிப்படை விழுமியங்கள் மற்றும் அரசியல் சாசன உரிமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குடிமக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் சாதாரண, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரங்களை கேள்விக்குறியாக்குவதும் தொடருகிறது. மாட்டின் பெயரால் முப்பதுக்கும் மேற்பட்ட  முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமையும், மார்க்க சட்டங்களை பின்பற்றும் உரிமையும் மறுக்கப்படுகிறது. இந்துத்துவ சக்திகளை விமர்சிக்கும் அறிவு ஜீவிகளும், எழுத்தாளர்களும் கொல்லப்படுகின்றனர். கூட்டாட்சி தத்துவத்திற்கும், அணிசேரா கொள்கைக்கும் எந்த மதிப்பும் இல்லை. அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவியுள்ள இந்த அரசு தமது தோல்விகளை திசை திருப்புவதற்காக அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இயங்கும் சிறுபான்மை முஸ்லிம்களின் இயக்கங்கள் மற்றும் நிறுவனங்களை போலியான குற்றச்சாட்டுக்களின் பெயரால் குறிவைக்கிறது. இந்நிலையில் அதிகரித்துவரும் படுகொலைகளையும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளையும் எதிர்ப்பதற்கு இந்நாட்டின் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும். பாசிசத்திற்கு எதிரான கூட்டமைப்புகள் வலுவாகி களப்பணி ஆற்ற  வேண்டும் என்று இம்மாநாடு கோரிக்கை விடுக்கிறது.

தீர்மானம் 2: தேசிய புலனாய்வு முகமையை (என்.ஐ.ஏ.) கலைக்க வேண்டும்

தீவிரவாத வழக்குகளை விசாரித்து அவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அப்பாவிகளை தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் வேலைகளில் ஈடுபடுகிறதோ என்ற சந்தேகத்தை அதன் செயல்பாடுகள் ஏற்படுத்தி வருகின்றன. மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு அதிகாரத்திற்கு வந்த பிறகு, அரசின் கூண்டுக் கிளியாக செயல்பட்டு வரும் என்.ஐ.ஏ. குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இந்துத்துவ தீவிரவாதிகளை வழக்குகளில் இருந்து விடுவிப்பதில் மும்முரமாக உள்ளது. இந்துத்துவ தீவிரவாதிகளை இந்த வழக்குகளில் இருந்து விடுவித்த பிறகு, அதே வழக்குகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சிக்க வைக்கும் வேலையில் என்.ஐ.ஏ. களம் காணுமோ என்ற நியாயமான சந்தேகம் முஸ்லிம் சமுதாயத்திடம் உள்ளது. மாலேகான் வழக்கில் மென்மையான போக்கை கையாளுமாறு என்.ஐ.ஏ. அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ரோகினி சாலியான் தெரிவித்தது என்.ஐ.ஏ.வின் தரத்தை வெளிப்படுத்துகிறது. இன்னும் சில வழக்குகளை முடிப்பதற்காக அப்பாவிகளிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பேரம் பேசியதும் அதன் மோசமான தரத்திற்கு மற்றொரு சான்றாக திகழ்கிறது. அத்துடன், சமீபத்தில் என்.ஐ.ஏ. அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஒய்.சி.மோடி, குஜராத் இனப்படுகொலைகள் மற்றும் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா படுகொலை வழக்கு ஆகிய வழக்குகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டு அதன் நியாயத்தன்மையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தீவிரவாத வழக்குகளையும் தாண்டி அரசாங்கம் மற்றும் அதன் தாய்ச் சபையான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தூண்டுதலின் காரணமாக ஏராளமான வழக்குகளை ஏற்றுள்ள என்.ஐ.ஏ. வழக்குகளை விசாரிக்க முடியாமல் திணறி வருவதும் கண்கூடாக தெரிகிறது. இதுவரை என்.ஐ.ஏ. விசாரித்து வரும் 165 வழக்குகளில் இருபதுக்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு புறம், மாநில அரசாங்கங்களின் அனுமதி இல்லாமல் என்.ஐ.ஏ. எந்த வழக்குகளையும் விசாரிக்கலாம் என்பது மாநில அரசாங்கங்ளின் உரிமையை கேள்விக்குறியாக்குவதுடன் மாநில சுயாட்சிக்கும் எதிராக உள்ளது. எனவே, மாநில அரசாங்கங்களின் உரிமைகளில் கைவைத்து, உருவாக்கப்பட்ட நோக்கத்தில் இருந்து திசைமாறி, மத்திய அரசாங்கத்தின் ஏவல்படையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3: மதுரை போலி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்

மதுரையில் கடந்த 2011 முதல் நடைபெற்ற சிறிய அளவிலான போலி குண்டுவெடிப்புகள் மற்றும் வெடிக்காத குண்டுகள் கண்டு எடுக்கப்பட்ட 17ற்கும்  மேற்பட்ட சம்பவங்களில் பல்வேறு மர்மங்கள் நிலவுகின்றன. இது குறித்து 2013ஆம் வருடம் அப்போதைய மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தமிழக டி.ஜி.பி. மற்றும் கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கு எழுதிய துறை ரீதியான கடிதங்களில் மேற்படி குண்டு வெடிப்புகளில் உளவுத்துறையின் பின்னணி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இக்கடிதங்கள் மதுரை உயர் நீதி மன்ற கிளையிலும் ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தமிழக காவல்துறை பிரிவுகள் நடத்திய விசாரணையிலும் ஏராளமான முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இவ்வழக்குகளை தமிழக காவல்துறையிடமிருந்து மாற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும்

மாநில சுயாட்சி என்பதை ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் கொண்டு வர வேண்டும்.  இந்திய தேசம் என்பது பல்வேறு மாநிலங்களின் கூட்டமைப்பு (federal structure) என்று நமது அரசியல் சாசனம் வரையறை செய்துள்ளது. ஆனால் மாநிலங்களுக்கான சுயாட்சி என்பது படிப்படியாக சுருக்கப்பட்டு தற்போதைய சூழலில் அது முழுவதுமாக பறிக்கப்படும் நிலையில் உள்ளது. அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனம் செய்துள்ள மத்திய அரசாங்கம் மாநிலங்களின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக பறித்து வருகிறது. மாநிலங்களின் முன்னேற்றமே தேசத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் மாநிலங்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்கும் பட்சத்தில்தான் இந்த முன்னேற்றங்கள் சாத்தியம் என்பதையும் உணர்ந்து மாநிலங்களுக்கான சுயாட்சியை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5: பத்தாண்டுகள் சிறையில் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்

ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை என்பது மனித உரிமை மற்றும் மனித இனத்தின் உன்னத மாண்புகளான கருணையை அடிப்படையாகக் கொண்டது. தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் சிறைவாசிகளில் பத்து ஆண்டுகளை கழித்துள்ளவர்களின் விடுதலைக்கான கோரிக்கைகள் முஸ்லிம் சமுதாயத்தால் பல ஆண்டுகளாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அண்ணா பிறந்தநாள் விழா, அண்ணா நூற்றாண்டு விழா ஆகிய நிகழ்வுகளின் போது விடுதலை செய்யப்பட்ட சிறைவாசிகளில் முஸ்லிம் சிறைவாசிகள் புறக்கணிக்கப்பட்டனர் என்பதை கடந்த காலங்களில் நாம் கண்டு வந்தோம். கோவை மத்திய சிறையில் நிகழ்ந்த முகம்மது ஒஜீரின் மரணம், முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மரணம்தான் விடுதலையை கொடுக்குமோ? என்ற எண்ணத்தை முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் ஏற்படுத்தியது. தமிழக சிறைகளில் உள்ள சிறைவாசிகளான கோவை அபூதாஹிர் மற்றும் திண்டுக்கல் மீரான் முகைதீன் ஆகியோர் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு, மேலும் சில சிறைவாசிகள் எழுபது வயதை கடந்துள்ள போதும் அவர்களை விடுதலை செய்யாதது சிறைவாசிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தொடர் ஏமாற்றத்தையே அளிக்கிறது.

ஆயுள் சிறைவாசிகள் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் நீதிபதிகள் நாகமுத்து மற்றும் எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முக்கியமான தீர்ப்பொன்றை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது. பதினான்கு ஆண்டுகளை பூர்த்தி செய்த ஆயுள் சிறைவாசிகளின் நிலைகளை மறு ஆய்விற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதனை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அண்மையில் தமிழகத்தில் உள்ள சிறைவாசிகளில் நன்னடத்தை அடிப்படையில்  776 சிறைவாசிகள், தண்டனை முடியும் முன்னரே விடுதலையாக உள்ளனர் என சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் விடுவிக்கப்பட உள்ள 776 சிறைவாசிகளில் சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் பார்க்காமல், நன்னடத்தை மற்றும் தண்டனை அனுபவித்த நாட்களை கருத்தில் கொண்டு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். கடந்த காலங்களில் முஸ்லிம் என்ற காரணத்திற்காக, பல ஆண்டுகளாக தமிழக சிறைகளில் வாடுகின்ற முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை மறுக்கப்பட்டது. எனவே இதனை கருத்தில் கொண்டு, விடுவிக்கப்பட உள்ள சிறைக்கைதிகள் பட்டியலில் பத்தாண்டு கழித்த முஸ்லிம் அப்பாவி சிறைவாசிகளையும் உட்படுத்தி விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6: ரோஹிங்யா அகதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம்

நமது அண்டை நாடான மியான்மரில் உள்ள ராகினே பிரதேசத்தில் வாழும் ரோஹிங்யா மக்கள் அந்நாட்டின் இராணுவம் மற்றும் புத்த மத தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகி உயிரை பாதுகாப்பதற்காக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இந்நிலை நீடித்து வரும் நிலையில், தற்போது மத்தியில் உள்ள பா.ஜ.க.அரசாங்கம் இந்தியாவில் உள்ள ஏறத்தாழ 40,000 ரோஹிங்யா அகதிகளால் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் நாட்டின் வளங்களை அவர்கள் பங்கிடுவதால் இந்திய குடிமக்களின் பங்கு குறைகிறது என்றும் அறிவுக்கு ஒவ்வாத துவேஷம் நிறைந்த கருத்துகளை கூறி அவர்களை நாடு கடத்த வேண்டும் என்று கூறி வருகிறது. உயிருக்கு உத்தரவாதமில்லாத இடத்தில் இருந்து தப்பி வந்தவர்களை மீண்டும் அதே இடத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பது கடுகளவு மனிதாபிமானம் கொண்டவரும் கூட சொல்லத் துணியாத கருத்து.

அகதிகளுக்கான ஐ.நா. உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதை காரணமாக கூறியே மத்திய அரசாங்கம் தனது தரப்பு வாதத்தை நியாயப்படுத்தி வருகிறது. உடன்பாட்டில் கையெடுத்திடவில்லை என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் திபெத், இலங்கை என பல நாடுகளில் இருந்து இந்தியா அகதிகளை ஏற்றுக் கொண்ட வரலாற்றை மத்திய அமைச்சர்கள் அறிந்து கொள்வது நல்லது. அனைத்திற்கும் மேலாக, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட உரிமை கிடையாது என்று மத்திய அரசாங்கம் வாதிடுவது நீதித்துறை மீதான அவர்களின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. ரோஹிங்யா அகதிகள் முஸ்லிம்கள் என்பதால்தான் அவர்களை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அனைத்தையும் மத ரீதியிலேயே அணுகும் போக்கு ஏற்புடையதல்ல என்பதை மத்திய அரசாங்கம் உணர்ந்து ரோஹிங்யா அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7: நீட் தேர்வை ரத்து கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் இருந்து இந்தாண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் தொடர்ந்து தமிழக விரோத போக்கில் செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசாங்கம் இதனை சற்றும் கவனத்தில் கொள்ளவில்லை. நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்ற வாசல்களில் ஏறியபோதும் விலக்கு அளிக்கப்படாததால் திறமை இருந்தும் மருத்துவ இடம் மறுக்கப்பட்ட மாணவி அனிதா தனது உயிரையே மாய்த்துக் கொண்டார். இதுவரை இல்லாத அளவில் தமிழக அரசு பள்ளிகளில் இருந்து ஐந்து மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசாங்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பில்  மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் மாணவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கல்வி என்பது மாநில பட்டியலில் வரவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 8: யு.ஏ.பி.ஏ. உள்ளிட்ட கருப்பு சட்டங்களை நீக்க வேண்டும்

1967யில் இயற்றப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு சட்டமான யு.ஏ.பி.ஏ. என்ற கருப்பு சட்டம் பின்பு 2004, 2008 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு மனித உரிமை மீறலுக்கும், நீதி மறுப்பதற்குமான ஒரு கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், விசாரணை கைதிகளாகவே தங்களுடைய வாழ்வின் பெரும்பகுதியினை சிறையில் கழித்த பின்னர் பல வருடங்கள் நிரபராதிகளாக விடுவிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதன் மூலம் இக்கருப்பு சட்டம் நீதிக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை வகுப்பினரை அடக்கி வாய்மூட செய்வதற்கான அரசியல் கருவியாகவே யு.ஏ.பி.ஏ. போன்ற கருப்பு சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதனை நமது நாட்டில் இதுவரையிலும் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் உணர்த்துகிறது.

உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக் மீது யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் தீவிரவாத தொடர்பு குற்றம் அநியாயமாக சாட்டப்பட்டு அவரது நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளதோடு, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சங்பரிவார இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக குரல்கொடுக்கும், முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்காக உழைக்கும் இயக்கங்களை யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் முடக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் விசாரணை கைதிகளாக அநியாயமான முறையில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் அடைக்கப்பட்டுள்ளதை முடிவுக்கு கொண்டு வரவும், அரசுக்கு பிடிக்காதவர்கள் மீது பிரயோகிக்கும் கருவியாக இச்சட்டம் பயன்படுத்துவதை தடுக்கவும் உடனடியாக யு.ஏ.பி.ஏ. கருப்பு சட்டத்தினை ரத்து செய்ய இம்மாநாடு கோருகிறது. அது போலவே கஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு காரணமான AFPSA (ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம்) என்ற கருப்புச சட்டமும் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் 9: கௌரி லங்கேஷ் உள்ளிட்ட பத்திகையாளர்கள் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம்

நேர்மையான மற்றும் தைரியமான பெண் பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான  கௌரி லங்கேஷ் பெங்களூருவில் வைத்து  மதவாத பாசிச சக்திகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஃபாசிஸ வகுப்புவாதத்திற்கு எதிரான இடைவிடாத போராட்டத்திற்காகவும், இந்த தேசத்தின் மதச்சார்பற்ற விழுமியங்கள் மீதான சமரசமற்ற விசுவாசத்திற்காகவும், அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார். இதழியல் என்பது ஒரு தொழில் என்பதையும் தாண்டி வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அவருக்கு ஆயுதமாக இருந்தது.

கெளரியுடைய படுகொலை மதச்சார்பற்றவர்களுக்கான  இழப்பு மட்டுமின்றி ஓடுக்கப்பட்ட மக்களுடைய  பேரிழப்பாகும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன்  நீண்ட காலமாக  அவர்  கொண்டிருந்த நட்பையும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  தேசிய  பேரியக்கமாக அறிவிக்கப்பட்ட  வரலாற்று சிறப்பு மிக்க 2007 பெங்களூர் எம்பவர் இந்தியா மாநாட்டில் (Empower India Conference)  சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றார் என்பதையும் நினைவு கூர்கின்றோம். இத்தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்வியாளரும் சிந்தனையாளருமான எம்.கல்புர்க்கி தர்பார் மாவட்டத்தில் வைத்து  இதே போன்று  படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலைக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் கெளரி லங்கேஷ் படுகொலைச் செய்யப்பட்டு ஒரு மாதம் கழிந்த பிறகும் குற்றவாளிகள் கைது செய்யப்படாதது அதிர்ச்சியை அளிக்கிறது. கர்நாடகாவை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ்  அரசு மாநிலத்தை இந்த  படுகொலையாளர்களிடம் இருந்து பாதுகாப்பதுடன் கெளரி லங்கேஷின் கொலைக்கு பின்னால் உள்ள அனைவரையும் விரைவாக கண்டுபிடித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாடு கோரிக்கை விடுக்கிறது.

தீர்மானம் 10: வக்ஃப் வாரியம்  சீரமைக்கப்பட வேண்டும்

மக்கள் நலப் பணிகளுக்கும் அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிப்பதே வக்ஃப் எனப்படும். இதன் அடிப்படையில்தான் பல இஸ்லாமிய தனவந்தர்கள் பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை முஸ்லிம்களின் நலனுக்காக அர்ப்பணித்து சென்றுள்ளனர். ஆனால் இந்த சொத்துகளின் பெரும் பகுதி இன்று ஆக்கிரமிக்கப்பட்டு பல்வேறு தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பிடியில் உள்ளது. வக்ஃப் சொத்துகளின் பலனை அடைய வேண்டிய முஸ்லிம் சமூகமோ பொருளாதார நிலையில் தொடர்ந்து கீழ் நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. சமுதாய நலனுக்காக வழங்கப்பட்ட வக்ஃப் சொத்துகளை முறையாக பயன்படுத்தினால் முஸ்லிம் சமுதாயம் தன்னிறைவு பெற்றுவிடும் என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல.

ஆனால் வக்ஃப் சொத்துகளின் மொத்த மதிப்புக் குறித்த கணக்கு விபரம் கூட இல்லாத அவலநிலை தொடர்கின்றது. வக்ஃப் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் ; அதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம்கள் தொடர்ந்து முன்வைத்த போதும் அக்கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வக்ஃப் வாரிய நிர்வாகம் இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வக்ஃப் வாரியத்தை சீர் செய்வதற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கோபால் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்தின் ஆட்சியரும் நேரடியாக கவனத்தில் கொண்டு வஃக்ப் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக குறை தீர்க்கும் கூட்டங்கள் மாவட்ட வாரியாக  நடத்த வேண்டும் என்றும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வக்ஃப் சொத்துகளை பயன்படுத்தும் வகையில் வக்ஃப் வாரியத்தின் அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் வக்ஃப் வாரியத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு  தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 11: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்

தமிழகத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருவதுடன்  பல  போராட்டங்களையும் நடத்தியுள்ளது. மறைந்த தமிழகத்தின்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதாக தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார். ஆனாலும், இதுவரையிலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவது தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

சமூக நீதிக் கொள்கையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருக்கும் நிலையில், முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விவகாரத்தில் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தமிழகத்திற்கு முன்னோடியாக திகழ்கின்றன. ஆகவே முஸ்லிம்களுக்கு 7 சதவிகிதம்  இட ஓதுக்கீடு வழங்கிட வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 12: தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும், விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக போராடி வருகின்றனர். மத்திய பா.ஜ.க. அரசின் கார்ப்பரேட் நல கொள்கைகள் மூலம் கடுமையான பாதிப்புகளையும் நஷ்டங்களையும் அடைந்து வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நம்பி முதலில் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்ட விவசாயிகள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவுடன் மீண்டும் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தற்போது நடந்துவரும் போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் மத்திய அரசு முடக்க நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. போராடும் விவசாயிகளை இதுவரை சந்திப்பதற்கு கூட நேரம் ஒதுக்காமல் பிரதமர் மோடி செயல்பட்டு வருகின்றார். தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசாங்கம் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 13: லவ் ஜிஹாத் பொய் பிரசாரத்தை நிறுத்து

பொய் பிரச்சாரங்களை தனது அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்துவது சங்பரிவார்களின் வாடிக்கை. அந்த வகையில், சமீப ஆண்டுகளில் அரசியல் ரீதியாக சரியான பலனை வழங்கி வருவது லவ் ஜிஹாத் என்ற பொய் பிரச்சாரம். சில வருடங்களுக்கு முன், கேரளாவில் லவ் ஜிஹாத் இருப்பதாக பிரச்சாரம் செய்தவர்கள் அதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் சன்மானம் வழங்குவதாகவும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நாம் சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்கவே, பொய் பிரச்சாரத்திற்கான மன்னிப்பை கோரியது சங்பரிவார வட்டாரம். லவ் ஜிஹாத் என்பது கேரளத்தில் இல்லை என்று கேரள காவல்துறையும் நீதிமன்றத்தில் கூறியது.

பின்னர் இந்த பிரச்சாரத்தை வட மாநிலங்களுக்கு எடுத்துச் சென்றவர்கள் தற்போது அதனை மீண்டும் தென் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கு ஊடகங்களில் உள்ள சில சங்பரிவார ஆதரவாளர்களும் சில அரசு துறைகளும் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். ஒரு பொய்யை பலமுறை கூறினால் அதை உண்மையாக்கி விடலாம் என்ற கோயபல்சின் கொள்கையில் அதீத நம்பிக்கை கொண்ட இவர்கள் லவ் ஜிஹாத் விஷயத்தில் அதை பயன்படுத்தி வருகின்றனர். மக்களை பிரித்தாளும் சங்பரிவார்களின் முயற்சிகளில் ஒன்றான இதனையும் மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இல்லாத லவ் ஜிஹாத்தை பூதாகரமாக சித்தரித்து பல பெண்களின் வாழ்க்கையை பாழ்படுத்தி வரும் இந்துத்துவவாதிகளை இந்த மாநாடு வன்மையாக கண்டிப்பதுடன் இத்தகைய சமுதாய விரோத சக்திகள் மீது அரசாங்கங்கள், குறிப்பாக கேரளாவை ஆட்சி செய்யும் கம்யூனிச அரசாங்கம், உரிய நடவடிக்கைகளை எடுத்து பெண்களின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதுடன் தங்களின் மதச்சார்பற்ற மற்றும் சமவுரிமை கோட்பாடுகளை நிலைநாட்ட வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 14: கல்வி வளாகங்களை சங்பரிவார்களிடமிருந்து பாதுகாப்போம்

நாட்டின் பன்முக கலாசாரத்தை ஒழித்துவிட்டு ஒற்றை வண்ணத்தை அனைத்திற்கும் பூச விரும்பும் சங்பரிவார சக்திகள் நாட்டின் உயர்கல்வி வளாகங்களையும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஐஐடியில் உள்ள அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்திற்கான தடை, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தேசவிரோத குற்றச்சாட்டுகள், நீதிமன்ற வளாகத்திலேயே மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீதான தாக்குதல் என்று மாணவர் சமுதாயத்திற்கு எதிரான தாக்குதல்களையும் அத்துமீறல்களையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ABVP) மேற்கொண்டு வருகிறது.

மாணவர்களின் சிந்தனையை மழுங்கடித்து தாங்கள் விரும்பிய நோக்கில் மட்டும் மாணவர்களை இட்டுச் செல்லும் சங்பரிவார சக்திகளை மாணவர்கள் அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிப்பதுடன் கல்வி வளாகங்களில் இருந்தும் இவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாணவர் மன்ற தேர்தல்களில் ஏ.பி.வி.பி. அமைப்யை தோல்வியடையச் செய்த மாணவ சமூகத்திற்கு இம்மாநாடு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

Comments are closed.