பார்வையற்ற பாலஸ்தீன பெண் செய்தியாளர்

0

புதோர் ஹஸன் 26 வயது பெண்மணி. அன்றாட வாழ்வில் ஒரு சராசரி பெண்மணி சந்திக்கும் சவால்களை விட பலஸ்தீன பெண்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். அதிலும் கண் தெரியாத பத்திரிக்கை நிருபரான ஹஸனின் வாழ்க்கையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“சில நேரம் போராட்டங்களில் இஸ்ரேலிய காவல்துறை மக்களை தாக்கத் தொண்டங்குவார்கள். கண்ணீர் புகைகளுக்கு நடுவில் மக்கள் “அவருக்கு கண் தெரியாது, அவருக்கு கண் தெரியாது என்று என்னை பாதுகாக்க சப்தமிடுவர்கள்” இவை புதோர் ஹஸன் கூறியவை.

பார்வையற்றவாரானாலும் தன்னம்பிக்கையில் பிறருக்கு சற்றும் சளைக்காதவர். தன்னை பிறர் பாதுகாப்பது பற்றி அவர் கூறுகையில் “அவர்கள் இவ்வாறு செய்வது ஏன் என்று எனக்கு புரிகிறது, ஆனால் உண்மையில் நான் அதனை விரும்பவில்லை” என்று கூறுகிறார்.

பல ஊடக நிறுவனங்களுக்கு செய்தி அளிக்கும் பாலஸ்தீன நிருபராக பணியாற்றிவரும் ஹஸனுக்கு போராட்டங்களை பற்றி செய்தி எடுப்பது அவரது குணாதிசயங்களில் ஒன்று போல் ஆகிவிட்டது.

ஊடகத்துறையில் முதன் முதலில் தனது 21 ஆம் வயதில் தனது பயணத்தை துவங்கினார். அமெரிக்க இணையதளம் ஒன்றிற்கு விளையாட்டுச் செய்திகள் பற்றி எழுதி வந்த வந்த அவர் பின்னாட்களில் பலஸ்தீனை நோக்கி தனது பேனா முனையை திருப்பினார்.

இது குறித்து அவர் கூறுகையில் “பாலஸ்தீனின் ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் வழி கண்டு பிடித்து செல்வது கண் பார்வை உடையவர்களுக்கே கடினமான ஒன்று ” என்று விளையாட்டாகச் சொல்லி சிரிக்கிறார் ஹஸன்.

ஆனால் பார்வற்ற ஊடகவியலாளராக இருப்பதில் உள்ள சிரமங்களையும் ஒப்புக்கொள்கிறார். “சில நேரம் போராட்டங்களை குறித்த செய்தி சேகரிப்பின் போது வழி தவறி சென்று விடுவதுண்டு, குறிப்பாக மேற்குக் கரையில் இது அதிகம். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் வழி கேட்டு செல்ல வேண்டும்.

தனது பணியில் தன் பார்வை குறைபாடினால் சில நுணுக்கங்களை செய்தி சேகரிப்பின் போது தவற விடுவதாக கூறும் அவர் “தன்னிடம் பேசுபவர்களின் உடல் மொழி, அவர்களின் கை அசைவுகள் ஆகியவற்றை கவனிக்க இயலாது” என்று கூறுகிறார்.

ஆனால் தான் அவர்களின் குரல் மற்றும் அந்த குரலில் உள்ள ஏற்ற இறக்கங்கள், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் ஆகியவற்றை வைத்து அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதாகவும், பார்வை உடையவர்கள் கூட இது போன்ற நுணுக்கங்களை தவற விட்டுவிடுவார்கள் என்று கூறுகிறார்.

தான் பணி செய்வது குறித்து பலர் எதிர்மறை கருத்துக்களை கூறுவதும் இப்படி பணி செய்வதற்கு பதில் பாதுகாப்பாக வீட்டில் இருக்கலாம் என்று கூறுவதும் புண்படுத்துவதாக இருந்தாலும் தான் இந்த பணியில் தொடர்வது மக்களின் பார்வையை மாற்றக்கூடும் என்று கூறியுள்ளார்.

ஆனால் தன் சக பணியாளர்களை விட தான் மிகவும் கடினமாக பணியாற்ற வேண்டியுள்ளது என்று கூறும் அவர், உடல் குறைபாடு உள்ளவராக நீங்கள் இருக்கும் தருணத்தில் நீங்கள் சரியாக பணியாற்றினால் மட்டும் போதாது. சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் என்று கூறுகிறார். அதே நேரம் நீங்கள் பார்வையற்ற அராபிய பெண்ணாக இருப்பீர்களானால் நீங்கள் நிரூபிக்கவேண்டது இன்னும் அதிகம். ஒரு மேற்கத்திய கண்பார்வையுள்ள ஆண் ஊடகவியலாளரை ஒப்பிடும் போது பிறருக்கு என் மேல் நம்பிக்கை வருவதற்கு சற்று தாமதம் ஆகிறது என்று கூறுகிறார்.
தனது வாழ்வில் எத்துனை சவால்களை தான் சந்தித்த போதிலும் தன வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கின்றார்.

உங்களுக்கு இரண்டு கண்களும் இரண்டு காதுகளும் இருக்கின்றது. எனக்கு நான்கு காதுகள் இருக்கின்றன என்று கூறுகிறார். இது இன்னும் சிறப்பு, நீங்கள் சரியாக கவனிக்காவிட்டால் எத்தனை தகவல்களை தவற விடுகிறீர்கள் என்று கூறுகிறார் புதோர் ஹஸன்.

அனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்.

Comments are closed.