பாலியல் குற்றச்சாட்டிலிருந்து நீதிபதி ரஞ்சன் கோகாய் விடுவிப்பு

0

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.  இந்த குற்றச்சாட்டை ரஞ்சன் கோகாய் மறுத்தார். இதுகுறித்து விசாரிக்க 2 பெண்கள் உள்பட 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டது.

இதனையடுத்து புகார் அளித்த பெண், விசாரணையில் இருந்து தானாக முன்வந்து விலகிக்கொண்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனக்கு ஏற்பட்டுள்ள தீவிரமான கவலைகள் மற்றும் தயக்கங்களின் காரணமாக இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

“எனது புகாரை உச்சநீதிமன்றத்தை சாராத குழுவொன்று விசாரிக்க வேண்டுமென்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், அதற்கு மாறாக உச்சநீதிமன்றத்தை சேர்ந்த மூன்று நீதிபதிகளின் கீழ் அமைக்கப்பட்ட குழு எனது புகாரை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த நீதிபதிகள் எனது துன்பங்களை புரிந்துகொண்டு எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் நீதியை பெற்றுக்கொடுப்பார்கள் என்று நம்பினேன்” என்று புகார் அளித்த பெண் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மூவர் குழவில் நீதிபதி எஸ்.ஏ.போட்க், நீதிபதி இந்து மல்கோத்ரா மற்றும் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். நேற்று மீண்டும் விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்த போது, தலைமை நீதிபதி கோகாய், அமர்வின் முன் ஆஜரானார்.

இந்த மொத்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதி கோகாய், ‘என் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகாரை முற்றிலும் மறுக்கிறேன். நான் பல முக்கிய வழக்குகளை விசாரிப்பதால் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்படுடள்ளேன். இந்த புகார்களுக்குப் பின்னர், நீதித் துறையை கவிழ்க்க ஒரு மிகப் பெரிய சக்தி இருக்க வேண்டும். நீதித் துறையின் சுதந்திரம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது’ என்று விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் அந்த குழுவின் விசாரணையில், ரஞ்சன் கோகாய் மீதான புகாருக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments are closed.