பாலியல் பலாத்கார குற்றவாளியை காப்பாற்றும் இந்துத்துவா!

0

-கஷ்மீர் பார்வை

ஜம்மு பகுதியின் கத்துவாவின் ஹிரா நகரை சேர்ந்த ஆசிஃபா பானு என்ற எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆசிஃபாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறப்பு காவல்துறை அதிகாரிக்கு ஆதரவாக இந்து ஏக்தா மன்ச் என்ற அமைப்பு நடத்திய பேரணி மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 10 அன்று காணாமல் போன ஆசிஃபா ஒரு வாரம் கழித்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரின் இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் ஜனவரி 17 அன்று ஆசிஃபாவின் சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டது. பகர்வால் என்ற நாடோடி சமூகத்தை சேர்ந்த ஆசிஃபா குதிரைகளை மேய்ச்சல் செய்து கொண்டிருந்த போது கடத்தப்பட்டார்.

இந்த சம்பவத்தில் ஹிரா நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு அதிகாரியான (ஸ்பெஷல் போலீஸ் ஆபிசர் & ஷிறிளி) தீபக் கஜூரியா பிப்ரவரி 9 அன்று கைது செய்யப்பட்டார். ஆசிஃபா காணாமல் போனதற்கான புகாரை அவர் குடும்பத்தினர் கொடுத்ததன் பின்னர் அப்பகுதியை சோதனையிட்ட காவல்துறை படையில் கஜூரியாவும் இடம் பெற்றிருந்தார். கால்நடை கொட்டகையில் ஆசிஃபாவை அடைத்து வைத்த ஒரு மைனர் சிறுவன் (18 வயதிற்கு குறைவானவர்), பாலியல் பலாத்கார முயற்சியை ஆசிஃபா தடுத்த போது அவரை கழுத்தை நெறித்து கொன்றதாக குற்றம் சாட்டி காவல்துறை அந்த சிறுவனை கைது செய்தது. தனது பெயரை வெளியே சொன்னால் சிறுவனின் பெற்றோர்களை கொலை செய்து விடுவதாக கஜூரியா மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு பின்னர் குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) மற்றொரு குற்றவாளியான சுரேந்தர் குமாரை கைது செய்தது. ஆசிஃபா உதவிக்காக குரல் எழுப்பக் கூடாது என்பதற்காக அவருக்கு போதை மருந்துகள் ஊட்டப்பட்டதை மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகள் தெரிவித்தன.

குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு ஆதரவாக இந்து ஏக்தா மன்ச்சின் உறுப்பினர்கள் கக்வால் முதல் ஹிரா நகர் வரை பிப்ரவரி 14 அன்று கண்டன ஊர்வலத்தை நடத்தி, கஜூரியாவை விடுவிக்கவில்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர். கஜூரியாவின் கைதை தொடர்ந்து தாங்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்வதாக ரசானா மற்றும் கூத்தாஹ் பகுதியின் நாடோடிகள் தெரிவித்துள்ளனர். ஹிரா நகர் காவல்நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசரை ஜனவரி 20 அன்று இடமாற்றம் செய்த மாநில அரசாங்கம், நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது. மூன்று தினங்கள் கழித்து வழக்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த காவல்துறை அதிகாரியை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள் அதிர்ச்சி அளிப்பதாக மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி பிப்ரவரி 16 அன்று தெரிவித்தார். ‘‘ஜம்முவில் உள்ள போராட்டக்காரர்கள் தேசிய கொடியை பயன்படுத்தியிருப்பது திகிலூட்டுகிறது. குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார், சட்டம் தனது கடமையை செய்யும்’’ என்று தனது டிவிட்டர் பதிவில் முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.

விளிம்பு நிலையில் உள்ளவர்கள் தேசியவாதத்தின் பெயரால் வகுப்புவாத செயல்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் மைனர் சிறுமியின் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலையை வகுப்புவாதமாக்கி அரசியலாக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது, நாகரீக செயல்பாட்டிற்கு முரணானது என்றும் ஜம்மு பகுதிக்கான தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் தேவேந்தர் ராணா பிப்ரவரி 17 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஒரு கிரிமினலை கிரிமினலாகத்தான் பார்க்க வேண்டும், குற்றத்தை குற்றமாக பார்க்க வேண்டும். கத்துவா சம்பவத்திற்கு வகுப்பு சாயம் பூச நினைப்பவர்கள் மதத்தின் அங்கீகாரம் இல்லாத மனித இனத்திற்கு எதிரான கொடுமையான குற்றத்தை புரிகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு மைனரை கடத்தி, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று ஜம்மு கஷ்மீர் பார் அசோசியேஷன் பிப்ரவரி 18 அன்று கூறியது. கிரிமினலுக்கு ஆதரவாக ஊர்வலத்தை நடத்தியதற்கு பதிலாக வழக்கின் விசாரணையை விரைவு நீதிமன்றத்தில் தினமும் நடத்தி விசாரணையை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஊர்வலத்தில் நடத்தியவர்கள் வைத்திருக்கலாம். ஆனால் இந்து ஏக்தா மன்ச் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக ஊர்வலத்தை நடத்தியது. அதில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் தலைவர்கள் வெட்கமின்றி கலந்து கொண்டனர் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பாலியல் பலாத்காரம் செய்த கொலையாளிக்கான ஆதரவை எந்த மதமும் அனுமதிக்காது. கிரிமினலுக்கு ஆதரவளித்தற்கு பதிலாக அவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அவர்கள் வீதிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் மற்றும் கஷ்மீரிகளுக்கு எதிரான கடும் வெறுப்பு, கிரிமினலுக்கு ஆதரவாக இந்தியா கொடியுடன் வீதிக்கு வரும் அளவிற்கு மனசாட்சி இல்லாத இவர்களின்  கண்களையும் உள்ளத்தையும் மறைத்து விட்டது என்று இரு ஹூரியத் அமைப்புகளின் தலைவர்களான செய்யது அலி ஷா ஜீலானி, மிர்வேஸ் உமர் ஃபாரூக் மற்றும் ஜம்மு கஷ்மீர் லிபரேஷன் ஃப்ரண்டின் தலைவர் யாசின் மாலிக் ஆகியோர் அடங்கிய கூட்டுத் தலைமை பிப்ரவரி 17 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஜம்மு முஸ்லிம்களை குற்றம்சாட்டும் போக்கை நிறுத்தவில்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இந்தியாவின் மூவர்ண கொடியுடன் முழு காவல்துறை பாதுகாப்புடன் அப்பாவி ஆசிஃபாவை பாலியல் பலாத்காரம் செய்த கொலையாளிக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஊர்வலம் மனிதத் தன்மை மற்றும் நெறிமுறைகளை ஆளும் அரசாங்கம் இழந்துவிட்டதை காட்டுகின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கஜூரியாவை விடுதலை செய்யக் கோரி இந்து ஏக்தா மன்ச் மற்றும் பா.ஜ.க. இணைந்து நடத்திய ஊர்வலம் அப்பட்டமான வகுப்புவாத அரசியலை முன்னுக்கு கொண்டு வந்துள்ளதாக பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்டிஸ் பிப்ரவரி 18 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர். பகர்வால் நாடோடி இனத்தின் ஆசிஃபா கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி ஒரு வாரம் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் இருந்தது. ஜனவரி 17 அன்று அவளின் சிதைக்கப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஜனவரி 10 அன்று காணாமல் போன ஆசிஃபாவை அவளின் குடும்பத்தினர் தேடி புகார் அளித்த போதும் 48 மணிநேரத்திற்கு எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்பதையும் காவல்துறை புகாரை கண்டுகொள்ளாமல் இருந்தது என்பதையும் பிந்தைய நிகழ்வுகள் காட்டுகின்றன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

தேடுதல்  நடவடிக்கைகளை தாமதப்படுத்தியதுடன் அவளின் சடலத்தையும் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. ரஸானா வனப்பகுதியில் இருந்து அவளின் சடலத்தை உள்ளூர் மக்கள்தான் கண்டெடுத்தனர். இதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்தான் காவல்துறை ஒரு மைனர் சிறுவனை கைது செய்தது. ஒரு வாரத்திற்கு இந்த பெண்ணை கடத்தி வைத்திருந்தார்கள் என்ற காவல்துறையின் கூற்று நம்பும்படியாக இல்லை. காவல்துறை உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவது தெளிவாக தெரிகிறது என்றும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியது.

உடல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்கள், குறிப்பாக சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட போராட்டங்கள், அழுத்தங்களை தொடர்ந்து ஹிரா நகர் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, சிறப்பு புலனாய்வு குழு மற்றும் குற்றப்பிரிவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 9 அன்று கஜூரியா கைது செய்யப்பட்டார். ஆசிஃபாவை தேடும் படையிலும் அவளின் சடலத்தை குடும்பத்திடம் ஒப்படைத்த குழுவிலும் கஜூரியா இடம்பெற்றிருந்தார்.

பிப்ரவரி 16 அன்று மற்றொரு காவல்துறை அதிகாரி ஷிறிளி சுரேந்தர் குமாரை குற்றப்பிரிவு கைது செய்தது. இந்த வழக்கில் இனியும் கைதுகள் நடைபெறலாம் என்றாலும் தற்போதைய காவல்துறை அதிகாரிகளின் கைதுகள், அவர்கள் உள்ளூர்வாசிகள் என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன. பகர்வாலாகள் முஸ்லிம் நாடோடிகள் என்பதால் கஜூரியாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்கள் இதனை உள்ளூர் வாசிகளுக்கும் வெளியூர்வாசிகளுக்குமான பிரச்சனையாக மாற்ற முனைகின்றனர். இந்த பாலியல் பலாத்காரமும் படுகொலையும் நன்றாக திட்டமிடப்பட்டவை என்பதையும் பகர்வால் சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டது என்பதையும் குற்றப்பிரிவின் விசாரணை உறுதிப்படுத்துகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கஜூரியா போராட்டத்தில் ஈடுபட்ட பகர்வாலாகளை மிரட்டி அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளார் என்றும் அந்த அறிக்கை சுட்டுகிறது.

1995ல் இருந்து தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்காக 29000ற்கும் அதிகமான எஸ்.பி.ஓ.கள் (ஸ்பெஷல் போலீஸ் ஆபிசர்) பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எஸ்.பி.ஓ.களை உருவாக்குவது உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தினாலும் சட்டம் ஒழுங்கின் பெயரில் மக்களுக்கு ஆயுதத்தை வழங்கும் அரசாங்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை சட்டீஸ்கரின் வரலாறும் அனுபவமும் நமக்கு உணர்த்துகிறது. தற்போதைய சூழலில் இந்துக்களுடன் கைகோர்க்கும் எஸ்.பி.ஓ.களின் கைகளில் பகர்வாலாகள் எதிர்ப்புகளை சந்திக்கின்றனர். தண்ணீருக்கான அவர்களின் உரிமையும் மறுக்கப்படுகிறது. நில மற்றும் வன உரிமைகளை வகுப்புவாதமயமாக்குவதுடன் ஆசிஃபாவின் பாலியல் பலாத்காரமும் படுகொலையும் ஆழமாக தொடர்புடையது. இந்துக்கள் அதிகமாக வாழும் கத்துவா பகுதியில் ஏறத்தாழ 90 சதவிகித நிலம் இந்துக்களின் வசம் உள்ளது.

சமீப ஆண்டுகளில் வகுப்புவாத பிரச்சாரத்தின் காரணமாக, இந்துகள் தங்களின் விளைச்சல்களை பகர்வாலாகளுக்கு கொடுப்பதை நிறுத்தியுள்ளனர். நிலங்கள் வாங்குவதையும் அவர்கள் தடுக்கின்றனர். அருகில் உள்ள கூத்தா கிராமத்தில் பகர்வாலாகள் நிலங்களை வாங்கிய போதும் மத மற்றும் உடல் அடக்கங்களை அங்கு நடத்த முடியாது என்று கூறி ஆசிஃபாவின் உடலை அங்கு அடக்கம் செய்வதை தடுத்தனர். இந்த வகுப்புவாத நகர்வுகள் வன சட்டம் 2006யை நடைமுறைபடுத்துவதற்கு பா.ஜ.க. காட்டி வரும் சமீபத்திய எதிர்ப்புடன் இணைந்து செல்கின்றன. பழங்குடியின மக்களுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளது என்று கூறி முதன்முறையாக ஒரு மத்திய அரசின் சட்டத்தை பா.ஜ.க. எதிர்த்துள்ளது! பொருளாதார, சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள பகர்வால் போன்ற முஸ்லிம் பழங்குடியினரின் வன உரிமைகளை அங்கீகரிக்க பா.ஜ.க. தயாரில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

1991ல் பகர்வாலாகளுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்ட போதும் அரசியல் அங்கீகாரம் இல்லாததால் அவர்களின் அரசியல் உரிமை மறுக்கப்படுகின்றது. கஜூரியாவுக்கு ஆதரவாக தேசிய கொடியுடன் ஊர்வலம் நடத்துவதற்கு இந்து ஏக்தா மன்ச்சிற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு எதிராக உள்ளூர் மக்களும் மாணவர்களும் ஜனவரி 21 அன்று நடத்திய போராட்டத்தில் தாலிப் ஹூஸைன் என்ற மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை இறுதியாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே இந்து ஏக்தா மன்ச் நடத்திய போராட்டத்தை விட்டும் பா.ஜ.க. தன்னை தூரமாக்கியுள்ளது. இது ஒரு கடுமையான குற்றம். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்களும் விரும்புகிறோம் என்று கூறிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் (அமைப்பு) அசோக் கவுல், வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் கேட்பதாக கவுல் கூறியுள்ளார். பிப்ரவரி 19 முதல் ஒரு மாத காலத்திற்கு ஹிராநகர் சப் டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆசிஃபாவிற்கு நீதி கோரி பல்வேறு செயல்பாட்டாளர்கள் ஜனவரி 24 அன்று பிரஸ் என்கிளைவில் போராட்டம் நடத்தினர். ஜம்மு கஷ்மீர் ஆர்டிஐ மூவ்மண்ட், சிவில் சொசைட்டி ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட், குஜ்ஜார்&-பகர்வால் பவுண்டேஷன், குஜ்ஜார்&பகர்வால் யூத் கான்ஃபரன்ஸ் ஆகியோர் இந்த போராட்டத்தை இணைந்து நடத்தினர். கத்துவா விவகாரத்தில் சிவில் சமூகம் வெளிப்படுத்தும் இனவாத அணுகுமுறை அவர்களின் பக்கசார்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது என்று ஜம்மு கஷ்மீர் ஆர்டிஐ மூவ்மெண்ட் தலைவர் டாக்டர் ஷேக் குலாம் ரசூல் கூறினார்.

(கஷ்மீர் பத்திரிகையாளர் அஃப்ஸானா ரஷீத் புதிய விடியலுக்காக எழுதியுள்ள பிரத்யேக கட்டுரை)

தமிழில்: ரியாஸ்

 

Comments are closed.