பாஸ்போர்ட்டில் இந்தியை திணிக்கும் மத்திய அரசு

0

பாஸ்போர்ட் சட்டத்தின் 50 ஆவது வருட நினனைவு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை சுஷ்மா ஸ்வராஜ், இந்திய பாஸ்போர்ட்கள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்படும் என்றும் நாசிக்கில் உள்ள அச்சகத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பிற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் வழக்கம் போல அரபு நாடுகளை அழைத்துக்கொண்ட சுஷ்மா, எல்லா அரபு நாடுகளில் பாஸ்போர்ட்கள் அரபு மொழியில் தான் இருகின்றது என்று கூறியுள்ளார். மேலும் ரஷ்ஷியா மற்றும் ஜெர்மெனி நாடுகளில் பாஸ்போர்ட்கள் அவர்களின் மொழியில் தான் இருக்கின்றது என்றும் அதனால் இந்தியாவின் பாஸ்போர்ட்கள் ஏன் இந்தியில் இருக்கக் கூடாது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாலையோர மைல்கற்களில் தொடங்கி, ரயில்வே வரை அனைத்திலும் இந்தியை திணிக்க முயற்சிக்கும் இந்திய அரசுக்கு பொதுமக்கள் பல முறை தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்துள்ளனர். தமிழக சாலையோர மைல்கற்களில் மத்திய அரசு இந்தியை முதன்மைப்படுத்தியத்தை அடுத்து அதனை கருப்பு நிற மை கொண்டு பல இடங்களில் பொதுமக்கள் அழித்தனர்.

தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய பெயர் பலகைகளில் இந்தியும் உள்ளது அம்மாநில மக்களின் கோபத்திற்கு உள்ளானது. இதனையடுத்து #nammametrohindibeda என்கிற ஹாச்டாகில் கர்நாடக மக்கள் தங்களது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். சிலர் தமிழக மெட்ரோவை ஒப்பிட்டு தமிழக மெட்ரோவில் இந்தி இல்லாதது போல் கர்நாடகாவிலும் இந்தியை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கர்நாடக வளர்ச்சி ஆணையம் Bangalore Metro Rail Corporation (BMRCL) இடம் இது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு கூறியுள்ளது.

மேலும் நம்ம மெட்ரோ கர்நாடக மாநிலத்தின் திட்டம் என்றும் அதன் பெயர் பதாகைகளில் இந்தி சேர்க்கப்பட்டது தேவையில்லாதது என்றும் மேலும் இது மாநில அரசின் 2008 ஆம் ஆண்டு அறிவிப்பு மற்றும் (1982, 1993 ஆம் ஆண்டு) ஆகிய இரண்டு சுற்றறிக்கைகளை மீறியுள்ளது என்றும் இந்த ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் SG.சித்தாராமையா கடிதம் மூலம் BMRCL க்கு தெரிவித்துள்ளார்.

பல்வேறு காலச்சாரங்களையும் தொன்மையான மொழிகளையும் கொண்ட நாட்டில் அதன் சிறப்புகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளாமல் அனைத்து மக்களின் மீதும் தங்களின் கலாச்சாரத்தை திணிக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Comments are closed.