பா.ஜ.க.வின் புதிய கூட்டணி!

0

பா.ஜ.க.வின் புதிய கூட்டணி!

‘பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்வதாக வெளியாகியுள்ள செய்திகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. அக்கட்சிக்கு தாங்கள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது’ நகைச்சுவையாக இப்படி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் தேர்தலை நடத்தக் கூடிய ஒரு ஆணையத்தின் நிலை இந்த அளவிற்கு மோசமாகி விட்டதே என்ற அச்சமும் கவலையும் தான் இச்செய்தியை வாசிக்கும்போது ஏற்படுகிறதே அல்லாமல் ஒரு நகைச்சுவை துணுக்காக இதனை கடந்து செல்ல முடியவில்லை.

ஐந்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக நிறுவனங்களையும் முற்றிலுமாக சிதைத்து விட்டது. இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் உருவாக்கி கட்டிக்காத்த நிறுவனங்களை ஐந்து வருடங்களில் அரசாங்கத்தின் கைக்கூலியாக மாற்றிய பெருமை மோடியின் அரசாங்கத்தையே சாரும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தில் தொடங்கி வாக்கு எண்ணிக்கைக்கான நாள் நெருங்கும் வரை தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் குறித்து தினமும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ‘பிரதமர் மோடி புதிய திட்டங்களை குறித்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பை பிற்படுத்தியது’ என்பதுடன் இந்த குற்றச்சாட்டுகளின் படலம் தொடங்கியது.

நாடாளுமன்றத்திற்கு ஏழு கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் குற்றச்சாட்டுகள் இன்னும் அதிகரித்தன. கஷ்மீர் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தயாரான தேர்தல் ஆணையம் அம்மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த தயாராகவில்லை. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை தேர்தல் ஆணையம் காரணமாக கூறிய போதும் நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதலாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து சட்டமன்ற தேர்தலை நடத்துவதில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்கவில்லை.

ஏறத்தாழ ஒரு வருடம் மாநில அரசு இல்லாமல் இருக்கும் ஜம்மு கஷ்மீரில் தற்போது தேர்தலை நடத்தினால் பா.ஜ.க. மோசமான தோல்வியை சந்திக்கும் என்ற காரணத்தினால்தான் தேர்தல் ஆணையம் அங்கு சட்டமன்ற தேர்தலை நடத்தவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மக்கள் ஜனநாயக கட்சியுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க. தனது சுயநலனிற்காக ஆதரவை திரும்பப் பெற்று ஆட்சியை கவிழ்த்தது கவனிக்கத்தக்கது. (மேலும் விபரங்களுக்கு புதிய விடியல் ஜூலை 1&15, 2018 இதழை காணவும்).

தமிழகத்திலும் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.விற்கு சாதகமாக இல்லை என்ற காரணத்தினால் பல மாதங்களாக காலியாக இருந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்தாமல் தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தியதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பெரும்பான்மை மக்களும் பா.ஜ.க. தவிர்த்த பெரும்பான்மை அரசியல் கட்சிகளும் பலமுறை தங்களின் சந்தேகத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்திய போதும் ‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை’ என்ற பல்லவியை மட்டும் தேர்தல் ஆணையம் மீண்டும் மீண்டும் பாடி வருகிறது. பழுதான இயந்திரங்களில் பா.ஜ.க.விற்கு மட்டும் எவ்வாறு வாக்குகள் பதிவாகின்றன என்ற விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் இதுவரை அளிக்கவில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு முறை இந்த நாடாளுமன்ற தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் வைத்துள்ளது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.