பா.ஜ.க.வின் மக்கள் விரோதப்போக்கை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.: பாப்புலர் ஃப்ரண்ட்

0

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்குகளை மக்கள் மன்றத்தில் வைப்பதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் நிகழ்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மதுரை மற்றும் சென்னையில் உரிமை முழக்க மாநாடுகளை நடத்துகிறது.

அக்டோபர் 7 சனிக்கிழமை அன்று மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரி எதிரில் உள்ள மருதநாயகம் திடலில் ‘நாங்கள் சொல்வது என்ன?’ என்ற தலைப்பில் பெருந்திரள் மாநாடு நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் ஏ. காலித் முஹமது வரவேற்புரை நிகழ்த்தினார்.

“பா.ஜ.க.வின் கொள்கைகளை நேர் கோட்டில் நின்று எதிர் கொள்ளும் பாப்புலர் ஃப்ரண்ட், ஆட்சிக்கு வந்த பிறகான அவர்களின் வெறுப்பு பேச்சுகளையும் வன்முறைகளையும் மக்களிடம் அடையாளப்படுத்தி வருகிறது.2015இல் நடத்தப்பட்ட ‘உண்பது எனது உரிமை, பேசுவது எனது உரிமை’ பிரசாரம், 2016இல் நடத்தப்பட்ட ‘வெறுப்பு அரசியலை நிறுத்து’ பிரச்சாரம் ஆகியவை இதற்கான சில உதாரணங்களாகும். இதனால் பாப்புலர் ஃப்ரண்டை முடக்குவதற்கான வேலைகளில் பா.ஜ.க. அரசு இறங்கி உள்ளது. இவர்கள் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பொய் என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் பல முறை நிரூபித்துள்ளது” என்று முஹம்மது இஸ்மாயில் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொது செயலாளர் எம். முஹம்மது அலி ஜின்னா, எஸ்.டி.பி.ஐ.கட்சி தேசிய தலைவர் ஏ. சயீத், கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான உ.தனியரசு, பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார், தேசிய மனித உரிமை கூட்டமைப்பு தேசிய தலைவர் பேரா.அ.மார்க்ஸ், சி.பி.ஐ.நிர்வாக குழு உறுப்பினரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினருமான குணசேகரன்,  தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், நேஷனல் விமென்ஸ் ஃப்ரண்ட் தேசிய துணை தலைவர் பாத்திமா ஆலிமா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொது செயலாளர் சம்சுல் இக்பால் தாவூதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

“அனைத்து துறைகளிலும் முழுமையான தோல்வியை தழுவியுள்ள மத்திய அரசாங்கம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகிறது. மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை வலுவாக எதிர்த்து வரும் பாப்புலர் ஃப்ரண்டை லவ் ஜிஹாத், தீவிரவாத தொடர்பு என்று போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி தடை செய்ய மத்திய பா.ஜ.க. அரசு மும்முரமாக உள்ளது. இதற்காக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மற்றும் சில ஊடகங்களை கருவியாக பயன்படுத்தி வருகிறது. இத்தகைய தடைகளை எதிர்கொள்ளும் வல்லமை பாப்புலர் ஃப்ரண்டிற்கு இருக்கிறது என்றும், மத்திய அரசின் தவறான கொள்கைகளை தொடர்ந்து மக்கள் மன்றத்தில் முன் வைக்கும்” என்று பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொது செயலாளர் முஹம்மது அலி ஜின்னா தனது உரையில் குறிப்பிட்டார்.

மாநில செயலாளர் அஹமது நவவி நன்றியுரை நிகழ்தினார். பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் திரளாக கலந்து கொண்டு பாப்புலர் ஃப்ரண்டுடன் நாங்கள் கைகோர்த்துள்ளோம் என்பதை பறைசாற்றினர்.

மாநில அரசாங்கங்களின் உரிமைகளில் கைவைத்து, உருவாக்கப்பட்ட நோக்கத்தில் இருந்து திசைமாறி மத்திய அரசின் ஏவல் படையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும், மதுரை போலி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும், பாசிசத்திற்கு எதிரான கூட்டமைப்புகள் வலுப்பெற வேண்டும், மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.