பா.ஜ.க.வின் ரஃபேல் ஊழல் அம்பலம்!

0

பா.ஜ.க.வின் ரஃபேல் ஊழல் அம்பலம்!

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ரஃபேல் போர் விமான பேர மோசடி அம்பலம் ஆகியுள்ளது. பா.ஜ.க.வின் இந்த புதிய ஒப்பந்தம் காரணமாக, பல்லாயிரம் கோடி நஷ்டத்துடன், உயர் ரக தொழில்நுட்பத்தையும் இழந்துவிட்டது இந்தியா. நாட்டின் பொது நிதிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இந்திய வான்வெளி ஆய்வு நிறுவனமான HINDUSTAN AURINAUTICS LTD(HAL) எனும் பொது நிறுவனத்திற்கு வர வேண்டிய ஒப்பந்தத்தை, அனில் அம்பானிக்குச் சொந்தமான RELIANCE DEFENCE LIMITED (RDL) தனியார் நிறுவனத்திற்கு  தாரைவார்த்துவிட்டது கார்ப்பரேட் நல பா.ஜ.க. அரசு.

28 மார்ச் 2015 இல் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான ரிலையன்ஸ் டிபன்ஸ் லிமிடட் க்கு இரண்டே வாரங்களில், அதாவது ஏப்ரல்,11, 2015 இல் 58,000 கோடி மதிப்புள்ள இவ்வளவு பெரிய ஒப்பந்தம் கிடைத்தது எப்படி? கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின் இறுதியில், மார்ச் 2014 இல், இந்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட் உடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் அம்பானிக்கு கைமாறியது எப்படி?

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்

2007ல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது, இந்திய விமானப்படையின் தேவைக்காக கூடுதலாக 126 இரட்டை எஞ்சின் கொண்ட நடுத்தர போர்விமானங்கள் வாங்க ஒப்பந்த புள்ளி (டெண்டர்) கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனங்கள் டெண்டர் அளித்தன.

பல்வேறு நிறுவனங்களின் விமானங்களை இந்திய விமானப்படை சோதித்து பார்த்தது.

இறுதியாக, யூரோ பைட்டர் மற்றும் டஸால்ட் ரஃபேல் ஆகிய இரு நிறுவனங்கள் எஞ்சின.

ஐந்து ஆண்டுகளுக்கான பராமரிப்பு செலவுகளையும் உட்படுத்திப் பார்த்த போது ரஃபேல் ரக விமானங்கள் மற்ற நெருங்கிய போட்டி ரகத்தை விட சுமார் ஐந்து மில்லியன் டாலர் விலைக் குறைவாக இருந்தது. இதனால், சிறந்த விலை நிர்ணயத்தின் அடிப்படையில் பிரான்ஸ் நாட்டின்  டஸால்ட்  ரஃபேல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அத்துடன், டஸால்ட் நிறுவனம் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதால், இந்த வகை விமானங்களில் அணு ஆயுதங்களை இணைப்பது எளிது என்றும் கருதப்பட்டது. அதுமட்டுமல்ல ஏற்கெனவே கார்கில் யுத்தத்தின் போது பிரான்ஸ் மற்றும் டஸால்ட் விமான நிறுவனம் இந்திய அரசிற்கு வழங்கிய ஒத்துழைப்பு இந்திய அரசிற்கு மிகவும் திருப்தி அளிப்பதாக இருந்ததும் இந்த ஒப்பந்தத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து  என்று சொல்லலாம்.

சுமார் இரண்டாண்டு கால விலை பேரம் மற்றும் நிபந்தனைகள் குறித்த கலந்தாலோசனைக்கு பிறகு 2012 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய அரசுக்கும் டஸால்ட் ரஃபேல் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் இறுதியானது.

இந்த ஒப்பந்தத்தின் படி, அந்நிறுவனம் தங்களின் விமானங்களை 10.2 பில்லியன் டாலர் அடிப்படை விலைக்கு விற்க ஒப்பந்தம் செய்து கொண்டது (அன்றைய டாலர் மதிப்பின் படி 54000 கோடி). மேலும் மொத்தம் உள்ள 126 விமானங்களில், 18 ஐ மட்டும் இந்தியா நேரடியாக அந்நிறுவனத்திடம் இருந்து முழுமையாக ‘பறக்கும் நிலையில்’ இறக்குமதி செய்வது என்றும், மீதமுள்ள 108 விமானங்களை இந்திய அரசிற்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (HAL)  இல் தயாரிப்பது என்றும், இதற்காக தங்களிடமுள்ள தொழில்நுட்பத்தை ரஃபேல் நிறுவனம் (HAL)  உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

(HAL)  உடன் தங்கள் தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ள டஸால்ட் நிறுவனத்திற்கு  தயக்கம் இருந்ததால் இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் நிலவியது என்றும் ஆனால் டாக்டர் மன்மோகன் சிங்கின் திறமையான பேச்சுவார்த்தையால் இந்த ஒப்பந்தம் நிறைவேறியது என்றும் அப்போது பலரும்  பாராட்டியது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் இது என்று கூறலாம்.

மோடி அரசின் கண்கட்டி வித்தை

பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த ஓராண்டில் தன்னுடைய முதல் பிரான்ஸ் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, 36 ரஃபேல் விமானங்களை முழுமையாக ‘பறக்கும் நிலையில்’ இந்தியா வாங்குவதாக திடீரென அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பின் போது  அப்போதைய இராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் உடன்  இருக்கவில்லை. ஆனால், மோடியின் இந்தப்  பயணத்தின் போது ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானியும்  உடன் சென்று டஸால்ட் நிறுவனத்துடன் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கார்ப்பரேட் நலனுக்காக செயல்படுகிறதா பா.ஜ.க. அரசு? அதிகமான ரஃபேல் விமானங்களை முழுமையாக வாங்குவதன் மூலம் முந்தைய ஒப்பந்தத்தை கைவிடுகிறதா மோடி அரசு? போன்ற பல்வேறு கேள்விகள் அப்போது வெளிப்படையாக எழுந்தன. ஆனால் இந்த அரசு எந்த கேள்விக்கும் பதில் தராமல் இந்த விவகாரத்தில் முழுமையாக மவுனம் சாதித்தது.

இந்த புதிய ஒப்பந்தம் குறித்து மோடியின் பயணத்தின் சில நாட்கள் முன்புதான் இராணுவ அமைச்சருக்கே தகவல் வழங்கப்பட்டது என்றும் இதைத் தொடர்ந்து நாட்டில் எழுந்த சர்ச்சைகளை எதிர்கொள்ள பரிக்கர் தனித்து விடப்பட்டார் என்றும் பாதுகாப்புத்துறை வல்லுனர் அஜய் சுக்லா அப்போது எழுதியிருந்தார்.126 போர் விமானங்கள் வாங்குவது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது என்றும் அது தேவையில்லை என்றும் ஏதேதோ கூறி சமாளித்து பார்த்தார் பரிக்கர். ஆனால், இந்திய விமானப்படை பயன்படுத்திவரும் MIG -21  மற்றும் MIG -27விமானங்கள் அவற்றின் சேவைக்கால முடிவை எட்டுவதால் சுமார் 200 முதல் 300 வரையிலான போர் விமானங்களின்  தேவை இருக்கிறது என்று சுக்லா சுட்டிக் காட்டினார். 126 போர் விமானங்கள் தேவையில்லை என்ற  பரிக்கரின் வாதத்தை, ஓய்வு பெற்ற விமானப்படை மார்ஷல்கள் மேஜர் பலி ஹோமி, மேஜர் பிரதீப் நாயக் மற்றும் பல்வேறு பாதுகாப்புத் துறை வல்லுனர்களும், ஏற்றுக்கொள்ளவே முடியாதது, அறிவுக்கு ஒவ்வாதது என்றும் கடுமையாக விமர்சித்தனர். பரிக்கரின் வெற்று வார்த்தைகள் எல்லாம் காலப்போக்கில் காற்றில் கரைந்தன. ஜூலை 2015ல் டஸால்ட் நிறுவனத்துடனான முந்தைய  ஒப்பந்தம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மோடி அரசு அதே நிறுவனத்துடன் செப்டம்பர் 26, 2016 அன்று புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இதில் 36 ரஃபேல் போர் விமானங்களை 58,000 கோடிக்கு முழுமையாக வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த 36 விமானங்கள் போக கூடுதலாக விமானங்கள் ஏதும் வாங்குவதில்லை என்றும் அரசு முடிவு செய்துவிட்டது. ஆனால் முந்தய ஒப்பந்தத்தின் படி இதைவிட குறைந்த செலவில்  (54000 கோடி) 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் ஆகியிருந்தது. முக்கியமாக, இந்த புதிய ஒப்பந்தத்தின் படி HAL நிறுவனத்திற்கு டஸால்ட் நிறுவனம் பகிர்ந்து கொள்வதாக இருந்த தொழில்நுட்பமும் வழங்கப்படாது.

இதனால் இந்தியாவிற்கு கிடைக்கவிருந்த தொழில் நுட்பமும், பொது நிறுவனமான HAL க்கு கிடைக்கவிருந்த முன்னேற்றமும் இல்லாமல் போனது. இந்திய அரசுக்கு சொந்தமான பிகிலி நிறுவனத்திற்கு வரவேண்டிய இந்த விமான தயாரிப்பு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் டிபன்ஸ் லிமிடட் (RDL) நிறுவனம் பறித்துக் கொண்டது.

இந்திய அரசு 36 விமானங்கள் வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் டஸால்ட் நிறுவனத்துடன் ஈடுபட்டிருந்த அதேசமயத்தில் தான் அனில் அம்பானியின்  RDL) நிறுவனமும் டஸால்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரே வாரத்தில் அக்டோபர் 3, 2016 இல் இந்த கூட்டு தயாரிப்பு ஒப்பந்தத்தை வசப்படுத்தியது. பிப்ரவரி 16, 2017 இந்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு கையெழுத்தானது. போர் விமானங்களை இந்தியா பெறுவதற்கு குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளாவது ஆகும் என்று சுக்லா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. அரசு செய்து கொண்ட இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு பெரும் இழப்பு என்பதை பாதுகாப்பு வல்லுனர்கள் பலரும் ஒத்துக் கொள்கின்றனர். அதிக விலை கொடுத்து விமானங்கள் வாங்கவேண்டி உள்ளதோடு நமது நாட்டுக்கு கிடைக்கவிருந்த தொழில்நுட்ப வரவையும் , பொது நிறுவனமான HAL  க்கு கிடைக்க வேண்டிய முன்னேற்றத்தையும் இழந்துள்ளோம் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். புதிய ஒப்பந்தத்தின் படி ரஃபேல் விமானம் ஒன்றுக்கு 1600 கோடி என்ற விலையில் வாங்கப்படுகிறது. புதிய ஒப்பந்தத்தின் படி விமானத்தில் சில கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும் கூட இது மிகவும் அதிக விலைதான் என்று பாதுகாப்பு வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு விமானத்திற்கு காங்கிரஸ் பேசிய விலை 526.1 கோடி ரூபாய். தற்போது ஒரு விமானத்திற்கு பா.ஜ.க. பேசியுள்ள விலை 1570.8 கோடி ரூபாய்.

ஊழல்களில் திளைத்துக் கொண்டே ‘‘எங்கள் ஆட்சியில் ஊழல் நடந்திருக்கிறதா-?’’ என்று கேள்வி கேட்பது பா.ஜ.க.வின் வழக்கம். ரஃபேல் ஒப்பந்தத்தின் மூலம் பொது நிதிக்கு பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள பா.ஜ.க. மக்களுக்கு என்ன பதில் கூறப்போகிறது?

இந்த குற்றச்சாட்டுகளுக்கு தற்போதைய இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, பா.ஜ.க. கட்சியோ எவ்வித ஆக்கப்பூர்வமான பதிலையும் இதுவரை தரவில்லை. வழக்கமான வார்த்தை ஜாலங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

’மேக் இன் இந்தியா’ திட்டத்தை கொண்டுவந்துவிட்டோம் என்று மணிக்கொருமுறை மார்தட்டிக் கொள்ளும் மோடி அரசு, பொதுத்துறை நிறுவனமான பிகிலி க்கு கிடைக்க வேண்டிய தயாரிப்பு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்தியது ஏன்? எதிர்காலத்தில் நாம் சொந்தமாக போர்விமானம் தயாரிக்க வழிவகுக்கும் முந்தைய ஒப்பந்தத்தை கைவிட்டது ஏன்? மிகவும் இலாபகரமான முந்தைய ஒப்பந்தத்தை அவசர அவசரமாக ரத்து செய்துவிட்டு ஆயிரக் கணக்கான கோடிகள் நிதியிழப்புடன் புதிய ஒப்பந்தத்தை செய்து கொண்டது ஏன்?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஆளும் மோடி அரசால் பதிலளிக்க முடியுமா?

-முஹம்மது ரமீம்

இது புதிய விடியல் புத்தகத்தில் 2017 டிசம்பர் 1-15 இதழில் வெளிவந்தது.

Comments are closed.