பிஜ்நோரில் கலவரத்தை தூண்டும் முன்னணி நாளிதழ்கள்

0

உத்திர பிரதேசத்தில் முஸ்லிம் பெண் ஒருவரை ஜாட் இன இளைஞர்கள் ஆபாச வார்த்தைகளால் கிண்டல் செய்ததை அப்பெண்ணின் குடும்பத்தினர் தட்டிக் கேட்டனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் அப்பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். (பார்க்க செய்தி)

பிஜ்நோரில் ஏற்பட்ட இந்த வன்முறையைவிட மோசமானது அதனை தொடர்ந்து சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகள் தான்.

உத்திர பிரதேசத்தின் முன்னணி தினசரியான டைனிக் ஜாக்ரன் என்ற செய்தித்தாள் இந்த சம்பவத்தை திரித்து வெளியிட்டுள்ளது. இந்த செய்தித்தாள் வெளியிட்ட செய்தியின் படி, முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பள்ளிக்கு செல்லும் இந்துப் பெண்களை கேலி செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கடந்த வெள்ளிக் கிழமை காலை இது போன்று ஒரு இந்துப் பெண்ணை முஸ்லிம் இளைஞர்கள் கேலி செய்ததினால் ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி வெளியான பின்னர் தங்களின் தவறை அவர்கள் திருத்தி செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதே போன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றொரு தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி, நயகோன் கிராமத்தை சேர்ந்த சில பெண்களை பேடா கிராமத்து இளைஞர்கள் கேலி செய்ததாகவும் இதனை கேள்வியுற்ற அப்பெண்களின் கிராமத்தார் பெண்களை கேலி செய்த தாலிப் என்கிற இளைஞறை தாக்கியதாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இதனை அடுத்து தாலிப் தன் கிராமத்தில் இருந்து சிலறை அழைத்துச் சென்று நயகோன் கிராமத்து இளைஞர்களை தாக்கியதாகவும் அதன் பின்னரே நயகோன் கிராம மக்கள் துப்பாக்கி, கட்டைகள் போன்றவற்றை கொண்டு பேடா கிராமத்து மக்களை தாக்கியதாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மோதலில் இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்கள் நிறைந்த செய்தியாகும். பிஜ்நோர்  காவல்துறை கண்காணிப்பாளர் இந்த தாக்குதலுக்கு கரணம் இந்து இளைஞர்கள் முஸ்லிம் பெண்ணை கேலி செய்தது என்று கூறும் போது ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனம் தாலிப் என்ற கதாப்பாத்திரத்தினை புதிதாக தன செய்தியில் புகுத்தியுள்ளது.  அடுத்ததாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பேடா கிராமத்து முஸ்லிம்கள் மீது ஜாட் சமூகத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ஆனால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் இன்னும் ஜாட் இன மக்கள் நடத்தியது எதிர்தாக்குதல் தான் என்று கூறியுள்ளது.

நாளிதழ்களின் செய்தி இவ்வாறிருக்க hindupost.in என்ற இணையதளம் இந்த மொத்த நிகழ்வையும் திரித்து வெளியிட்டுள்ளது. தங்களது பக்கத்தில், இந்துப் பெண்களை முஸ்லிம்கள் கேலி செய்யததாகவும் தங்களின் இந்த செய்திக்கு முன்னதாக குறிப்பிட்ட டைனிக் ஜாக்ரன் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டியுள்ளது. மேலும் நஜிபாபாத் சாலையை மரித்த முஸ்லிம்கள் அங்கு செல்லும் இந்துக்களின் வாகனங்களை தீயிட்டு கொளுத்துவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. Hindupost.in இன் இந்த செய்தி பொய்யை பரப்புவதோடு வன்முறையை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.

இதே போன்று மற்றொரு செய்தி hinduexistence.org தளத்திலும் வெளிவந்துள்ளது. இந்த தளம் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுவதற்கு பெயர் போன இணையதளமாகும்.

இத்துடன் ட்விட்டரில் உள்ள வலது சாரி இந்துத்வ கும்பல்களும் முஸ்லிம்களுக்கு எதிரான போலியான செய்திகளை பரப்பியுள்ளனர். இவர்களின் இந்த ட்வீட்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதை வைத்து இது ஒரு திட்டமிட்ட செய்தி பரப்புறையோ என்று சந்தேகம் எழுகிறது. வலதுசாரிகளின் இந்த இணைய போராட்டம் இத்துடன் நின்றுவிடவில்லை. Mediavigil.com என்ற இந்தி செய்தி தளத்தை வலதுசாரி ஹாக்கர்கள் ஹாக் செய்துள்ளனர். இந்த தளம் டைனிக் ஜாக்ரன் வெளியிட்டுள்ள தவறான செய்தியை முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தது.

உத்திர பிரதேசத்தில் செய்தி நிறுவனங்கள் செய்திகளை திரித்துக் கூறுவது இது முதன் முறை அல்ல. ஒவ்வொரு முறை கலவரங்கள் நடத்தப்படும் போதும் இது போன்ற உணர்ச்சிகளை தூண்டக்கூடிய செய்திகளை இது போன்ற செய்தி நிறுவனங்களும் வலது சாரி குண்டர்களும் பரப்பி வந்துள்ளனர். 2013 முசப்பர்நகர் கலவரத்தின் பொது பா.ஜ.க எம்.எல்.ஏ. சங்கீத் சோம் போலியான ஒரு யுடியுப் வீடியோவை பரப்பியுள்ளார். மற்றொரு பா.ஜ.க தலைவரான சுரேஷ் ரானா என்பவர் ஒரு முஸ்லிம் இளைஞருக்கு பாடம் கற்பிக்க அவருக்கு எதிராக போலியான கற்பழிப்பு குற்றத்தினை சுமத்தினார் என்பதை ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியிடப்பட்ட இந்த செய்திகளும் முசப்பர்நகர் கலவரத்தை போன்ற ஒரு கலவரத்தின் முன்னோட்டமாக கூட இருக்கலாம் என்ற அச்சம் நமக்கு எழுகிறது.

 

Comments are closed.