பிரபல அம்பேத்கரிய சிந்தனைவாதி கிருஷ்ணா கிர்வாலே அவரது வீட்டில் கொலை

0

மேற்கு மகாராஷ்டிரா பகுயில் உள்ள தனது வீட்டில் பிரபல அம்பேத்கரிய சிந்தனைவாதியான கிருஷ்ணா கிர்வாலே கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளது.

இது குறித்த காவல்துறை அறிக்கையில், கிருஷ்ணாவின் உடலில் பல கத்திக்குத்துக்கள் காணப்பட்டது என்றும் அவரது உடல் ராஜேந்திர நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்காபூர் சிவாஜி பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற மராத்திய பிரிவு தலைவரான கிர்வாலேயின் படைப்புகளில், “Dictionary of Dalit and Gramin Literatures” என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இவர் தலித் எழுத்தாளர் பாபுராவ் பாகுல் பற்றிய சரிதமும் எழுதியுள்ளார். அம்பேத்கரிய எழுத்துக்கள் பற்றிய, குறிப்பாக மராத்திய எழுத்துக்கள் பற்றிய  பல சொற்பொழிவுகளும் இவர் ஆற்றியுள்ளார். இவர் தனது பல்கலைகழகத்தின் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் மையத்தின் தலைவரகாவும் இருந்துள்ளார்.

இவரது கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ப்ரிதம் படில் என்பவர் இவரது வீட்டில் தச்சு வேலை செய்து வந்தவர் என்றும் இவருக்கும் கிர்ஷ்ணாவுக்கும் கூலி தொடர்பாக ஏற்ப்பட்ட மோதலில் இந்த கொலை நடைபெற்றதா என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் காவல்துறையினர் இந்த கொலையின் பின்னணி குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது தெரிவிக்கவில்லை. இந்த கொலை நடந்து சில மணி நேரங்களிலேயே காவல்துறையினர் ப்ரிதம் படிலை கைது செய்துள்ளனர்.

முன்னதாக 2015 இல் கம்மியுனிச சித்தாந்தவாதியான கோவிந்த் பன்சாரே மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் மிக அருகாமையில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டார். பின்னர் பன்சாரே மும்பையில் வைத்து உயிரிழந்தார்.

இதே போன்று 2013 இல் பிரபல பகுத்தறிவுவாதியான நரேந்திர தபோல்கர் புனேயில் வைத்து மோட்டார்சைக்கிலில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மீது நடத்தப்பட்ட துப்பாகிச்சூடும் பன்சாரே மீது நடத்தப்பட்ட துப்பாகிச்சூடும் ஒரே ரக துப்பாக்கியால் நடத்தப்பட்டது என கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கிர்வாலே கொலையை வன்மையாக கண்டித்த எதிர்க்கட்சி தலைவர் தனன்ஜய் முண்டே, இந்த சம்பவம் மஹாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்பதற்கு சான்றாகும் என்று கூறியுள்ளார். மேலும் கிர்வாலே தபோல்கரின் இயக்கத்தில் செயலாற்றி வந்தமையால் இது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இது குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளார்.

Comments are closed.