பிரவின் தொகாடியா மற்றும் மேலும் 38 பாஜகவினர் மீதான கொலை முயற்சி வழக்கு ரத்து

0

சமீபத்தில் தன்னை ராஜஸ்தான் மாநில காவல்துறை போலி என்கெளவுண்டர் மூலம் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறி கதறி அழுது மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் பிரவின் தொகாடியா மற்றும் மேலும் 38 பாஜக தலைவர்கள் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்து குஜராத் பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருபது வருட பழைமையான இந்த வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு தொகாடியா மீது பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை உத்தரவை கூடுதல் பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் J.V.பரோட் பிறப்பித்த சில நாட்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல்லுக்கு நன்றி தெரிவித்த தொகாடியா, தான் மேல் ஏறிய ஏணியை உடைக்க வேண்டாம் என்று மோடியை நோக்கி கூறியுள்ளார்.

மோடியை மூத்த சகோதரர் என்று குறிப்பிட்ட அவர், “வானில் இருந்து பூமியை பார்த்துக்கொண்டிருக்கும் பெரியண்ணனுக்கு எங்களைப் போன்ற பழைய நண்பர்களிடம் பேசுவது என்பது சிரமமாக உள்ளது. நாங்கள் களத்தில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களுடன் இணைக்கப் பட்டுள்ளோம். அவர் வெளிநாட்டு தலைவர்களிடம் பேசுகின்றார். சில நேரங்களில் உள்நாட்டில் உள்ள எங்களிடமும் அவர் சிறிது பேச வேண்டும். காலத்தின் சக்கரம் அல்லது கடவுளின் சித்தம், ஊடகங்களில் திட்டமிட்டு திணிக்கப்படும் செய்திகளாலும் தயாரிக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளாலும் இயங்குவது அல்ல. உங்களை இந்த உயரத்திற்கு ஏற்ற உறுதுணையாக இருந்த ஏணிகளை உடைக்கக்கூடாது. இது இந்திய கலாச்சாரம் அல்ல. தேசப்பற்று, இந்துத்துவம் வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல.” என்று கூறியுள்ளார்.

தொகாடியாவிடம் அவர் பெரியண்ணன் என்று யாரைக் குறிபிடுகிறார் என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்க, நாட்டில் ஒரே ஒரு பெரியண்ணன் தான் உள்ளார் என்றும் தனது செய்தி மிகவும் தெளிவாக உள்ளது என்றும் இருவரும் இணைந்தே தேசத்திற்காக பணியாற்றலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் மீதான வழக்கை திரும்பப் பெற்ற வசுந்தரா ராஜே அரசிற்கும் தொகாடியா நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தொகாடியா மீது 144 தடை உத்தரவை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட 15 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கை ராஜஸ்தான் அரசு ரத்து செய்திருந்தது.

1996 மே மாதம் 20 ஆம் தேதி பாஜக வின் மூத்த தலைவர் ஆத்மாராம் படேல் கும்பலுக்கும் கேஷுபாய் படேல் கும்பலுக்கும் ஏற்பட்ட மோதலில் ஆத்மாராம் படேலின் வேட்டி உருவப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மிக நெருக்கமான ஷன்கேர்சிங் வகேலா பாஜக வில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார். பாஜகவின் இந்த உட்கட்சி பூசல் நிகழ்வை அடுத்து கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்யநாத் உட்பட பல பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது 39 பாஜக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மீதான வழக்குகளை குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.