பிரிட்டனில் அதிகரிக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்

0

கடந்த மே 22 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 500% உயர்வடைந்திருப்பதாக அந்நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

2017, மே 17 இல் இருந்து ஜூன் மாதம் 19 ஆம் தேதி வரை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல் சுமார் 224 என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்களின் எண்ணிக்கை கடந்த வருடம் 37 ஆக இருந்தது. தற்போது இது 505.4% ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மான்செஸ்டர் நகர காவல்துறை அதிகாரி ராப் பாட்ஸ் கருத்து தெரிவிக்கையில், எப்போதெல்லாம் மான்செடரில் நடந்தது போன்ற தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் கணிசமாக உயர்வடைகின்றது என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த திங்கள் கிழமை ஃபின்ஸ்பரி பார்க் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு  ரமதான் மாத தொழுகை வழிபாடுகளில் ஈடுபட வருகை புரிவோர் மீது டேரன் ஆஸ்போர்ன் என்ற 48 வயது வெள்ளை நிறத்தவர் தனது வாகனத்தை ஏற்றி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த வெறுப்புத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, எதிர் கட்சி தலைவர் ஜெரிமி கோப்ரின் உட்பட பல பிரபலங்கள் கண்டித்தனர். தீவிரவாத தாக்குதல் நடைபெறும் போதெல்லாம் இஸ்லாமிய பெயர் தாங்கும் அந்த தீவிரவாதி எவ்வாறு தீவிரவாதத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டார் என்று விவாதங்களை எழுவது வழக்கம். இந்நிலையில் “இந்த தாக்குதலை நடத்திய டேரன் ஆஸ்போர்ன் எவ்வாறு தீவிரவாதத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டார் என்ற கேள்வியை இப்போது எழுப்புங்கள்” என்று ஹாரி பாட்டர் புத்தகத்தின் ஆசிரியார் J.K.ரவ்ளிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொடுஞ்செயலை செய்த தீவிரவாதியை சில ஊடகங்கள் தீவிரவாதி என்று கூட கூற மறுத்து வெள்ளை நிற வேன் ஓட்டுனர் என்று மட்டும் கூறுவதையும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்த தாக்குதலை நடத்திய டேரன் ஆஸ்போர்னை அப்பகுதியில் இருந்த கோபமுற்ற கூட்டத்திடம் இருந்து காவல்துறை அங்கு வரும் வரை பாதுகாத்து வைத்த ஃபின்ஸ்பரி பார்க் பள்ளிவாசல் இமாம் முஹம்மத் மஹ்மூத் என்பவரை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நேரில் சந்தித்துள்ளார். வழிபாட்டிற்கு வந்தவர்கள் மீது நடைபெற்ற இந்த தாக்குதல் குறித்து இங்கிலாந்து அரசி மிகவும் அதிர்சியுற்றதாகவும் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் பிராத்திப்பதாக அவர் தன்னிடம் தெரிவித்ததாக இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்ற இந்த முஸ்லிம் விரோத தாக்குதல் பிற தீவிரவாத தாக்குதல் போலவே கருதப்படும் என்றும் இஸ்லாமோஃபோபியாவை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே உறுதியளித்துள்ளார்.

Comments are closed.