பிரிவினைவாதத்திற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை…

0

பிரிவினைவாதத்திற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை…

ப. சிதம்பரம்

(முன்னாள் மத்திய அமைச்சர்)

பிரத்யேக பேட்டி

மத்திய உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் என தேசியளவில் பல பொறுப்புகளை வகித்தவர் ப. சிதம்பரம். சமீபத்தில் ஏர்செல் மாக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 106 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்த பிறகு ஜாமீனில் வந்துள்ளார். பாரதிய கட்சி அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் அவர்களின் பொருளாதார கொள்கைகளையும் கடுமையாக விமர்சிப்பவர் அவர்களின் பாசிச சித்தாந்தத்தையும் கண்டித்து வருகிறார். இதன் காரணமாகவே பாசிச பா.ஜ.க. அரசால் அவர் குறிவைக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது. நாட்டின் சமகால அரசியல் நிகழ்வுகள் மற்றும் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து புதிய விடியலுக்கு அவர் வழங்கிய பேட்டி…

தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டாலும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க.விற்கு வாக்களித்தவர்கள் முன்னேற்றத்தை விட பிரிவினைவாதத்தை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று இதனை எடுத்துக் கொள்ளலாமா?

புல்வாமா தீவிரவாத தாக்குதல், அதற்கு பதிலடியாக எல்லையை கடந்த தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதல் ஆகியவை நாடாளுமன்ற தேர்தலுக்கான போக்கை மாற்றி விட்டன. இந்த முன்னேற்றங்களால் கவரப்பட்ட வட இந்தியாவின் பெரும்பான்மை வாக்காளர்கள் பா.ஜ.க.விற்கு சாதகமாக வாக்களித்தனர். இருந்த போதும் பதிவான வாக்குகளில் பா.ஜ.க. 38 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. முன்னேற்றத்தை விட பிரிவினைவாதத்திற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்தார்கள் என்று நான் நினைக்கவில்லை.

குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் கணிசமான வாக்குகளை பெற்ற காங்கிரஸ், அதே மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலில் மோசமான தோல்வியை தழுவியது. சில மாத இடைவெளியில் ஏற்பட்ட இந்த தலைகீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன?

மாநில தேர்தல்களின் போக்குகள் முற்றிலும் வித்தியாசமானவை. மாநில அரசாங்கத்தின் செயல்படாத தன்மை, ஆட்சிக்கு எதிரான கருத்து மற்றும் மாற்றத்தை விரும்பும் ஆவல் ஆகியவை பா.ஜ.க.விற்கு எதிராக அமைந்த முக்கிய காரணிகள். நாடாளுமன்ற தேர்தலில் இந்த போக்கு மாறியது. இந்த மாநிலங்களில் பா.ஜ.க.வை விட, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பு பலகீனமாக இருந்தது.

செலவு மற்றும் நடைமுறைபடுத்தும் முறைகளை கருத்தில் கொண்டால் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.,  மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றை செயல்படுத்துவது மிக கடினமாகும். இருந்த போதும் அவற்றை நடைமுறைபடுத்துவதில் பா.ஜ.க. மும்முரமாக இருக்கிறது. சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. ஆகியவை பா.ஜ.க.விற்கு ஏன் தேவைப்படுகிறது?

பொருளாதாரம் மீதான தனது கட்டுப்பாட்டை பா.ஜ.க. இழந்துவிட்டது. மிகப்பெரும் மந்த நிலையை சரிசெய்வது குறித்து அவர்களுக்கு எந்த துப்பும் இல்லை. பொருளாதாரம் அவசர பிரிவில் (ஐ.சி.யூ.) இருக்கிறது என்று டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன் கூறுகிறார். மக்களின் கவனத்தை இதிலிருந்து திருப்புவது பா.ஜ.க.விற்கு அவசியமாகிறது. மிதமிஞ்சிய தேசியவாதத்தை தூண்டுவதை விட கவனத்தை திருப்புவதற்கு வேறென்ன சிறந்த வழிமுறை இருக்கிறது? அஸ்ஸாமை போன்று மக்களை பிளவுபடுத்தும் ஆற்றல் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.க்கு இருக்கிறது. எனவே, பா.ஜ.க. இந்த விவகாரங்களை கையில் எடுத்துள்ளது.

நமது மோசமான பொருளாதார நிலையை கருத்தில் கொண்டால், தேசியளவில் என்.ஆர்.சி.யை கொண்டு வருவது பொருளாதாரத்தின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

அதிகரித்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில் தேசியளவில் என்.ஆர்.சி. என்பது அதிகமான மக்களை வீதிகளுக்கு கொண்டு வரும். முதலீடுகள் பாதிக்கப்படும். சந்தைகள் ஸ்திரமற்ற நிலையை அடையும். நிச்சயமற்றதன்மை மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் வியாபார நிறுவனங்கள் வேலைக்கு நபர்களை எடுக்கமாட்டார்கள். மாநில அரசாங்கங்கள் சட்டம் ஒழுங்கில் கவனத்தை செலுத்துவதால் வளர்ச்சியில் போதிய கவனத்தை செலுத்த முடியாது. சமூகங்கள் இடையே சமூக பிரிவினைகளும் நம்பிக்கையின்மையும் அதிகரிக்கும். இவை அனைத்தும் பொருளாதாரத்தின் மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்.பி.ஆர்.) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2010இல் நடைமுறைபடுத்தியது. தற்போது காங்கிரஸ் அதனை ஏன் எதிர்க்கிறது? 2010ன் என்.பி.ஆர்.கும் தற்போதைய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள என்.பி.ஆர்.கும் இடையிலான வித்தியாசம் என்ன?

சில குறிப்பிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட என்.பி.ஆர். 2010 முற்றிலும் மாறுபட்டது. அது 2011ன் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு (சென்சஸ்) உதவியாக நடத்தப்பட்டது. வழக்கமான குடியிருப்பாளர்கள் அதில் கணக்கெடுக்கப்பட்டனர். குடியுரிமைக்கும் அதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சென்சஸ் மேற்கொள்ளப்பட்ட பிறகு அது நிறுத்தப்பட்டது. என்.ஆர்.சி. குறித்து எதுவும் கூறப்படவில்லை. அத்துடன், சென்சஸ்ற்கு தொடர்புடைய 15 துறைகளின் தகவல் மட்டுமே என்.பி.ஆர். 2010இல் கேட்கப்பட்டது.

அதற்கு மாற்றமாக,பேரழிவு நிறைந்த அஸ்ஸாம் என்.ஆர்.சி. மற்றும் அரசாங்கத்தின் ஆட்சேபகரமான கருத்துகளுக்கு பிறகு இந்திய அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக முன்மொழியப்பட்ட என்.பி.ஆர். 2020 இருக்கும். இந்திய அளவில் என்.ஆர்.சி.யை மேற்கொள்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ள உள்துறை அமைச்சர், 2024ல் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தூக்கி எறிவதாக கூறியுள்ளார். என்.பி.ஆர். 2020ற்கு பயன்படுத்தப்படும் படிவத்தில் அதிகமான ஆறு துறைகள் குறித்து கேட்கப்படும். வழக்கமான குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை எடுப்பதற்கோ சென்சஸிற்கோ இத்துடன் எந்த சம்மதமும் கிடையாது.

எனவே, என்.பி.ஆர். 2020ன் வாசகம் மற்றும் சூழல் என்.பி.ஆர். 2010இல் இருந்து முற்றிலும் மாறுபட்டது. மக்களின் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நடைபெறும் போராட்டங்களை செயல்பாட்டாளர்களும் மாணவர்களும் வழிநடத்துகின்றனர். சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான வலிமையான இயக்கத்தை எதிர்கட்சிகளால் ஏன் வழிநடத்த முடியவில்லை?

போராட்டங்களில் எதிர்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல மாநில கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை டிசம்பர் மாதம் மாற்றிவிட்டனர். இதனால் அவர்கள் பின்னர் போராட்டங்களில் இணைந்தனர். கட்சி, மதம், மொழி மற்றும் சாதிகளை கடந்து மாணவர்களும் இளைஞர்களும் போராட்டங்களில் முன்னணியில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. தற்போதைய இந்த போராட்ட அலை உண்மையில் ஒரு மக்கள் போராட்டமாகும்.

அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் எவரையும் தேச விரோதி என்று விமர்சிக்கும் போக்கு நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியினரிடையே உருவாகியுள்ளது. அரசாங்கம் மட்டுமன்றி தற்போது அதன் ஆதரவாளர்களும் எதிர்கருத்துகளுக்கு சகிப்புத்தன்மை இல்லாதவர்களாகி விட்டனர். எதிர்கால இந்தியாவில் இந்த போக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

நடுத்தர வர்க்கம் அதிகமாக தங்களை மட்டுமே குறித்து சிந்திப்பவர்களாகவும் ஓரளவு சுயநலம் கொண்டவர்களாகவும் உள்ளது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்ப விருப்பமில்லாதவர்களாக அல்லது பயந்தவர்களாக உள்ளனர். எவ்வித எதிர்கருத்தும் தேச விரோதம் என்ற அரசாங்கத்தின் வாதத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனர். இவை மோசமான போக்குகளாகும். சுதந்திர போராட்டத்தின் போது நடுத்தர வர்க்கம் வகித்த வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பில் இருந்து தூரமானதும் ஆகும். சமூகத்திற்கு முற்போக்கு சிந்தனையையும் தலைமைத்துவத்தையும் வழங்கும் தனது கடமையை மத்திய வர்க்கம் மீண்டும் கண்டெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

சி.ஏ.ஏ.ற்கு எதிராகப் போராட்டம் நடத்திய இருபதிற்கும் அதிகமான மக்கள் உத்தர பிரதேசத்தில் காவல்துறை துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். மக்களின் குரல்களை ஒடுக்குவதற்காக தன்னிச்சையான கைதுகளும் பெரியளவிலான அடக்குமுறைகளும் காவல்துறையால் நடத்தப்படுகிறது. போராட்டக்காரர்களை பழிவாங்குவேன்ÕÕ என்று முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகிறார். போராட்டக்காரர்கள் பாகிஸ்தானிற்கு செல்ல வேண்டும்ÕÕ என்று மீரட் நகர காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் நாராயண் சிங் கூறுகிறார். பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் தடுக்கப்பட்டனர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கு என்ன வழி இருக்கிறது? மக்களின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கு காங்கிரஸ் இந்த பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள இருக்கிறது?

ஆதித்யநாத்தின் கீழுள்ள உத்தர பிரதேச அரசாங்கம் எப்போதும் ஜனநாயகமற்றதாகவும் அடக்குமுறை நிறைந்ததாகவும் இருக்கிறது. அது, உயர்சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் ஒரு வலதுசாரி அரசாங்கம். அதன் அணுகுமுறை பெரும்பான்மையினரை சார்ந்ததாகவும் எதேச்சதிகாரம் கொண்டதாகவும் இருக்கும். இத்தகைய அரசாங்கத்தில் காவல்துறை வானளாவிய அதிகாரங்களை பெறும். அதனால், உத்தர பிரதேசத்தின் நிகழ்வுகள் குறித்து எனக்கு எவ்வித ஆச்சர்யமும் இல்லை. உத்தர பிரதேச அரசாங்கத்தின் அத்துமீறல்களை மக்களின் வீதி போராட்டங்களே நிறுத்தும். லக்னோ, கான்பூர், அலகாபாத் மற்றும் வாரணாசியின் வீதிகளுக்கு காங்கிரஸ் வந்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. காலப்போக்கில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி போராடியது என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

பேட்டி: வழக்கறிஞர்

கி. முகம்மது யூசுப்

Comments are closed.