பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் மறைவுக்கு இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி ஆழ்ந்த இரங்கல்!

0
துபை: இராநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபரும், கல்வியாளருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களின் மறைவுக்கு இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் அமீரக பொதுச் செயலாளர் முஹம்மது முனவ்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:இராமநாதபுரம் கீழக்ரையில் பிறந்து சர்வதேச அளவில் சிறந்த தொழிலதிபராக, சிறந்த கல்வியாளராக பல்வேறு நிறுவனங்களை துவங்கி சிறப்பாக நடத்தி வந்தவரும், சிறந்த கொடையாளருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் கடந்த 07.01.2015 அன்று மரணமடைந்தார்கள் என்பது மிகுந்த துயரத்திற்குரியது. இவரால் துவங்கப்பட்ட ETA நிறுவனமும், அப்துர் ரஹ்மான் நிகர்நிலை பல்கலைக் கழகமும் இவர்களது வெற்றிகளில் முக்கியமானவை.பல்லாயிரம் தமிழர்கள் இவர்களால் வேலைவாய்ப்பைப் பெற்றனர். அவர்களது இழப்பு நாட்டிற்கும் சமூகத்திற்கும் பேரிழப்பாகும். சமீபத்தில் உலகளவில் சிறந்த தொழிலதிபர்கள் 500 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்தவர்கள்.

கிரசன்ட் பல்கலைக்கழகம், பெண்கள் கல்லுரி, பள்ளிக்கூடங்கள் பலவற்றை நிறுவினார்கள். அவையெல்லாம் இன்று திறம்பட செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. சென்னையில் பழமையான அண்ணா மேம்பாலம் கூட இவர்களின் கீழுள்ள ஈடிஏ நிறுவனம்தான் கட்டியது. தனது சீதக்காதி டிரஸ்ட் மற்றும் ஜக்காத் நிதிக் கழகம் மூலமாக பல்வேறு தானதர்மங்களிலும் ஈடுபட்டு வந்தார்கள். மதிநுட்பமும், விவேகமும், நுண்ணிய நினைவாற்றலும் கொண்ட பி.எஸ்.ஏ. அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நிறுவனங்களைச் சார்ந்தவர்களுக்கும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.