பீகார் தேர்தல் முடிவு என் தந்தைக்கு சமர்ப்பணம் -முஹம்மது அக்லாகின் மகன் சர்தாஜ்

0

பீகார் தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்திருந்த வேளையில், மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று கொலைகார கும்பலால் அடித்தே கொல்லப்பட்ட அக்லாகின் கிராமமும் அந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து கொண்டிருந்தது. பா.ஜ.க. வின் தோல்வி அந்த கிராம மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த பொழுது மின்சார தடை ஏற்பட்ட பொழுதும் அந்த கிராம மக்கள் இன்வர்டர் இருப்பவர்களது வீட்டில் கூடி தேர்தல் முடிவுகளை கவனித்துக் கொண்டிருந்தனர். பா.ஜ.க.வின் தோல்வி அவர்களை நிம்மதி அடைய செய்துள்ளது. இது குறித்து 75 வயது பூப் சிங் என்பவர் கூறுகையில் “நான் இந்த கிராமத்தில்தான் பிறந்து வளர்ந்தேன், இந்த கிராமத்தில்தான் எனது உயிரையும் விடுவேன். இது வரை எங்கள் கிராமத்தில் எந்த ஒரு மத மோதல்களும் நடந்தது இல்லை. அக்லாகின் கொலை மிகவும் துரதிர்ஷ்டமானது. என்னை மிகவும் பாதித்தது” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், அரசியல்வாதிகளின் வருகையே இத்தகைய சம்பவத்திற்கு காரணம் என்றும் அவர்கள் வரவில்லை என்றால் இதனை நாங்களே பேசி தீர்த்திருப்போம் . அரசியல்வாதிகளுக்கு மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் பெற வேண்டும். பீகார் தேர்தல் முடிவு அவர்களின் கன்னத்தில் அறைவது போல வந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.
இதே போல மற்றொரு கிராமத்தார் ஓம் மகேஷ் கூறுகையில் ” அக்லாகின் கொலை மிகவும் வருத்தத்திற்குறிய சம்பவம். அவரின் கொலைக்கு பிறகும் எங்கள் கிராமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் சில அரசியல்வாதிகள் இந்த அமைதியை குலைக்க நினைத்தார்கள். நாங்கள் எல்லா அரசியல்வாதிகளையும் எங்கள் கிராமத்திற்கு வருவதை நிறுத்த கூறிவிட்டோம்” என்று கூறினார்.
குல்ஃபாம் என்பவர் கூறுகையில் மக்களை பிரித்து ஆள நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு பீகார் மக்கள் பெரும் தோல்வியை கொடுத்துள்ளனர். இத்தகைய அரசியல்வாதிகள் மக்களின் நலனிற்கு முன்னே தங்கள் அதிகார ஆசையை முன்னிறுத்துகின்றனர். இது இந்நாட்டின் மரியாதையை கெடுக்கும் செயல்” என்று கூறினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக அக்லாகின் மகன் சர்தாஜ் கூறுகையில் “பீகார் தேர்தல் முடிவு என் தந்தைக்கு சமர்ப்பணம், மக்கள் மதவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றுகூடியுள்ளனர். நம் நாட்டில் வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை. மதத்தின் பெயரால் மோதுவதால் எந்த ஒரு பயனும் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.  உங்களின் அதிகாரத்திற்காக மக்களை பிளவு படுத்தாதீர்கள் என்று அரசியல்வாதிகளை கேட்டுகொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பா.ஜ.க.வின் மதவாத கொள்கைகள் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை தெளிவாக உணர முடிகிறது.

Comments are closed.