பீகார்: மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல். தாக்கப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

0

பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள தும்ரா கிராமத்தில் ஏழு முஸ்லிம் இளைஞர்கள் பசுவைக் கொன்று மாட்டிறைச்சி உண்டார்கள் என்ற வதந்தியின் பெயரில் வன்முறை கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

தும்ரா கிராமத்தை சேர்ந்த முஹம்மத் ஷஹாபுத்தீன் என்பவர் பசுவை கொன்று உண்டதாகக் கூறி அவரின் வீட்டு முன்பு ஒரு கும்பல் கையில் ஆயுதங்களுடன் கூடியது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பலரை உள்ளடக்கிய இந்த கும்பல் “பாரத் மாதா கீ ஜெய்” என்று கோஷமிட்டவாரு ஷஹாபுதீனை தாக்கியுள்ளனர். 50 துக்கும் மேற்ப்பட்டவர்களை கொண்ட இந்த கும்பல் முந்தைய இரவு சகாபுதீன் பசுவை அறுத்துக் கொன்று அவரும் அவரது அண்டை வீட்டினரும் உண்டனர் என்று கூறி அவரையும் அவரது அண்டை வீட்டினரையும் ஒரு அறையில் அடைத்து வைத்து தாக்கியுள்ளனர்.

இந்த நிகழ்வை கேள்வியுற்று அப்பகுதிக்கு காவல்துறை வாகனம் வரவே அதன் மீது கற்களை வீசிய வன்முறைக் கும்பல் தங்களிடம் அந்த முஸ்லிம்களை விட்டுவிடுமாறும் தாங்கள் அவர்கள் செய்த செயலுக்கு பாடம் கற்பிக்கப் போவதாகவும் கூரியுள்ளனர்.

ஒருவழியாக காவல்துறை இந்த முஸ்லிம் இளைஞர்களை இந்துதவ கும்பல் கொலை செய்தவதை விட்டு தடுத்துள்ளது. ஆனால் ஒவ்வொரு மாட்டிறைச்சி வழக்கைப் போலவே இந்த வழக்கிலும் சட்டவிரோதமாக கூட்டம் கூடி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அவர்களால் தாக்கப்பட்டவர்கள் மீதும் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முற்பட்ட நஸ்ருதீன் மியான், முஸ்தஃபா மியான், ஜெஹாங்கிர் மியான், அசலம் அன்சாரி, பப்லு மியான் மற்றும் ரிஸ்வான் மியான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்துள்ளது. இவர்களில் நான்கு பேர் இந்துத்வா கும்பலின் வன்முறைத் தாக்குதலில் கடுமையாக காயமுற்று அப்பகுதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சன்பாட்டியா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ராஜேஷ் ஜா கூறுகையில், “ஏழு பேர் மீது வேண்டுமென்ற அப்பகுதி பெரும்பான்மையினரின் மத உணர்வுகளை புன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி வருகின்றோம்.” என்று கூறியுள்ளார். மேலும் இவர்களை தாக்கியவர்கள் மீது எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மாட்டிறைச்சி தொடர்பாக நடைபெறும் இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக கூறி வாகனம் ஒன்றை நிறுத்தி அதில் உள்ளவர்கள் பசு பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டனர்.

Comments are closed.