புதிதாக பதவியேற்ற அமைச்சர் ஆனந்த் குமார் ஹெட்கேவை தெரிந்துகொள்ளுங்கள்

0

சமீபத்தில் மோடி அரசு மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தில் புதிய அமைச்சராக பாஜகவின் ஆனந்த் குமார் ஹெட்கே பதவியேற்றுள்ளார். இந்த புதிய அமைச்சர் அவரது தற்போதைய பதவிக்கு தகுதிடையவர்தானா என்ற கேள்வியை அவரது முந்தைய செயல்பாடுகளும் மற்றும் பதிவுகள் எழுப்புகிறது.

இவரை டிவிட்டர் இணையதளத்தில் பின் தொடர்பவர்களுக்கு இவர் எத்தகையவர் என்பது தெளிவாக விளங்கும். இவரது ட்விட்டர் கணக்கு பாஜகவையும் அதன் சித்தாங்களையும் எதிர்ப்பவர்கள் மீது அவதூறு பரப்பும் போலி செய்திகளால் நிரம்பியது. உதாரணத்திற்கு ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவ அமைப்பு தலைவர் கண்ணையா குமார் அவருடைய ஆசிரியருடன் நெருக்கமாக பழகுபவர் என்ற ஒரு போலிச் செய்தியை இவர் தனது கணக்கு மூலம் 2016 மார்ச் மாதம் பகிர்ந்திருந்தார். கண்ணையா குமாருடன் ஒரு பெண் இருக்கையில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்த இவர் அந்தப் பெண் கண்ஹையா குமாரின் ஆசிரியர் என்றும் இருவருக்கும் மிக நெருக்கமான உறவு உள்ளது போன்ற கருத்துக்களை தனது பதிவின் மூலம் பரப்பியிருந்தார்.

ஆனால் அந்தப் பெண் கண்ணையா குமாருடன் பயிலும் சக ஆய்வு மாணவர் என்பதும் மார்ச் மாதம் 5 ஆம் தேதி அப்பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த அந்தப் புகைப்படத்தை சிலர் திருடி அத்துடன் தங்கள் கற்பனைகளையும் சேர்த்து இணையத்தில் பரவ விட்டுள்ளனர் என்று பின்னர் தெரிய வந்தது. இநத்தகைய போலியான செய்தியை வெளியிட்டவர்களில் அமைச்சர் ஆனந்த் குமாரும் பிரதானமான ஒருவர்.

JNU  குறித்த அவரது பதிவு இது ஒன்று மாத்திரம் அல்ல. இராணுவத்தை அழைத்து JNU  மாணவர்களை நசுக்க வேண்டும் என்ற ஒரு ட்விட்டர் பதிவை அவர் மறுபதிவு செய்து தனது ஆசையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவர்கள் ஜனநாயகம் அனுமதித்த முறையில் போராட்டம் செய்வதை மதிக்கத்தெரியாத இவர் பிற மத வழிபாட்டு சுதந்திரத்தையும் மதிக்காதவர். இஸ்லாம், கிருஸ்தவம், பெளதடம் போன்ற மதங்களை மிக மோசமாக இவர் விமர்ச்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் 2016 பிப்ரவரி 28 ஆம் தேதி இஸ்லாம் குறித்து “இஸ்லாம் வெடிக்க காத்துக்கொண்டிருக்கும் தீவிரவாத வெடிகுண்டு” என்ற மோசமான விமர்சனத்தை செய்தவர். இவரின் இந்த விமர்சனத்திற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உடுப்பியில் போராட்டம் நடத்தியிருந்தது. (பார்க்க செய்தி)

மேலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் வணிக ரீதியாக செயல்பட்டுவரும் மதமாற்ற கூடங்கள் என்றும் அதற்கு எந்த மரியாதையும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார். பெளத்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பெளத்த மதம் இல்லையென்றால் அகண்ட பாரதம் உருவாகியிருக்கும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இத்துடன் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களை விபச்சாரிகளுடன் ஒப்பிடும் “Presstitute” என்கிற வார்த்தை பதத்தை பயன்படுத்தி வந்தவர் இவர். பிரபல பத்திரிகையாளர் பர்கா தத்தை கஷ்மீர் விவகாரம் ஒன்று தொடர்பாக “Presstitute”  என்று அழைத்தவர். மற்றொரு முறை தாவூத் இப்ராஹீம் கொலை செய்யப்பட்டு விட்டதாக பரப்பப்பட்ட போலியான செய்தி ஒன்றை வெளியிட்ட அவர் தாவூதின் மரணம் பாலிவுட்டில் உள்ளவர்களுக்கும் ஊடகத்துறையில் உள்ள “Presstitute” நபர்களுக்கும் பேரிழப்பு என்று பதிவு செய்தவர்.

குஜராத் கலவரங்கள் குறித்து ரானா அய்யூப் எழுதிய குஜராத் கோப்புகள் புத்தகத்தால் எரிச்சலடைந்த ஆனந்த் குமார் ஹெட்கே, அந்த புத்தகம் வெளியான் அசில நாட்களிலேயே ரானா அய்யூபை தேசவிரோத செயல்களுக்காக 24 மணி நேரம் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று கூறியவர் இவர். மம்தா பானர்ஜீயை மும்தாஜ் என்றும் அவரது ஆட்சியில் இந்துக்கள் பாதுகாப்பாக இல்லை என்றும் தனது ஒரு  பதிவில் இவர் குறிப்பிட்டிருந்தார்.

ட்விட்டரில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இவர் சர்ச்சைகள் நிரம்பிய மனிதர் தான். இவ்வருட தொடக்கத்தில் கர்நாடக மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களை இவர் தாக்கியது செய்திகளில் வெளியானது. அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தாயாரை மருத்துவர்கள் சரிவர கவனிக்கவில்லை என்று கூறி மூன்று மருத்துவர்களை அவர் தாக்கியது அந்த மருத்துவமனையில் உள்ள கண்காணிப்புக் கேமெராவில் பதிவானது. இந்த நிகழ்விற்காக அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத பாஜக கட்சிக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மட்டும் கூறி வசதியாக விலகிக் கொண்டது. தற்போது இதே நபரை தான் தங்களது அமைச்சராக்கியுள்ளது பாஜக.

Comments are closed.