புதிய கண்காணிப்பு வளையம்

0

புதிய கண்காணிப்பு வளையம்

நாடு பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளப்படும்போது பழுதுகள் இல்லாத கண்காணிப்பு தேவைப்படும். மிகவும் நவீனமான கண்காணிப்பு கட்டமைப்புகளை கோடிகளை செலவு செய்து உருவாக்குவதற்கு அரசுகளை தூண்டுவது பாதுகாப்பு குறித்த அச்சமாக இருக்கலாம். ஒன்று இந்த அச்சம் போலியாக உருவாக்கப்படலாம் அல்லது உண்மையிலேயே அத்தகையதொரு ஆபத்து இருக்கலாம். அமெரிக்காவில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் பிற நாடுகள் மீது அவர்களின் ஆதிக்கத்தை திணித்ததே காரணம். சீனா குறைபாடற்ற பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதற்கு காரணம், சொந்த நாட்டு மக்கள் மீதான அவநம்பிக்கையாக இருக்கலாம். வல்லாதிக்க நாடுகளில் மக்கள் இத்தகைய கண்காணிப்பு வளையங்களில் தான் வாழுகின்றனர். அங்கெல்லாம் ஆட்சியாளர்களின் விருப்பம் குடிமக்கள் கடுமையான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே வளர்ந்து வரும் நாடான இந்தியாவும் நவீன கண்காணிப்பு கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

முகத்தை அடையாளம் காண்பதற்கான (திணீநீவீணீறீ க்ஷீமீநீஷீரீஸீவீtவீஷீஸீ) தொழில் நுட்பத்தை பொது இடங்களில் நிறுவுவதற்கான மிகப்பெரிய திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இது முன்னர் வெளியான தகவல் தான். இந்த கட்டமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கை வேகமெடுப்பதுதான் புதிய தகவல். சீனாவின் மாதிரியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மையப்படுத்தப்பட்ட முகத்தை அடையாளம் காணும் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அடுத்த மாதம் துவக்கும் என்று சர்வதேச ஊடகமான ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் நிறுவப்படும் கேமராக்களில் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் என்று அந்த செய்தி அறிக்கை கூறுகிறது. பாஸ்போர்ட் முதல் கைரேகை வரையிலான தரவு தளங்களுடன் இது இணைக்கப்படும். இது  குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத உடல்கள் முதலானவற்றை அடையாளம் காண உதவும் என்று அந்த செய்தி கூறுகிறது. நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களையும் அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

உலகிலேயே மனித வளம் குறைவான காவல்துறை கட்டமைப்பு உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கண்காணிப்பை பலப்படுத்த இனி தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் வேறு வழி கிடையாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனங்களிடம்  மோடி அரசு விரைவில் அளிக்கும்.

ஆற்றல் மிகுந்த தரவு பாதுகாப்பு சட்டம் அமலில் இல்லாத இந்தியாவில் புதிய கண்காணிப்பு கட்டமைப்பை உருவாக்குவது மிகப்பெரிய அச்சத்தை தோற்றுவிக்கும். தரவுகள் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் இந்தியா மிகவும் பின்தங்கியே உள்ளன. புதிய தரவு பாதுகாப்பு சட்டம் இதுவரை நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் கவனத்திற்கோ கொண்டு வரப்படவில்லை. உலகிலேயே மிகப்பெரிய பயோமெட்ரிக் கட்டமைப்பு என்று புகழப்பட்ட ஆதார் நடைமுறைப்படுத்தப்பட்டபோது தகவல்கள் பெரிய அளவில் கசிந்ததை நாடு கண்டது.

குடிமக்களின் இயற்கையான சுதந்திரத்தின் மீது அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. மனிதன் ஒரு நாட்டின் குடிமகனாக மாறும்போது தவிர்க்க முடியாதவையே இந்த கட்டுப்பாடுகள். ஆனால், அனைத்து வரம்புகளையும் கண்காணிப்பு மீறும்போது குடிமக்களின் தனியுரிமை இழக்கப்படுகிறது. அவர்களின் சிறிய நகர்வுகள் கூட அரசின் திறந்த கண்களில் இருந்து தப்பாது. தனிநபர் சுதந்திரத்திற்கு பாதிப்பில்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தெரியாத அரசு ஆட்சியில் இருக்கும்போது குடிமக்களின் தனியுரிமை என்பது கேள்விக்குறியே!

Comments are closed.