புதிய கல்விக் கொள்கைகளை குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ். ஐ சந்திக்கின்றார் பிரகாஷ் ஜாவடேகர்

0

புதியாத நியமிக்கப்பட்ட மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அரசின் புதிய கல்விக் கொள்கைகளை குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்களை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் வித்யா பாரதி, ஏ.பி.வி.பி, ராஷ்டிரிய சைக்ஷிக் மகாசங், பாரதிய ஷிக்ஷான் மண்டல், சன்ஸ்கிரிட் பாரதி, சிக்ஷா பச்சாவோ அந்தோலன், விக்யான் பாரதி மற்றும் இதிகாஸ் சங்கலன் யோஜனா ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களை ஜாவடேகர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஆறு மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில், ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால், பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் அனிருத் தேஷ்பாண்டே ஆகியோரும் உடன் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு புதிய கல்விக் கொள்கை குறித்து சங்க பரிவார அமைப்புகளின் கருத்துக்களை பெறுவதற்காகவும், மாணவர்களிடையே தேசியவாதத்தையும், நவீன கல்வியில் பழைமையான இந்திய கொள்கைகளை குறித்த பெருமையினை விதைக்கவும் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் ஏற்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “ஜடேவ்கர் இந்த அமைச்சகத்திற்கு புதிது, அவருக்கு கல்வித்துறையின் அடிமட்ட தளத்தில் இருந்து ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

மேலும் புதிய கல்விக் கொள்கைகளை முடிந்த அளவுக்கு எத்தனை மொழிகளில் வெளியிட முடியுமோ அத்துணை மொழிகளில் வெளியிட கேட்டுக்கொண்டுள்ளோம் என்றும் புதிய கல்விக் கொள்கைகளின் இந்தி பதிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ஸ்மிர்த்தி இராணி இருந்த பொழுது வெளியான கல்விக் கொள்கை குறித்து ஆர்.எஸ்.எஸ். அதிருப்தியடைந்துள்ளது என்றும் அவர்கள் கூறிய மாற்றங்கள் எதுவும் அந்த கல்விக் கொள்கையில் இல்லாததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. எனவே அதனை சரி செய்யவே இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜவதேகரிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்ட பொழுது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Comments are closed.