புதிய விடியல் – 2018 செப்டெம்பர் 16 -30

0

தலைப்புகள்

ஏமாற்றுப் பேர்வழிகளின் அரசு

அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி

கோவை தீவிரவாதிகளை உருவாக்குகிறதா உளவுத்துறை

உத்தர பிரதேசம் முஸ்லிம்களை குறிவைக்க மற்றுமொரு ஆயுதம்

இந்துத்துவத்தின் முகமூடி

யூ.ஏ.பி.ஏ. கருப்புச் சட்டம் ஒரு பார்வை

யூ.ஏ.பி.ஏ. கருப்புச் சட்டத்தை நீக்க தேவை மக்கள் புரட்சியே

அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு இந்தியா பிரடெர்னிடி ஃபோரத்தின் சேவை

அஜ்மீர் தர்கா வழக்கு இரண்டு ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளுக்கு ஜாமீன்

கௌரி லங்கேஷ் கொலை : குற்றவாளியை உறுதி செய்த தடயவியல் ஆய்வுகள்

மாலேகான் வழக்கு: புரோகித்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

சொஹ்ராபுதீன் ஷேக் என்கௌண்டர்: வன்சாரா உள்ளிட்டவர்கள் விடுதலையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

தபோல்கர் கொலை வழக்கு: கலாஸ்கருக்கு சிபிஐ காவல்

எனது புரட்சி: 13. கம்பிகளுக்குப் பின்னால்…

மனசாட்சியின் பெருங்குரல்

குர்ஆன் பாடம்: சான்றோர்களின் (ஸாலிஹீன்களின்) வழி

 


ஏமாற்றுப் பேர்வழிகளின் அரசு!

‘‘இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தேன்’’ என்று விஜய் மல்லையா கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 9000 கோடி ரூபாயை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிய மல்லையா லண்டனில் நீதிமன்ற விசாரணைகளுக்கு இடையில் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மல்லையாவின் குற்றச்சாட்டுகளை ஜேட்லி மறுத்த போதிலும் சூழ்நிலை ஆதாரங்கள் ஜேட்லிக்கு எதிராகவே உள்ளன. சுப்ரமணியன் சுவாமி மல்லையாவுக்கு எதிராக சி.பி.ஐ. விடுத்திருந்த லுக் அவுட் நோட்டீஸ் நீர்த்துப்போகச் செய்யப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பிரதமர் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை சுற்றிலும் எழும் இத்தகைய தீவிரமான குற்றச்சாட்டுக்கள் மத்திய அரசையும், பா.ஜ.க. தலைமையையும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஜனநாயக ஆட்சிமுறையில் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் வெளிப்படைத் தன்மையும், தெளிவையும் ஒருபோதும் கடைப்பிடிக்காத பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்தியாவை பீடித்துள்ள மிகப் பெரிய நோய் என்ற எண்ணம் நாட்டு மக்களுக்கு என்றைக்கோ தோன்றிவிட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களுக்கு எதிராக பெருமளவில் மக்களின் உணர்ச்சியை தூண்டி 2014ல் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்தது.ஆனால், அறிக்கைகளும், ஆசைவார்த்தைகளையும் தவிர சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவொரு மக்கள் நல திட்டங்களையும் அவர்களால் சுட்டிக்காட்ட இயலாது. கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதார துறை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வளர்ச்சி விகிதம் குறித்த தவறான புள்ளிவிபரங்களின் அடிப்படையிலான வார்த்தை ஜாலங்களில் மட்டுமே மோடி அரசு வளர்ந்துள்ளது. கறுப்புப்பணத்தை பதுக்கியவர்களை ஒடுக்குவதற்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவித்த நோக்கங்களில் எதனையும் அடையாமல் மக்களுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி விட்டு முடிவுக்கு வந்தது.

விஜய் மல்லையாவின் வழியை பின்பற்றி 13,000 கோடி ரூபாயுடன் நாட்டை விட்டு தப்பிய நீரவ் மோடிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையேயான நெருக்கமான உறவிலும் மர்மம் நிலவுகிறது. இந்திய வங்கி வரலாற்றிலேயே மிகப்பெரிய வங்கி மோசடியை நீரவ் மோடியும், அவரது உறவினரான மெஹுல் சோக்ஸியும் இணைந்து நிகழ்த்தியுள்ளனர். மத்திய அமைச்சரவையில் முக்கியமானவரான பியூஸ் கோயலுக்கு எதிராக எழுந்த கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை பதில் கிடையாது. முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கேட்டுக்கொண்டதற்கிணங்க வாராக் கடன்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சமர்ப்பித்துள்ளார். அதில் வாராக் கடன்கள் உருவாவதற்கான காரணங்களை பட்டியலிட்ட அவர், மோசடி கடனாளிகளின் பட்டியலை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி ஒன்றிரண்டு பேர் மீதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும்போது வலியுறுத்தியதாகவும், அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இவை எல்லாவற்றையும் விழுங்கும் வகையில் ரஃபேல் விமான ஒப்பந்த ஊழல் வெளியானது. இந்த பரிவர்த்தனையில் சுமார் 35,000 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குற்றம்சாட்டியுள்ள பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சர் அருண் சோரி, “குற்றவியல் துர்நடத்தை, அரசுப் பதவியை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் நாட்டின் பாதுகாப்பை சீர்குலைத்தல் உள்ளிட்டவை நடந்திருப்பதை அப்பட்டமாகக் காட்டும் ஒரு எடுப்பான முறைகேடுதான் இந்த ஒப்பந்தம். இதற்கு முன்னால் போபர்ஸ் ஊழல் எல்லாம் ஒன்றுமேயில்லை” என்று கூறியிருக்கிறார்.

அனைத்து வகையிலும் தோல்வியடைந்துள்ள பா.ஜ.க., தார்மீக நெறிகளின் பலத்தை இழந்துவிட்டது. தற்போது எதிர்கட்சிகளின் பலவீனமே அதன் பலமாக உள்ளது. எதிர்கட்சிகள் தங்களது பலவீனங்களை களைந்து அன்றாடம் பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளால் கடுமையான வெறுப்பு மற்றும் கோபத்தில் ஆழ்ந்துள்ள மக்களின் உணர்வுகளை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளாக மாற்றி மக்கள் விரோத, ஜனநாயக விரோத அரசை வீழ்த்துவது அவர்களின் கடமையாகும்.

-Goto Indexஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி

உபகண்டமான இந்தியாவில் பல கோடிக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள்.

இந்தியக் கடற்கரையின் நீளம் சுமார் 8016 கிலோ மீட்டர்கள்.

பினிஷியர்கள் (Phoenicians) கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள் ஆகியோர் கிறிஸ்து (ஈசா அலை) பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

அரபிக்கடல் கோவாவில் தொடங்கி, கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரையான மோம்பாஸா (Membasa) கடற்கரை வழியாகச் செல்கிறது. 74,56,000 சதுர கிலோ மீட்டர்களை உடைய இக்கடல் பருவகால மாற்றங்களாலும் பாதிப்புக்குள்ளாகும். இதனைப் பயன்படுத்தி பருவகாலத்திற்கு ஏற்ப காற்றின் வீச்சிற்கு ஏற்ப தங்களது கப்பல்களைச் செலுத்தி வணிகத்தை அரேபியர்கள் மேற்கொண்டதால் இக்கடலுக்கு அரபிக் கடல் என்ற பெயர் ஏற்பட்டது. (ச.சுப்பையா, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 604வது வெளியீடு, சென்னை, பக்கம் 32)

இந்தியாவின் தென்பாகத்தில் கடல் வாணிபம் செய்து வணிகத் தொடர்பு கொண்டிருந்த கூட்டத்தார் மிகுதியாக வாழும் அரபுநாட்டில் அகிலத்தின் அருட்ஜோதியாக அண்ணல் (ஸல்) தோன்றினார்கள். அவர்களது காலத்தில் இஸ்லாம் இந்தியாவில் பரவத்துவங்கியது.

ஹர்ஷரது காலம் முதல் (கி.பி. 606 -&- கி.பி. 647) கி.பி. 712ல் முகமது பின் காசிம் சிந்துப் பகுதிக்கு வருகை தந்தது வரையிலான காலத்தைப் பற்றி அறிய முக்கியச் சான்றாகத் திகழ்வது (Chachi- Nama (சாச்செ நாமா) ஆகும். இதனை ஃபத்ஹ் நாமா ((Fath-nama) தாரிக்கெ – ஹிந்த் -வ சிந்த் (Tarikhi

– Hind – Wa – Sind) என்றும் அழைப்பர். முகம்மதலீ ஹமீது அபூபக்கரால் (Mohammed Ali – i – Hamid – I- Abu Bakrkufi) அரபி மொழியில் இருந்த நூல் கி.பி. 1216இல் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.(அரபியரின் கடல் பயணம், வணிகத் தொடர்பு,- சிந்து வெற்றி குறித்து வரிவாகக் கூற இங்கு வாய்ப்பில்லை. அது பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதப்பட வேண்டிய விஷயமாகும்)

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

-Goto Index


கோவை: தீவிரவாதிகளை உருவாக்குகிறதா உளவுத்துறை?

கோவையில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்ட ஐந்து நபர்களை செப்டம்பர் 1 அன்று கோவை காவல்துறை கைது செய்ததாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. மத்திய புலனாய்வு துறை கொடுத்த தகவலை தொடர்ந்து கோவை காவல்துறையினர் ஐந்து நபர்களை மடக்கிப் பிடித்ததாக செய்திகள் வெளியாகின.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, ஓட்டேரியை சேர்ந்த சலாகுதீன், பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன், திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில், இவர்களை அழைத்துச் செல்ல வந்த கோவையை சேர்ந்த ஆசிக் ஆகியோரை காவல்துறை கைது செய்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து கோவையை சேர்ந்த பைசல் மற்றும் அன்வர் ஆகியோரை அடுத்த சில தினங்களில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விதவிதமான பரபரப்பு செய்திகளை உளவுத்துறையின் பெயரில் வழங்கி பத்திரிகைகளும் பக்கங்களை நிறைத்தன.

முதல் ஐவரையும் கோவை ரயில் நிலையத்தில் வைத்து மடக்கிப் பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்த போதும் இவர்களை சென்னையில் வைத்தே கைது செய்து காவல்துறை அழைத்து வந்ததாக உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றியதாக காவல்துறை கூறிய போதும் வழக்கமாக அவற்றை பரப்பி வைத்து புகைப்படம் எடுத்து வெளியிடும் வேலையையும் காவல்துறை செய்யவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ.) கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட விதம், காவல்துறையினரின் கூற்று ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதை முந்தைய சில வழக்குகளை மேற்கோள் காட்டி சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் செப்டம்பர் 18 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்த சந்தேகங்கள் மக்கள் மனதில் எழாமல் இல்லை.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

-Goto Index

 


உத்தர பிரதேசம் முஸ்லிம்களை குறிவைக்க மற்றுமொரு ஆயுதம்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஓராண்டில் 160 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருப்பது முஸ்லிம்களுக்கு எதிராக மற்றொரு ஆயுதத்தை உத்தர பிரதேச அரசு பிரயோகிப்பதை காட்டுகிறது

(உத்தர பிரதேசத்தை ஆட்சி செய்யும் ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு தலித்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சிக்கு வந்த நாள் முதல் செயல்பட்டு வருகிறது. இதனை ஆதாரப்பூர்வமாக நிறுவி வரும் பத்திரிகையாளர்களில் ஒருவர் நேகா தீக்ஷித். உ.பி. அரசு நடத்திய என்கௌண்டர்கள் குறித்த விரிவான பதிவை இவர் முன்னர் வெளியிட்டிருந்தார். (பார்க்க:- ஆதித்யநாத் ஆட்சியில் அளவில்லாத என்கௌண்டர்கள், புதிய விடியல் மார்ச் 16 – 31, 2018) தற்போது உ.பி. அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை எவ்வாறு தவறாக பயன்படுத்துகிறது என்பது குறித்த மற்றொரு விரிவான ஆய்வை அவர் நடத்தியுள்ளார். நேகா தீக்ஷித்தின் அனுமதியுடன் அவரின் ஆய்வு தமிழில் இங்கு வழங்கப்படுகிறது)

உத்தர பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, மார்ச் 8, 2018 அன்று, தனது ஆட்சியில் எவ்வித மதமோதல்களும் நிகழவில்லை என்று முதல்வர் அறிவித்தார். ஆனால் பத்து தினங்கள் கழித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த புள்ளிவிபரம், நாட்டில் நடைபெற்ற வகுப்புவாத மோதல்கள் மற்றும் அவற்றில் நடைபெற்ற படுகொலைகளில் உத்தர பிரதேசம் முதல் இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டியது. 2017ல் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மோதல்களில் 44 பேர் கொல்லப்பட்டனர், 540 பேர் காயமடைந்தனர். 2016ல் 29 நபர்களும் 2015ல் 22 நபர்களும் மதமோதல்களில் கொல்லப்பட்டனர் என்பதையும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டின. வன்முறைகள் அதிகரித்தது மட்டுமின்றி இந்த மோதல்களில் ஆதித்யநாத்தின் இந்து யுவ வாகினி மற்றும் உள்ளூர் பா.ஜ.க.வினரின் பங்களிப்புகள் குறித்தும் தெரிய வந்தது. இவர்களுக்கு எதிராக வலிமையான சட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

-Goto Index

 


இந்துத்துவத்தின் முகமூடி

தச்சார்பற்றவாதிகளை திருப்திப்படுத்த இந்துத்துவாவினர் எக்காலத்திலும் சில தந்திரங்களை கையாளுவது வழக்கம். அதிலொன்று மிதவாத இந்துத்துவம். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மிதவாத இந்துத்துவத்தின் தூதுவராக கருதப்படுகிறார். எண்பதுகளின் இறுதியிலும், தொன்னூறுகளின் துவக்கத்திலும் இந்துத்துவ பாசிசம் இந்தியாவில் பரப்புரை செய்த வகுப்புவாத நச்சுக்கருத்துகளும் அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளும், இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைத்து மத்தியில் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவின. மதச்சார்பற்ற அணியினரை இந்துத்துவ அரசியலின் கூட்டாளிகளாக மாற்றுவதற்கு வாஜ்பாய் என்ற மிதவாத இந்துத்துவம் களம் புகுந்தது. அந்த வகையில் பாபரி மஸ்ஜிதை இடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லால்கிருஷ்ண அத்வானி தீவிர இந்துத்துவ வாதியாகவும், வாஜ்பாய் மிதவாத இந்துத்துவ வாதியாகவும் மாறினர்.

துவக்கத்தில் மதச்சார்பற்ற கட்சிகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு நடத்திய நாடகத்திற்கு ஒரு மிதவாத இந்துத்துவவாதி தேவைப்பட்டார். அந்த வகையில்தான் 90களின் துவக்கத்தில் ரதயாத்திரையை நடத்திய அத்வானி தீவிர இந்துத்துவ வாதியானார். உண்மையில், சங்கபரிவாரின் ‘இறுதி லட்சியம்’ நோக்கியப் பயணத்தில் அத்வானியும் வாஜ்பாயும் வெவ்வேறு பாதையில் பயணித்து தங்களிடம் ஒப்படைத்த பணியை மேற்கொண்டனர்.

இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள், ஒருவர் கடும்போக்காளர் மற்றவர் மிதவாதி என்பது முற்றிலும் புனையப்பட்ட தோற்றம். இதை மக்கள் நம்ப வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கேற்ப காய்கள் நகர்த்தப்பட்டன.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

-Goto Index

 


 

யூ.ஏ.பி.ஏ. கருப்புச் சட்டம் ஒரு பார்வை

கருப்புச் சட்டம் என்றால் என்ன?

“நூறு குற்றவாளிகள் நீதியின் பிடியில் இருந்து தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக் கூடாது.” இது நம் நாட்டு சுதந்திரத்திற்கு பாடுபட்ட காந்தியடிகள் கூறியது. இந்த தத்துவம் நம் நாட்டில் மட்டுமல்ல பொதுவாக உலகில் எந்த நாட்டு சட்டமானாலும் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஒரு சில நியதிகளை வகுத்துள்ளனர். குற்றம் சுமத்தப்பட்டவராக ஒருவரை அரசு அல்லது காவல்துறை கருதும் பட்சத்தில், குற்றம் சுமத்தப்பட்டவரை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் அந்த குற்றம் சுமத்தப்பட்டவர் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க போதிய வாய்ப்புகளை கொடுப்பது போன்ற நியதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க போதிய வாய்ப்புகள் கொடுக்கப்படாத பட்சத்தில் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இத்தகைய நியதிக்கு நேர் மாற்றமாக அரசு மற்றும் காவல்துறையினருக்கு கண்மூடித்தனமாக செயல்பட அதிகாரம் அளிக்க வழிவகுக்கும் சட்டங்கள் கருப்புச் சட்டங்கள் என்று மனித உரிமை ஆர்வலர்களால் அழைக்கப்படுகிறது.

யு.ஏ.பி.ஏ. கருப்புச் சட்டத்தின் வரலாறு

1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், இந்திய நீதிமன்றங்கள் மக்களின் கருத்துரிமை (Freedom of Expression), மக்கள் அமைப்பாக செயல்படும் உரிமை (Freedom of Assosiation) ஆகியவற்றிற்கு மதிப்பளித்து இவற்றை வலுப்படுத்தும் விதத்தில் பல்வேறு தீர்ப்புகள் வழங்கின.

1947 – 51 காலகட்டத்தில் விவசாயிகள் போராட்டம், கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த தெலுங்கானா இயக்கம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் போராட்டங்கள் நடைபெற்றன.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட சாமானிய மக்கள் மீதும், கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மீதும் இராணுவ அடக்குமுறையை பிரயோகித்தது அரசு.

ஆனால் இதே காலகட்டத்தில் தான் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் தேச பிதா காந்தியை சுட்டுக் கொன்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவ வலதுசாரி கட்சிகளும் அமைப்புகளும் (ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கம், இதர சங்கபரிவார பிரிவுகள்) பல்வேறு கலவரங்களை நடத்தினர். ஆனால் சங்கபரிவார அமைப்புகள் மீது அரசு இராணுவ அடக்குமுறையை பிரயோகிக்கவில்லை.

ஜனநாயக அடிப்படையிலான குடிமக்களின் உரிமைகளை பறிப்பதற்காகவும், தங்களுக்கு எதிரான அரசியல் சவால்களை முறியடிப்பதற்காகவும் பொது அமைதி, சட்ட ஒழுங்கு, தேசப் பாதுகாப்பு ஆகிய ஆயுதங்களை சட்டம் என்ற போர்வையில் சாமானிய பொதுமக்கள் மீது திணிக்க துணிகிறார்கள் சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

-Goto Index


UAPA கருப்புச் சட்டத்தை நீக்க தேவை மக்கள் புரட்சியே!

மக்களின் உரிமைகளை பறிக்கும் கருப்புச் சட்டங்களை எதிர்த்துப் போராடுவது ஒரு மக்கள் இயக்கத்தின் மீதான தார்மீக கடமை. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல ஆண்டுகளாகவே யு.ஏ.பி.ஏ. (Unlawful Activities Prevention Act – UAPA) என்ற கருப்புச் சட்டத்தை எதிர்த்து பல போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் இந்திய அளவில் நடத்தி உள்ளது. நமது தேசத்தில் எங்கெல்லாம் இனவெறிக்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றதோ, அங்கெல்லாம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அவர்களோடு இணைந்து நின்றுள்ளது. யு.ஏ.பி.ஏ. என்ற கருப்புச் சட்டத்திற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏன் இந்த தொடர் முயற்சி எடுத்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட, ஜனநாயகத்தின் மாண்புகளை பேணக்கூடிய, கருத்துரிமையின் மீது நம்பிக்கை கொண்ட யாரையும் நசுக்கக்கூடிய சட்டம்தான் இந்த யு.ஏ.பி.ஏ. என்ற கருப்புச் சட்டம். இந்த சட்டத்தை பயன்படுத்தி யாரையும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம். எங்கு வைத்தும் கைது செய்யலாம், அலுவலகங்கள், வீடுகளில் எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம். இதற்காக எந்த நீதிமன்ற உத்தரவும் தேவையில்லை. ஒரு காவல்துறை அதிகாரிக்கு உங்கள் மீது சிறிய சந்தேகம் இருந்தால் போதும், உடனடியாக கைது செய்யலாம். உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. சமீபத்தில் கோவையில் ஐந்து இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டது இப்படித்தான். எல்லா விதமான மனித மாண்புகளையும் குழிதோண்டி புதைக்கும் காட்டுமிராண்டிச் சட்டம் என்பதால்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

1908ம் ஆண்டு இயற்றப்பட்ட Criminal Ammendment Law என்ற சட்டத்தை பயன்படுத்திதான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஜார்கண்ட் மாநிலத்தில் தடைசெய்யப்பட்டது. இறைவனின் உதவியை கொண்டு சட்டத்தின் மூலம் அந்தத் தடையை உடைத்து மீண்டும் ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் தனது பணிகளை துவங்கியுள்ளது. ஜார்கண்டில் உள்ள மலைவாழ் மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக புத்தகங்களை வழங்கி அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் முடிவெடுத்தது. அதற்காக தொடர்ந்து பள்ளி செல்வோம் என்ற பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னெடுத்து செல்கின்றது அந்த பிரச்சாரத்தின் வாயிலாக அந்த மக்களை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தது. யாரெல்லாம் அறிவு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்களோ அவர்களை இந்த பாசிச பா.ஜ.க. அரசுக்கு பிடிக்காது. அதனால் தான் பாப்புலர் ஃப்ரண்ட்டை தடை செய்தது.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

-Goto Index


அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு இந்தியா பிரடெர்னிடி ஃபோரத்தின் சேவை!

லப்பைக்! அல்லாஹூம்ம லப்பைக்! என்ற தல்பியாவை உரக்க கூறிக்கொண்டு 23 இலட்சம் ஹாஜிகள் இவ்வாண்டு தங்களது இலட்சியக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற ஒன்று கூடினர். இதில் 19,99,496 ஹாஜிகள் வெளிநாட்டிலிருந்தும் 2,40,747 பேர் உள்நாட்டிலிருந்தும் வந்திருந்தனர். இந்தியாவிலிருந்து அரசின் ஹஜ் கமிட்டியின் சார்பாக 1,28,702 ஹாஜிகளும் தனியார் நிறுவனங்களின் சார்பாக 46,323 ஹாஜிகளும் வருகை புரிந்துள்ளனர்.

சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு சேவைகள், ஆலோசனைகள், விழிப்புணர்வுகள் என தன்னார்வ பணிகளை செய்துவரும் தன்னாட்சி அமைப்புதான் இந்தியா பிரடர்னிடி ஃபோரம் (IFF). ஹஜ்ஜூடைய காலங்களில் இந்திய ஹாஜிகளுக்கான சேவைகளை கடந்த 14 வருடங்களாக செய்துவருகின்றது.

ஹாஜிகளுக்கான சேவையில் இவ்வருடம் மர்கஸீல் ஹையா மற்றும் இந்தியத் தூதரகத்தின் ஆதரவோடு தனது 1500 தன்னார்வ தொண்டர்களை களமிறக்கியது இந்தியா பிரடெர்னிடி ஃபோரம். இச்சேவை இந்தியாவிலிருந்து வரும் முதலாவது ஹஜ் விமானத்திலிருந்து துவங்கி அவர்கள் அனைவரும் இந்தியா செல்லும் வரை தொடரும் என IFF ன் மேற்கு மண்டல மாகாணத் தலைவர் பைசுத்தீன் தெரிவித்தார்.

IFF தொண்டர்கள் ஹாஜிகள் தங்களது இருப்பிடங்களுக்கு சரியாக சென்று சேர்வதற்கு வழிகாட்டியாகவும், வயது முதிர்ந்த ஹாஜிகளையும் நோய்வாய்பட்ட ஹாஜிகளையும் வீல் சேர் மூலம் அவர்களது இருப்பிடங்களுக்கு செல்ல உதவி செய்வதிலும், தண்ணீர் மற்றும் செருப்பு போன்றவற்றை வழங்குபவர்களாகவும் காணப்பட்டனர்.

அரஃபா தினத்தன்று 11 கேப்டன்களின் தலைமையில் 250 தன்னார்வ தொண்டர்கள் மினா மற்றும் அரஃபா பகுதிகளில் சேவைகள் செய்தனர். ஹாஜிகளுக்கு அவர்களது கூடாரங்களை கண்டறியவும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு உதவிகளையும் செய்து வந்தனர்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும் Goto Index


கேஸ் டைரி

அஜ்மீர் தர்கா வழக்கு இரண்டு ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளுக்கு ஜாமீன்

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட இரண்டு ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 29 அன்று ஜாமீன் வழங்கியுள்ளது. அக்டோபர் 11, 2007 அன்று அஜ்மீர் தர்காவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் மூவர் கொல்லப்பட்டனர், 17 நபர்கள் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு குழுமமான என்.ஐ.ஏ. மார்ச் 22, 2017 அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரச்சாரக்குகளான தேவேந்திர குப்தா மற்றும் பாவேஷ் பட்டேல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. மூன்றாவது குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் சுனில் ஜோஷி டிசம்பர் 2007ல் மர்ம முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சுவாமி அசிமானந்தா உள்ளிட்ட ஏழு நபர்களை என்.ஐ.ஏ. நீதிமன்றம் விடுவித்தது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட முதல் குண்டுவெடிப்பு வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தேவேந்திர குப்தா மற்றும் பாவேஷ் பட்டேல் ஆகியோர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பு முடியும் வரை இருவருக்கும் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அசிமானந்தா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத என்.ஐ.ஏ. தற்போதும் ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை. ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக தர்கா கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள அஜ்மீர் வருகை தந்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூட்டத்திற்கு வருவதை தவிர்த்து விட்டார்.

Goto Index

கௌரி லங்கேஷ் கொலை: குற்றவாளியை உறுதி செய்த தடயவியல் ஆய்வுகள்

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷை சுட்டுக் கொலை செய்தவன் பரசுராம் வாக்மாரே என்பதை தடயவியல் சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன. கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் மற்றும் வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு அமைப்பினர் சம்பவத்தின் மாதிரியை நிகழ்த்திக் காட்டி பதிவு செய்த வீடியோகள் ஆகியவற்றை ஆய்வு செய்த குஜராத்தின் தடயவியல் ஆய்வகம் இரண்டு வீடியோகளிலும் உள்ளது ஒரே நபர்தான் என்பதை உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மஹாராஷ்டிரா மற்றும் கோவாவை சேர்ந்தவர்கள் என்றும் சிறப்பு புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பான்மையினர் சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்தவர்கள்.

இந்த குழுவில் இன்னும் அதிகமானவர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் குறித்த தகவல்கள் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தம் 26 நபர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ள இந்த கும்பல் இதுவரை தபோல்கர், பன்சாரரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோரை கொலை செய்துள்ளது என்றும் அவர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர்.

Goto Index

மாலேகான் வழக்கு: புரோகித்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

2008ல் மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படையினர் தன்னை கடத்திச் சென்று, சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்தது குறித்து நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் புரோகித் வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும் கூறி நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு புரோகித்தின் மனுவை நிரகாரித்தது.

மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் செப்டம்பர் 29, 2008 அன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆறு நபர்கள் கொல்லப்பட்டனர், நூறு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் புரோகித், சாத்வி பிரக்யா சிங், சுதாகர் திரிவேதி, சமீர் குல்கர்னி, மேஜர் ரமேஷ் உபாத்யாயா, அஜய் ரகிர்கர் மற்றும் சுதாகர் சதுர்வேதி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இராணுவத்தில் தான் பணி செய்ததை பெருமை பொங்க மனுவில் குறிப்பிட்ட புரோகித் முந்தையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்த சிலரால் அரசியல் காரணங்களுக்காக தான் பழிவாங்கப்பட்டதாகவும் கூறி மனுவில் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தி இருந்தார். ஆனால் இதில் எதையும் ஏற்க மறுத்த நீதிமன்றம் புரோகித்தின் மனுவை நிராகரித்தது.

இதனிடையே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரப்பட்ட மனுவை பம்பாய் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுவும் புரோகித்திற்கு மிகப்பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தன்னை விசாரிக்க மாநில அரசாங்கம் கொடுத்த அனுமதியை எதிர்த்து புரோகித் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மிருதுளா பட்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு புரோகித்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. ஆனால் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் புரோகித் மீது வழக்கு பதிவு செய்ய வழங்கப்பட்ட அனுமதியின் செல்லுபடி நிலை குறித்து விசாரிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தை உத்தரவிட்டது. இதன் காரணமாக இந்த வழக்கில் புரோகித் உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Goto Index

சொஹ்ராபுதீன் ஷேக் என்கௌண்டர்: வன்சாரா உள்ளிட்டவர்கள் விடுதலையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

சாஹ்ராபுதீன் ஷேக் என்கௌண்டர், அவர் மனைவி கொலை மற்றும் துளசிராம் பிரஜாபதி என்கௌண்டர் வழக்குகளில் குஜராத் முன்னாள் டி.ஐ.ஜி.வன்சாரா (குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர்), ராஜஸ்தான் காவல்துறை அதிகாரி எம்.என்.தினேஷ், குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி ராஜ்குமார் பாண்டியன் (உதய்பூர் மாவட்ட கண்காணிப்பாளர்), என்.கே.அமின் (அகமதாபாத் க்ரைம் பிரிவு டி.எஸ்.பி.) மற்றும் தல்பத் சிங் ரத்தோட் (கான்ஸ்டபிள், ராஜஸ்தான்) ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை பம்பாய் உயர் நீதிமன்றம் செப்டம்பர் 10 அன்று தள்ளுபடி செய்தது.

வழக்குகளில் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சொஹ்ராபுதீனின் சகோதரன் ருபாபுதீன் மற்றும் சிபிஐ ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஏ.எம். பதர், இவர்கள் ஐவரும் விடுவிக்கப்பட்டது சரிதான் என்று தீர்ப்பளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றத்துடன் தொடர்புபடுத்தும் நேரடி சாட்சியங்கள் இல்லை என்றும் அரசு ஊழியர்களை விசாரணை செய்வதற்கு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 197ன் கீழ் அனுமதி பெறப்படவில்லை என்றும் கூறி வழக்குகளை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி விபுல் அகர்வால் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதற்கும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இவரை விடுவிப்பதை மறுத்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதும் நீதிபதி லோயாவின் மரணமும் விரிவாக நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது. நல்ல முன்னேற்றத்துடன் சென்று கொண்டிருந்த இத்தகைய போலி என்கௌண்டர் மற்றும் இந்துத்துவ தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள் 2014ற்கு பின் மந்த நிலைக்கு சென்றுள்ளதையும் முக்கிய குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதையும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 38 நபர்களில் 15 பேரை விசாரணை நீதிமன்றம் விடுவித்துவிட்டது. மற்றவர்களுக்கு எதிரான வழக்கு மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Goto Index

தபோல்கர் கொலை வழக்கு: கலாஸ்கருக்கு சிபிஐ காவல்

சென்ற மாதம் மஹாராஷ்டிராவின் நல்லாசோப்பாராவில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவரான சரத் கலாஸ்கருக்கு நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய செசன்ஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கலாஸ்கர் மற்றும் சச்சின் அந்தூரே ஆகிய இருவரும்தான் தபோல்கரை ஆகஸ்ட் 20, 2013 அன்று சுட்டுக் கொன்றதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

ஆயுதங்களை தயாரிப்பதில் தேர்ச்சி பெற்ற கலாஸ்கருக்கு கோவிந்த் பன்சாரே மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோர் வழக்கிலும் தொடர்பிருக்கலாம் என்று சிபிஐ சந்தேகம் எழுப்பியுள்ளது. தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோரை சனாதான் சன்ஸ்தா உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய இந்துத்துவ தீவிரவாதிகள் திட்டமிட்டு கொலை செய்ததை இந்த வழக்குகளை விசாரித்து வரும் விசாரணை அமைப்புகள் நிறுவி வருகின்றன.

-Goto Index


என் புரட்சி: 13. கம்பிகளுக்குப் பின்னால்…

பாஸ்டனில் ஷார்ட்டி, ஹார்லெம்மில் சேமி மாமா போல சிறைக்குள்ளும் எனக்கு ஒரு நட்பு கிடைத்தது. அவர் பெயர் பிம்பி. கொள்ளை வழக்கில் தண்டனை பெற்று உள்ளே வந்த பிம்பி சிறைக் கைதிகளுக்கு ஆதர்சமாக விளங்கினார். கறுப்பினக் கைதிகளை மதிக்காத, வெள்ளை காவலர்கள்கூட பிம்பியின் கருத்துகளைக் கேட்டனர்.

அதிகம் வாசிக்கும் பழக்கம் கொண்டவர், மனித நடத்தைகள் குறித்த உளவியலில் சிறந்த அறிவு பெற்றவர். என் மீதும் சாதகமான பாதிப்பைச் செலுத்தினார் பிம்பி. ஆனால் ஆதிக்கம் செலுத்த நான் அனுமதித்தது இல்லை. என்னைப் பற்றி, நான் சிறைக்கு வந்த பின்னணியைப் பற்றி முழுமையாக என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஒரு நாள் மாலை நேரத்தில், சிறை வளாகத்தில் என்னைச் சந்தித்த அவர், “மால்கம், உனக்கு அறிவிருக்கு… அதைப் பயன்படுத்திக்க”என கேட்டுக் கொண்டார்.

அவரது கண்களைப் பார்த்தேன். அவருக்கு பதில் எதுவும் சொல்லவில்லை.

“நீ ஏன் விட்டுப் போன படிப்பை மேற்கொண்டு படிக்கக் கூடாது? ஜெயில்ல இருக்கிற லைப்ரரியையும் யூஸ் பண்ணிக்கோ”. என் மீது அக்கறை காட்டினார். தனிப்பட்ட முறையில் அல்ல. கறுப்பர்களின் நலனில் அக்கறை கொண்டதாகவே அவரது ஆலோசனை இருந்தது.

வெளிப்படையாக பேசும் இயல்பு கொண்ட பிம்பியின் இந்த அறிவுரை எனக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் கல்வியைப் பற்றி பிம்பி சொன்ன வார்த்தைகளை என்னால் சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

-Goto Index


 

மனசாட்சியின் பெருங்குரல்


சோஃபியாவின் குரல்

வானமுகட்டிலிருந்து

உலகம் முழுவதும்

பேரதிர்வாய் பரவிக் கொண்டிருக்கிறது

 

அது சோஃபியாவின் குரல் மட்டுமல்ல

மாட்டிறைச்சியின் பெயரால்

அடித்தே கொல்லப்பட்ட

அக்லாக்களின் அறச்சீற்றத்தின் குரல்

 

வகுப்புவாதக் கயிறு

இறுக்கிக் கொன்ற

ரோஹித் வெமூலாக்களின்

பெருங்குரல்

 

கோயில் கருவறையில்

சிதைக்கப்பட்ட

ஆசிஃபாக்களின்

துயர் நிரம்பிய வேதனைக்குரல்

 

கோரக்பூர் மருத்துவமனையில்

மூச்சுத் திணறிச்

செத்துமடிந்த

நூற்றுக்கணக்கான பிஞ்சுகளின்

இதயத்திலிருந்து எழும்பிய

சாபக்குரல்

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

-Goto Index


 

குர்ஆன் பாடம்: சான்றோர்களின் (ஸாலிஹீன்களின்) வழி

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள்.- இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.”(அல்குர்ஆன் 4:69)

அல்லாஹ்வின் திருப்தியும், மறுமை வெற்றியுமே எந்தவொரு நம்பிக்கையாளரின் உச்சபட்ச லட்சியமாகும். அதற்கான இரு வழிகளை இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அடிப்படையில் குர்ஆன், சுன்னாவின் (நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம்) வழி, அதனடிப்படையில் நபிமார்கள் (இறைத்தூதர்கள்), ஸித்தீகீன்கள் (உண்மையாளர்கள்), ஷுஹதாக்கள் (உயிர் தியாகிகள்), ஸாலிஹீன்கள் (சான்றோர்கள்) ஆகியோர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை, அல்லாஹ்வின் கட்டளைகளையும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும் பின்பற்றுவதன் மூலம் நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களின் வழியை தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்பதை இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது.

நபிமார்கள், ஸாலிஹீன்களின் தொன்மையான வரலாற்றை குர்ஆனோ, ஹதீஸோ கூறும்போதுதான் அது உண்மையானதாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும் இருக்கும். குர்ஆனுக்கும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளுக்கு முரணான வரலாற்று சம்பவங்கள் ஏராளம் கூறப்படுகின்றன. அவை தவிர்க்கப்பட வேண்டும்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

-Goto Index


-Goto Index

 

Comments are closed.