புதிய விடியல் – 2018 செப்டெம்பர் 01-15

0

 

தலைப்புகள்

 

அறிவிக்கப்படாத அவசர நிலையில் தேசம்!


 

மாற்றுக் கருத்துகளை நசுக்கும் மத்திய அரசு!


 

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைது: ஜனநாயக படுகொலை! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!


 

ஜார்கண்ட்: பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை நீங்கியது!


 

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் மோசடிகள்


 

கருப்பு பணம் எங்கே?


 

மீண்டெழும் கேரளா!


 

நிலம் மீட்கும் யுத்தத்தில் வீர மங்கைகள்


 

மகளிரை பாதிக்கும் கர்பப்பை புற்றுநோய்


 

அஸ்ஸாம்: அவர்கள் யாருக்கும் தேவையில்லை!


 

தேசம் மறந்த குடிகள்!


 

காவித் தீவிரவாதிகளுக்கு கடிவாளம் எப்போது?


 

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்


 

சீறாவின் மகத்தான பாய்ச்சல்


 

என்புரட்சி


 

கெட்டியான கயிறு குர்ஆன் பாடம் 2


 

 

அறிவிக்கப்படாத அவசர நிலையில் தேசம்!

பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக டெல்லி, ஜார்கண்ட், மும்பை, மஹராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள பிரபல மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டு சிலர் கைதும் செய்யப்பட்ட செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.

டெல்லியிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமான கௌதம் நவ்லகா, ஹைதராபாத்திலுள்ள கவிஞரும் செயற்பாட்டாளருமான வரவர ராவ், மும்பையிலுள்ள செயற்பாட்டாளர் வெர்னன் கொன்சால்வஸ் மற்றும் அருண் ஃபெரைரா, டெல்லியிலுள்ள சிவில் உரிமைகள் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் மற்றும் ராஞ்சியிலுள்ள ஸ்டான் சுவாமி, தலித் அறிவுஜீவியும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்யும்டே ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன.

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டதற்கு மனித உரிமை அமைப்புகளான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் மற்றும் ஆக்ஸ்ஃபாம் இந்தியா கண்டனங்களை பதிவு செய்துள்ளன.கைது நடவடிக்கையில் நடைமுறை ஒழுங்குகளை கடைப்பிடிக்கவில்லை என்று தேசிய மனித உரிமை ஆணையமும் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஜூன் 6-ஆம் தேதி வழக்கறிஞர் சுரேந்திரா காட்லிங், தலித் பத்திரிகையாசிரியர் சுதிர் தவாலே, நாக்பூர் பல்கலைக்கழக பேராசிரியை ஷோமாசென், மகேஷ் ராவ்த், கேரளாவைச் சேர்ந்த ரோனா வில்சன் முதலான தலித் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களை மஹராஷ்டிர அரசு கைது செய்தது. அவர்கள் தற்போது ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்’ (UAPA) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக முந்தைய கைதுகளின் போதும் இப்போதும் காவல்துறை கூறியது. பல ஆர்வலர்களும், அமைப்புகளும் இந்த குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை குறித்து தங்களின் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். குறைந்து வரும் செல்வாக்கினை நிலைநிறுத்தவும், மக்களிடம் அனுதாபத்தை சம்பாதிக்கவும் மோடி அரசு இது போன்ற நாடகங்களை நடத்துவதாக அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மத்திய அரசின் அனுமதியுடன் மஹராஷ்டிரா காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமக்களின் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும். கைதுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் ஐந்து பேரையும் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை அவர்களது சொந்த வீட்டில் காவலில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

எதிர்ப்பாளர்களை பயங்கரமாக சித்தரித்து வேட்டையாட சில பிரத்யேக வார்த்தைகளை பயன்படுத்துவது சர்வாதிகார அரசுகளின் பாணியாகும். அண்மைக்காலமாக மனித உரிமை மீறல்கள் மற்றும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் நகரவாசிகளான கல்வியாளர்களையும் சமூக செயல்பாட்டாளர்களையும் குறிப்பதற்கு ‘நகர்ப்புற மாவோயிஸ்ட்கள்’ என்ற சொற்றொடரை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அவ்வாறு நகர்ப்புற மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தப்பட்டவர்களைத்தான் தற்போது மோடி அரசு வேட்டையாடி வருகிறது. எல்லா நகரங்களிலும் பரஸ்பரம் தொடர்போடு உதவியற்றவர்களுக்கு உதவும் கரங்களாக செயல்படும் இத்தகைய மனித உரிமை ஆர்வலர்களை கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் அரசுக்கு எதிரான குரல்களை ஒடுக்கிவிடலாம் என்று மோடி தலைமையிலான சங்பரிவார அரசு கருதுகிறது.

ஜனநாயகவாதிகளையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும், பத்திரிகையாளர்களையும் பொய்வழக்குகளை சுமத்தி சிறையில் அடைப்பதன் மூலம் மோடி அரசு மற்றும் பா.ஜ.க ஆளும் மாநில அரசுகள் நாட்டை அவசர நிலையை நோக்கி கொண்டு செல்கின்றன. எதிர்குரல்களை எழுப்பாத, கட்டுப்பட்டு நடக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க பாசிச ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். இவர்களின் சதித்திட்டங்களை அடையாளம் கண்டு அதனை பயமின்றி எதிர்த்து போராடுவதற்கு ஜனநாயக உணர்வுடைய அனைவரும் களமிறங்கவேண்டும். பொய் வழக்குகளை வாபஸ் பெற்று மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிந்தனையாளர்களை விடுவிக்க அரசுக்கு அனைத்து கட்சிகளும் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

Subscribe to read full article

Goto Index


மாற்றுக் கருத்துகளை நசுக்கும் மத்திய அரசு!

இந்தியாவில் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருக்கிறது. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் பதவியேற்ற சில நாட்களில் இருந்து இந்த கருத்தை நாம் பல்வேறு மட்டங்களில் இருந்து கேட்டு வருகிறோம். மக்களின் இந்த கருத்தை பொய்ப்பிக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதை அதன் தொடர் செயல்பாடுகள் உணர்த்தி வருகின்றன. மாற்றுக் கருத்துகளை கொண்டவர்களை ஏற்றுக் கொள்ளும் அல்லது அங்கீகரிக்கும் பக்குவம் இல்லாத சங்கபரிவார்கள் காவல்துறை, மத்திய விசாரணை அமைப்புகள், நக்கிப் பிழைக்கும் ஊடகங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு அவர்களை ஒடுக்கி வருகின்றனர். மனித உரிமை மீறல்களும் மக்களின் உரிமை பறிப்புகளும் அதிகரிக்கும் போது அதனை எதிர்த்து குரல் கொடுப்பது சிவில் சமூகங்களின் தார்மீகக் கடமை. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய அரசாங்கம் சிவில் சமூகத்தை சேர்ந்த செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் ஆகியோரை மிரட்டி வருகிறது.

ஆகஸ்ட் 28 அன்று நாட்டின் பல்வேறு நகரங்களில் சோதனைகளை நடத்திய புனே காவல்துறை ஐந்து செயல்பாட்டாளர்களை கைது செய்தது. மஹாராஷ்டிராவின் பீமா கோரேகானில் ஜனவரி 1 அன்று நடைபெற்ற வன்முறை மற்றும் அதற்கு முந்தைய தினம் புனேயில் நடத்தப்பட்ட எல்கார் பரிஷத் கூட்டம் ஆகியவற்றை கைதிற்கான காரணங்களாக காவல்துறை கூறியது. 1818ல் பீமா கோரேகானில் நடைபெற்ற யுத்தத்தில் தலித்களின் பங்களிப்பை கொண்டாடும் முகமாக எல்கார் பரிஷத் கூட்டம் நடத்தப்பட்டது.எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்ட செயல்பாட்டாளர்களின் வன்முறை பேச்சுதான் பீமா கோரேகான் வன்முறைக்கு காரணம் என்றும் காவல்துறை கூறியது.
ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் அமைதியாகக் கூடிய தலித்கள் மீது சம்பாஜி பிடேயின் ஸ்ரீ சிவபிரதிஸ்தான் மற்றும் மிலிந்த் ஏக்போடேயின் இந்து ஏக்தா மன்ச் ஆகிய இரு வலதுசாரி இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட மிலிந்த் ஏக்போடேயை சில நாட்களிலேயே காவல்துறை விடுவித்தது. தனது குரு என்று மோடி வர்ணிக்கும் சம்பாஜி பிடே மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பீமா கோரேகான் வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார்.

அதன் பின் தனது கைதின் திசையை மாற்றிய காவல்துறை தலித் செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை கைது செய்ய ஆரம்பித்தது. ஜூன் மாதம் சுரேந்திரா காட்லிங், சோமா சென், ரோனா வில்சன், மகேஷ் ராவ்த் மற்றும் சுதிர் தவாலே ஆகியோரை காவல்துறை கைது செய்தது. எல்கார் பரிஷத் கூட்டத்தை நடத்தியதற்காகவும் வன்முறையை தூண்டும் பேச்சுகளை பேசியதற்காகவும் இவர்களை கைது செய்ததாக காவல்துறை கூறியது. அத்துடன் பிரதமர் மோடியை கொலை செய்யவும் இவர்கள் திட்டமிட்டதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது. இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதங்கள் மற்றும் ஜனவரி 8 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இவர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை கூறியது.

Subscribe to read full article

Goto Index


மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைது: ஜனநாயக படுகொலை! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

தமிழக வளங்களை பாதுகாப்பதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிராகவும், ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடி வரும் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விமானம் மூலம் நாடு திரும்பினார். அவர் பெங்களூர் விமான நிலையத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இத்தகைய ஜனநாயக விரோத கைதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் திருமுருகன் காந்தியை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு முன்பும் அவர் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்துள்ளனர். நீதி கேட்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்தது தேச விரோத செயலா என்பதை தமிழக அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும். சமீப காலமாக தமிழக மக்களின் உரிமைக்காக போராடும் பல்வேறு இயக்க தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் குறிவைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கை தொடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய செயல் கடும் கண்டனத்திற்குரியது. இது போன்ற செயலை தமிழக அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற்று அவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Goto Index


ஜார்கண்ட்: பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடை நீங்கியது!

ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது மாநில பாரதிய ஜனதா அரசாங்கம் பிப்ரவரி மாதம் விதித்த தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ராஞ்சி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ரங்கன் முகோபாத்யாயை அமர்வு ஆகஸ்ட் 27 அன்று வழங்கிய உத்தரவில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை நீக்கியது.

கிரிமினல் திருத்த சட்டம், 1908 (Criminal Law Amendment Act) சட்டத்தின் 16வது பிரிவின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்தை மாநிலத்தில் தடை செய்வதாக மாநிலத்தை ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு பிப்ரவரி 21 அன்று அறிவித்தது. மாநிலத்தில் இரண்டு வருடங்களாக செயல்பட்டு வந்த இயக்கத்தை பா.ஜ.க. அரசு தடை செய்ததற்கு முக்கிய காரணம் பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்டு வந்த மனித உரிமை பாதுகாப்பு நடவடிக்கைகளே என்பதை பலரும் சுட்டிக் காண்பித்தனர். மாநிலத்தில் குண்டர்கள் நடத்தி வரும் அக்கிரமங்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் உறுதியான சட்டப் போராட்டங்களை நடத்தி வந்ததுடன் அதில் நல்ல முன்னேற்றத்தையும் கண்டது. இதனை கண்டு பொறுக்க இயலாத பா.ஜ.க. அரசாங்கம் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை நீக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் போராட்டங்களை நடத்தின. தமிழகத்தில் மார்ச் 16 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன.
ஜார்கண்டில் இயக்கம் மீதான தடையை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய உறுதியான சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே இந்த தீர்ப்பு பார்க்கப் படுகிறது. தடையை எதிர்த்து இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் வதூத் வழக்கை தொடுத்தார். தடைக்கான சரியான காரணங்களை தெரிவிக்க மாநில அரசாங்கம் தவறி விட்டது என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். இயக்கம் மீதான தடையை ரத்து செய்த நீதிமன்றம் அது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்தது.

Subscribe to read full article

Goto Index


 

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் மோசடிகள்

பிரதமரின் புதிய வேளாண் காப்பீடு திட்டத்தை (Pradhan Mantri Fasal Bima Yogana) ரூ. 17,500 கோடியில் கர்நாடகா மாநிலம் பெலகாவில் 18.02.2016 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வழக்கம்போல் ஆரவாரமாக மிகப்பெரிய விளம்பரத்துடன் திட்டம் தொடங்கப்பட்டது. தனது வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாக பிரதமர் மோடி தான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த திட்டத்தின் பெருமைகளை பேசி வருகின்றார். விவசாயிகளின் வாழ்வில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது இந்த திட்டம் என்று பெருமை கொள்கிறார். உண்மையில் இந்த பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு பயன்தந்திருக்கிறதா என்று தொடர்ந்து பலராலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும் எதையும் காதில் வாங்காமல் இந்த திட்டம் பெரும் வெற்றி பெற்று விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று காட்டுவதில் அதிதீவிர முனைப்பு காட்டுகிறார் திருவாளர் மோடி. தோல்வியைக்கூட வெற்றியாக சித்தரிக்க தெரிந்த வாய்ச்சொல் வீரர் ஆயிற்றே அவர்.

புதிய காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தவுடன் மக்களிடம், குறிப்பாக விவசாயிகளிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவானது என்பதை மறுப்பதற்கில்லை. ‘‘கரும்பு மற்றும் வாழைக்கு 5 சதவீதமும், கரிப் பருவத்தில் பயிரிடப்படும் உணவுப் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு 2 சதவீதமும், ராவி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு 1.5 சதவீதமும் காப்பீடு வழங்கப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டது. ‘‘வறட்சி, வெள்ளம், பூச்சித் தாக்குதல், விலங்குத் தாக்குதல் ஆகியவற்றால் பயிர்கள் அழிந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் மொத்த பிரிமியம் தொகையில் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை செலுத்தினால் போதுமானது’’ என்றும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே கடுமையான வறட்சியினால் பெரும் பாதிப்பை சந்தித்து வந்த விவசாயிகள் இந்த புதிய காப்பீடு திட்டத்தை தங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதினார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல இந்த திட்டத்தை பிரதமர் மோடி யாருக்காக தொடங்கினார், யார் இதனால் அதிக பலன்களை அடைகிறார்கள் என்பது வெளியே தெரிய ஆரம்பித்தது.

விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக முன்னாள் பிரதமர் வி.பி. சிங் ஆட்சி காலத்தில் வேளாண் காப்பீடு திட்டம் முதன் முதலாக கொண்டு வரப்பட்டது. அதற்காக வேளாண் காப்பீடு நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் மூலம் விவசாயிகள் இழப்பீடுகளை பெற்று வந்தனர். பிரதமர் மோடி இந்த திட்டத்தை மேம்படுத்துகிறேன் என்ற போர்வையில் தனியார் காப்பீடு நிறுவனங்களை உள்ளே இழுத்து வி.பி. சிங் நல்ல நோக்கில் கொண்டு வந்த திட்டத்தை நாசம் செய்து விட்டார் என்று விவசாயிகள் புலம்புகிறார்கள்.

Subscribe to read full article

Goto Index


கருப்பு பணம் எங்கே?

நவம்பர் 8, 2016 அன்று இரவு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி, நாட்டில் வழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து நாட்டை பெரும் நெருக்கடிக்குள் தள்ளினார். பணத்தை மாற்றுவதற்கு ஏடிஎம் வாசல்களிலும் வங்கிகளுக்கு முன்னும் மக்கள் தவம் கிடந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்கே இந்த நடவடிக்கை என்று அறிவித்தனர் மோடி மற்றும் அவரின் பரிவாரங்கள். பெரு மதிப்பில் உள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பதுதான் கருப்பு பணம், ஊழல், கடத்தல் என அனைத்திற்கும் காரணம் என்று வியாக்கியானம் பேசியவர் சில நாட்களில் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு தனது திட்டமற்ற செயல்பாடுகளை மீண்டும் வெளிப்படுத்தினார்.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது என்றும் கருப்பு பணம் என்பது வெறும் பணமாக இருப்பதல்ல என்றும் பலரும் மோடி குடும்பத்திற்கு பாடம் எடுத்த போதும் அவர்கள் தங்கள் பழைய பல்லவியை பாடி வந்தனர். இது சரியான யோசனை அல்ல என்றும் முறையாக திட்டமிடப்படாத திட்டம் என்றும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும் அன்றே எச்சரித்தார். இதனிடையே மக்களால் திரும்ப செலுத்தப்பட்ட செல்லாத நோட்டுகளை எண்ணும் வேலையை பல மாதங்களாக செய்து வந்த மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் முடித்து அறிக்கையை வெளியிட்டது.

ஆகஸ்ட் 29 அன்று வெளியிடப்பட்ட 2017-&18 ஆம் ஆண்டிற்கான மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளில் 99 சதவிகிதம் மீண்டும் தங்களிடம் திரும்ப வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நவம்பர் 8, 2016 அன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 15.41 இலட்சம் கோடி. இதில் 15.31 இலட்சம் கோடி மீண்டும் திரும்ப வந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் மக்களை தேவையில்லாத மன உளைச்சலுக்கு மத்திய அரசு ஆளாக்கியது இந்த ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சாதாரண மக்கள்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் அவதியுற்றார்களே அல்லாமல் பா.ஜ.க. தலைவர்களும் அவர்களுக்கு நெருக்கமாக உள்ள கார்பரேட் முதலாளிகளுக்கும் இந்த அறிவிப்பால் எந்த பாதகமும் ஏற்படவில்லை என்பதையும் பல்வேறு செய்திகள் உணர்த்தின.

Subscribe to read full article

Goto Index


மீண்டெழும் கேரளா!

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வெள்ளத்தை கேரளா சந்தித்துள்ளது. இப்படியொரு பேரிடர் வரும் என கேரள மக்கள் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் மண் சரிவும் ஒன்றிணைந்து கேரள மாநிலத்தை நிலைகுலைய வைத்துவிட்டன. 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. கடந்த சில நாட்களாகத்தான் வெள்ள நீர் வடிந்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்களில் கேரள மாநிலத்துக்கு 2,039.6 மி.மீட்டர் மழை சராசரியாகக் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இப்போதுவரை கேரளாவில் 2,392.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

1924ல் மிகப்பெரிய வெள்ளத்தை கேரளா சந்தித்தது.1957 மற்றும் 1961-ம் ஆண்டுகளில் வெள்ளத்தால் அழிவை சந்தித்தபோதிலும் அவை அவ்வளவு பெரிய பயங்கரமாக இருக்கவில்லை. 94 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமொரு பிரளயம் துயரத்தை ஏற்படுத்தியபோது மாநிலம் நடுங்கிவிட்டது. அழுகுரல்களும், துயரக்கதைகளுமே அங்கே கேட்டன.

பலரும் வீடுகளையும், தோட்டங்களையும், வணிக நிறுவனங்களையும் இழந்து தவிக்கிறார்கள். பெருமழையில் மிகப்பெரிய வீடுகளும் சரிந்து விழுந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தன. இந்த பெரும் மழை ஏற்படுத்திய வெள்ளம் மாநிலத்தின் அடித்தளத்தை தகர்த்துவிட்டே கடந்து சென்றது. ஒரே இரவில் அனைத்தையும் இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர். ஒரு ஆயுள் முழுவதையும் செலவழித்து சம்பாதித்தவற்றையெல்லாம் ஒரே இரவில் பிரளயம் விழுங்கியது.

கேரள மாநிலத்தில் பத்து நாட்களாக கொட்டித் தீர்த்த பெருமழையால் 483 பேர் பலியாகியுள்ளனர். 14 பேரை காணவில்லை. தற்போதைய தகவலின்படி 16,767 குடும்பங்களைச் சேர்ந்த 59,296 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். சிலர் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். கேரளாவில் நதிகளின் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டியது. பாரதப்புழா, பெரியாறு, பம்பை உள்ளிட்ட ஆறுகள் கரைப்புரண்டு ஓடின. 82 அணைகளும் நிரம்பி வழிந்தன. மழையை தாங்கமுடியாமல் நிலச்சரிவுகள் அதிகமாயின. இலட்சக்கணக்கான வீடுகளில் நீர் புகுந்தது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 57 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தின் அடியில் கிடக்கின்றன. மலைகளுக்கு மேலே உள்ள பெரிய பாறைகள் வீடுகள் மீது விழுந்தன. அணைகளில் நீர் மட்டம் ஆபத்தான கட்டத்தை எட்டியது. 26 வருடங்களுக்கு பிறகு இடுக்கி அணையின் மதகுகள் திறக்கப்பட்டன. பல பகுதிகளும் துண்டிக்கப்பட்டன.

Subscribe to read full article

Goto Index


நிலம் மீட்கும் யுத்தத்தில் வீர மங்கைகள்

‘காஸாவின் பழமை வாய்ந்த சமூகத்தில் இஸ்ரேலுக்கு எதிரான கிரேட் ரிட்டர்ன் மார்ச் போராட்டத்திற்காக மக்களை ஒன்றிணைப்பதில் ஃபலஸ்தீன் பெண்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

‘கிரேட் ரிட்டர்ன் மார்ச் போராட்டக் களத்தில், இளம் வயது பெண்களும் ஆண்களும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து ஒற்றுமையை வெளிப்படுத்தியதை நாங்கள் உணர்ந்தோம். அந்த ஒற்றுமையை நான் நேசித்தேன், என்று -தஹ்ரீத் அல் பராவி என்ற ஃபலஸ்தீன் பெண் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்.

எல்லைப்புற வேலிகளுக்கும் மணல் குன்றுகளுக்கும் பின்னால் ஒளிந்துள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஸ்னைப்பர் குண்டுகள் மூலம் ஒரு பக்கம் சுடுகின்றனர். மறுபக்கம், இஸ்ரேலின் கண்ணீர் புகை குண்டுகளினால் ஏற்படும் மூச்சுத் திணறலைத் தவிர்க்கும் விதமாக தனது முகத்தை பாதி மூடிக்கொண்டு, தன் முன் இருக்கும் ஒரு இளைஞனுக்கு பாதுகாப்பாக ஃபலஸ்தீன் பெண் ஒருத்தி நிற்கிறாள். மார்ச் மாத இறுதியில் இருந்து காஸாவின் எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இத்தகைய காட்சிகள் ஓர் அங்கமாகிவிட்டன.

ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற போராட்டத்தில் தனது நண்பர்கள் மற்றும் தங்கையுடன் கலந்து கொண்டார் தஹ்ரீத் அல் பராவி. தஹ்ரித் அல் பராவி கூறுகையில், ‘காஸாவின் போராட்டக்களத்தில் கலந்து கொண்ட பெண்களிடம் பல சாகசங்களை மக்கள் கண்டிருப்பார்கள். ஆண்கள் எங்களது சாகசங்களை ஏற்றுக்கொண்டு மேலும் உற்சாகப்படுத்தினர். இதைப் பார்த்த போது போராட்டத்தில் பெண்களும் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக இருக்கிறார்கள் என்று நான் உணர்ந்தேன். எப்போதும் பெண்கள் இது போலவே இருக்க வேண்டும்’ என்று பராவி கூறினார்.

நடைபெற்று வரும் இந்த சமீபத்திய போராட்டத்தில் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இஸ்ரேலின் ஸ்னைப்பர் குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர்.

பலமுறை கண்ணீர் புகை குண்டுகளினால் பாதிக்கப்பட்டு மயக்கமுற்றாலும் போராட்டத்தை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் பராவிக்கு தோன்றவில்லை. அதைப் பற்றி அந்தப் பெண்மணி கூறுகையில்;

‘நான் எல்லைப் பகுதியை அடைந்து விட்டாலே எனக்கு தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று மட்டுமே தோன்றுகிறது. என் பூர்வீக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் தோன்றுகிறது. எனக்கு இது ஒரு வித்தியாசமான உணர்வு. இதை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு தெரியவில்லை.’

Subscribe to read full article

Goto Index


மகளிரை பாதிக்கும் கர்பப்பை புற்றுநோய்


உலகிலேயே அதிகளவில் மனித உடம்பிலிருந்து அகற்றப்படும் உறுப்பு எது தெரியுமா ? கையோ, கால்களோ, கிட்னியோ அல்ல, பெண்களின் கர்பப்பை தான் உலகிலேயே அதிகளவில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் உறுப்பு ஆகும். இதனை ‘ஹிஸ்டரெக்டமி’ (Hysterectomy) என்பர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கர்பப்பையில் ஏற்படும் புற்று நோயும் ஒரு காரணமாகும்.

ஏதோ ஒரு காரணத்திற்காக கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கும் பெண்கள், அதற்குரிய முறையான சிகிச்சையை மேற்கொள்வதில்லை. சரியாகச் செய்யப்படாத கருக்கலைப்புகள் பின்னர் புற்று நோய்கட்டிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகி விடுகின்றன. கிராமப் பகுதியில் இது போன்ற பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன.

கருக்கலைப்பு மட்டுமல்ல மாதவிடாய் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார முறைகள்பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம். மாதவிடாய்க்கு துணிகளைப் பயன்படுத்தும் பழக்கமே அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றை தூய்மையாகப் பயன்படுத்தும் முறைகள் தெரியவில்லை. இவைதவிர, பெண்கள் புகை பிடித்தாலோ 15 வயதிற்கு முன்னரே உடலுறவில் ஈடுபட்டாலோ, கணவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்தாலோ பெண்களுக்கு கர்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும்.

குழந்தை பெறாத பெண்கள், 55 வயதிற்குப் பின் மெனோபாஸ் கட்டத்தை அடைபவர்கள் ஆகியோரும் கருப்பை புற்று நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.

உலக சுகாதார அமைப்பின் கருத்துபடி இந்தியாவில் 12 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்று நோயோ அல்லது மார்பகப் புற்று நோயோ ஏற்படுகிறது. இது நான்கு கட்டமாக வளர்ச்சி அடைகின்றது. ஆரம்பக் கட்டத்திலேயே அடையாளம் கண்டுவிட்டால், எளிதில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். இல்லையெனில், உயிருக்கே ஆபத்தாய் முடியுமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

முதல் கட்டம்: கருப்பையின் உள்பக்கம் மட்டுமே பாதிக்கப்படும்.

இரண்டாம் கட்டம்: கருப்பை சார்ந்த மற்ற பகுதிகள் பாதிக்கப்படும். உ-தாரணம்: ஃபெலோபியன் குழாய்கள்.

மூன்றாம் கட்டம்: கருப்பைக்கு வெளியேயும் பாதிப்புகள் இருக்கும். உதாரணம்: பெல்விஸ் பகுதிகள்.

நான்காம் கட்டம்: கருப்பையை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும். உதாரணம்: சிறுநீரகம், கல்லீரல் ஆகியன.

Subscribe to read full article

Goto Index


அஸ்ஸாம்: அவர்கள் யாருக்கும் தேவையில்லை!

அஸ்ஸாமில் தேசிய குடியுரிமை பதிவேட்டில் விடுபட்டுள்ள 40.07 இலட்சம் பேரில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். சமூகத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்த, போதிய கல்வியறிவை பெறாதவர்கள். பிறப்பையும், திருமணத்தையும் பதிவு செய்யாத ஒரு தலைமுறையின் வாரிசுகள். பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் ஞாபகத்திலிருந்த ஒரு தேதியை பதிவு செய்த பெற்றோருடைய நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்கள். சான்றிதழில் பிறந்த தேதியை அச்சடித்ததில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்தியாவில் பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க முடியாமல் கர்ப்பிணியாக இருக்கும்போது சிறைக்கு செல்ல நேர்ந்த ரஷ்மீனா பேகத்தை போன்றவர்கள்.

ரஷ்மீனா பேகம் யார் தெரியுமா? சுதந்திரப் போராட்ட வீரரின் மகளும் அரசு அதிகாரியின் சகோதரியுமாவார். தந்தை பிரிட்டீஷாருக்கு எதிராகப் போராடினார் என்ற வாதமெல்லாம் என்.ஆர்.சி. (தேசிய குடியுரிமை பதிவேடு) அதிகாரிகளிடம் எடுபடவில்லை. மனிதத்துவத்திற்கு பதிலாக ஆவணங்களுக்கு மட்டுமே என்.ஆர்.சி. அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்தனர். இரட்டையர்களாக பிறந்தவர்களில் ஒருவர் இந்தியர், மற்றொருவர் வெளிநாட்டவர்! பிள்ளைகளில் சிலருக்கு பதிவேட்டில் இடமில்லை. கணவன் &- மனைவியரில் ஒருவருக்கு மட்டுமே குடியுரிமை. அச்சடிக்கப்பட்ட ஆவணங்களுக்கு முன்னால் மனித நேயத்தை தூக்கியெறிந்த கொடூர அனுபவங்கள் வெளியாகியுள்ளன.

வாக்குரிமை இல்லாதவர்கள் யாருக்கும் தேவையில்லை!
அஸ்ஸாமில் குவஹாத்தியிலிருந்து மூன்று மணி நேர பயண தூரமுள்ள பர்பேட்டா மாவட்டத்தின் கண்டகரா பராயில் ரிக்ஷா ஓட்டுனரான கமீனுல் இஸ்லாமின் வீடு உள்ளது. அஸ்ஸாமில் முந்தைய தினம் நடந்த வாகன வேலை நிறுத்த போராட்டம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனினும் பர்பேட்டாவில், குறிப்பாக கண்டகராவில் வேலை நிறுத்தத்தின் பாதிப்பை காண முடிந்தது. ஆனால், இந்த அமைதிக்கு காரணம் வேலை நிறுத்தம் அல்ல என்றும் கடந்த டிசம்பரில் அஸ்ஸாமில் முதல் குடியுரிமை பட்டியல் வெளியானது முதல் இங்கு நிலைமை இதுதான் என்றும் கமீனுல் இஸ்லாம் கூறினார். ஜூலை இறுதியில் வெளியான அஸ்ஸாம் குடியுரிமைக்கான இறுதி வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டவர்களில் கமீனுல் இஸ்லாமும் ஒருவர்.

அஸ்ஸாமில் குடியேற்றவாசிகளை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடந்த பல வருடங்கள் நீண்ட போராட்டத்தின் இறுதியில் இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த அஸ்ஸாம் மாணவர் யூனியனின் தலைவர் பிரபல்ல குமார் மஹந்தாவுக்கும் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையே 1985ல் அமலுக்கு வந்த உடன்படிக்கையின் பின்னணியில் அஸ்ஸாம் அரசு தேசிய குடியுரிமை பதிவேட்டை, அதாவது இந்திய குடியுரிமை உடைய அஸ்ஸாமிகளின் பட்டியலை வெளியிட்டது. 1971ல் வங்காளதேசம் உருவாவதற்கு முன்னர் தாங்களோ, தங்களது பெற்றோர்களோ இந்தியாவில் பிறந்தார்கள் என்பதை ஆவணங்கள் மூலம் நிரூபித்தவர்களை பட்டியலில் சேர்த்தனர்.

பட்டியலை வெளியிட அரசியல் ரீதியான அவசரம் காட்டிய பா.ஜ.க.வின் முயற்சிகளைப் போலவே பட்டியலில் ஏற்பட்ட தவறுகளும் சர்ச்சையானது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அஹ்மதின் உறவினர்கள் கூட குடியுரிமையை நிரூபிப்பதில் தோல்வியடைந்தவர்களில் அடங்குவர். கமீனுல் ‘நாங்கள் முஹாஜிர்’ என்று கூறுகிறார். அவ்வாறு அவர் கூறுவதற்கு காரணம் உண்டு. குடியேற்றக்காரர்கள் அவர்கள் வசித்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வசிப்பிடத்தை மாற்றியவர்கள். அப்பொழுது கூட அவர்களுக்கென ஒரு முகவரி உண்டு, பிறந்த ஊரும், நாடும் உண்டு. ஆனால், ‘வங்காளதேசிகள்’ என்று கூறப்படும் இந்திய குடியுரிமை பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்ட 40 இலட்சம் பேரை வங்களாதேசத்திற்கும் தேவையில்லை. அவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால் இந்திய அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் தேவையில்லை.

Subscribe to read full article

Goto Index


 

தேசம் மறந்த குடிகள்!

ஒரு நாட்டின் இலட்சக்கணக்கான குடிமக்களை ‘நீங்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லை’ என்று அறிவிக்க முடியும் என்று யாரும் கூறினால் எவரும் நம்பமாட்டார்கள். சென்ற வருடம் டிசம்பர் 31 மற்றும் இவ்வருடம் ஜூலை 30 அன்று வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (National Register of Citizens – NRC) அஸ்ஸாமில் உள்ள 40 இலட்சம் மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டது அவர்களை நாடற்றவர்களாக ஆக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது, நமது கலாசாரத்தை அவர்கள் சீரழிக்கிறார்கள், எனவே அவர்களை கண்டறிந்து அஸ்ஸாமில் இருந்து விரட்ட வேண்டும் என்ற கோஷம் பன்னெடுங்காலமாக அஸ்ஸாமில் உள்ளவர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, பல உயிர்கள் பலியாகின, அதைவிட அதிக உயிர்கள் பலியும் கொடுக்கப்பட்டன. 1985ல் அப்போதைய ராஜீவ் காந்தி அரசாங்கத்திற்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அஸ்ஸாம் மூவ்மெண்ட் அமைப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

அஸ்ஸாம் ஒப்பந்தம் என்றழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் தேசிய குடிமக்கள் பதிவேடு திருத்தப்பட்டது. இதன்படி, மார்ச் 24, 1971ற்கு முன்னர் இந்தியாவிற்கு வந்தவர்கள் மட்டுமே குடிமக்களாக கணக்கில் கொள்ளப்படுவர். மற்றவர்கள் அந்நியர்களாக முத்திரை குத்தப்படுவர். தாங்கள் இந்தியர் என்பதையோ அல்லது தங்கள் மூதாதையர்கள் இந்தியர்கள் என்பதையோ இம்மக்கள் ஆவணங்களின் துணை கொண்டு நிரூபிக்க வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு என்று அழைக்கப்பட்டாலும் அஸ்ஸாமில் மட்டும்தான் இந்த முறை நடைமுறையில் உள்ளது.

பல ஆண்டுகளாக முன்வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டை முழுமையாக அறிந்து கொள்ள அதன் பின்னணியையும் சற்று அறிந்து கொள்வது நல்லது. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் நமது நாடு அடிமைப்பட்டிருந்த சமயத்தில் அஸ்ஸாமில் தேயிலை தோட்டங்களை அதிகப்படுத்தவும் உணவு உற்பத்தியை பெருக்கவும் வெளிப்பகுதிகளில் இருந்து மக்களை கொண்டு வந்தனர் ஆங்கிலேயர். அவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் கிழக்கு வங்கத்தில் இருந்து வந்தனர். அதுவும் அப்போது அடிமை இந்தியாவின் ஒரு பகுதிதான். வேலைக்கு வந்தவர்கள் அங்கேயே தங்கினர். 1947 தேசப் பிரிவினையின் போதும் 1971ல் வங்கதேசம் என்ற நாடு புதிதாக உருவாக்கப்பட்ட போதும் இப்பகுதியில் இருந்து அஸ்ஸாமிற்கு மக்கள் அகதிகளாக வந்தனர். அகதிகளாக வந்தாலும் அஸ்ஸாமின் பொருளாதாரம், கலாசாரம், கலை என அனைத்திற்கும் இவர்கள் கணிசமான பங்களிப்பை அளித்து வந்தனர்.

Subscribe to read full article

Goto Index


காவித் தீவிரவாதிகளுக்கு கடிவாளம் எப்போது?

தீமை செய்பவர்களுக்கு எதிரான வன்முறை அஹிம்சை ஆகும்.
தீமை செய்பவனை கொலை செய்யாமல் இருப்பது பாவமாகும்.

சனாதன் சன்ஸ்தா தலைவர் ஜெயந்த் அத்வாலே

சனாதன் சன்ஸ்தாஇந்த பெயரை நீங்கள் அவ்வப்போது ஊடகங்களில் கேள்விப்பட்டிருக்க முடியும். மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து செய்திகள் வந்தன. ஆனால் சில நாள் பரபரப்பிற்கு பின் இவர்கள் செய்தியில் இருந்து மறைந்து விடுவார்கள். சில மாதங்கள் கழித்து மீண்டும் மற்றொரு தீவிரவாத நிகழ்வில் இவர்களின் பெயர் வெளிவரும். உறுதியாக தீர்க்கமான நடவடிக்கைகள் இல்லாத காரணத்தினால் மஹாராஷ்டிராவிற்கு வெளியிலும் இவர்கள் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆகஸ்ட் 10 அன்று மஹாராஷ்டிராவின் நல்லாசோபாரா மற்றும் சதாரா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட கைதுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மீண்டும் இந்த தீவிரவாத இந்துத்துவ அமைப்பை செய்திகளில் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதை இலட்சியமாகக் கொண்டு செயல்படும் அமைப்புதான் சனாதன் சன்ஸ்தா.

சிந்தனையாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகளிலும் இந்த அமைப்பிற்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. மஹாராஷ்டிராவின் தீவிரவாத எதிர்ப்பு படையினர் வைபவ் ராவ்த், சுதான்வா கொண்டலேகர் மற்றும் ஷரத் கசால்கர் ஆகியோரை கைது செய்து நாட்டு வெடிகுண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், குண்டுகளை தயாரிக்கும் முறையை விளக்கும் படங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் நாட்டு துப்பாக்கிகள், தோட்டாகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் .டி.எஸ். அதிகாரிகள் கைப்பற்றினர். சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் தொடர்புடைய இவர்கள் இந்து கோவன் ரக்ஷா சமிதி, ஸ்ரீ சிவபிரதிஸ்தான் இந்துஸ்தான் போன்ற அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த சிவபிரதிஸ்தான் அமைப்பின் தலைவரான சம்பாஜி பிடே மீது பீமா கோரேகான் இடத்தில் தலித்களுக்கு எதிராக ஜனவரி 1 அன்று கலவரம் நடத்தியதற்காக புனே காவல்துறை இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது. சுதந்திர தினம் மற்றும் ஹஜ் பெருநாளைக்கு முன்னர் இவர்கள் கைது செய்யப்பட்டதால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இல்லையென்றால் குண்டுகளை வெடிக்கச் செய்து முஸ்லிம்கள் மீது பழியை போட்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் வேட்டையாடி இருப்பார்கள். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு தயார் நிலையில் இருந்தன என்று காவல்துறை கூறியிருப்பது இவர்கள் மிகப்பெரும் சதியை அரங்கேற்ற இருந்தனர் என்பதை உணர்த்துகிறது. துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பயன்படுத்தி இந்துத்துவாவினர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை இந்த கைதுகள் மீண்டும் நிரூபித்துள்ளன.

Subscribe to read full article

Goto Index


இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

பைத்துல் முகத்தஸ்ஸில் மௌலானா முகமதலி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது சிலர் தங்களது மன உணர்வை வெளிப்படுத்தினர். அப்போது அஹ்மது ஜக்கி பாஷா தனது இரங்கற் உரையில், ‘‘தனது தேசத்தின் விடுதலைக்காக அநேக ஜிகாத்களை செய்தார். ஜிஹாதிற்கு செய்ய வேண்டிய கடனை நிறைவேற்றிவிட்டார். நிகரற்ற கல்விமான். இவர் மீது இறைவனின் கருணை உண்டாவதாக’’ என்றார்.

எகிப்து அரசாங்கத்தின் தர்ம பரிபாலன இலாகா மாஜி மந்திரியும் எகிப்து சுயேட்சைக் கட்சித் தலைவருமான முஹம்மது அலி பாஷா தனது இரங்கல் உரையில், ‘பலம் சத்தியமாக ஆகி விடாது. ஆனால் சத்தியம் பலமாக ஆகிவிடும் என்பது மௌலானா முகமதலியின் எண்ணத்திலும் சிந்தையிலும் குடி கொண்டிருந்தது. கண்ணியம் வாய்ந்த வழிப் போக்கரே கஷ்டம் பளுவானது. ஆனால் பொறுமையினால் பலனுண்டு என்பதை கவனிக்கிறோம்.

நீங்கள் இறக்கவில்லை. மேலும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குப் பின் எங்களுக்கு ஆறுதல் அளிக்க வல்லது உங்களது பணிகள்தான். அவை எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும். நீங்கள் செல்வதற்கு முன்பு உமது செயல்கள் முன்னால் சென்றிருக்கின்றன. அவைகள் உமக்காக சுவர்க்க லோகத்து தலைவாசல்களைத் திறந்து வைத்திருக்கின்றன. உமது நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக மௌலானா முகமதலியே நீங்கள் பெருமைகளை விட்டுச் சென்றிருக்கிறீர்கள்’ என்று பேசினார்.

டில்லி நகரசபை மண்டபத்தில் மௌலானாவின் படம் தொங்கவிடப்பட தீர்மானிக்கப்பட்டது; பம்பாய் மாநகராட்சி பம்பாய் நகரில் இரண்டு சாலைகளுக்கு முகமதலி சாலை என்று பெயரிட்டது. அலகாபாத் நகர சபை முகமதலி பூங்காவையும், முகமதலி சாலையையும் அமைத்தது. அஜ்மீரில் பியாதர் என்ற இடத்தில் முகமதலி நினைவு உயர்நிலைப் பள்ளி பிர்ஜா அப்துல் காதிர் எம்.ஏ. எல்.எல்.பீ. முயற்சியால் துவங்கப்பட்டது.

7.1.1931இல் தமிழ் மணக்கும் நவசக்தியில் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாண சுந்தர முதலியார் ‘சிங்கம் வீழ்ந்தது’ என்ற நீண்ட கட்டுரையை எழுதினார்.

“பாரத மாதாவின் அடிமைத் தளையை உடைத் தெறியப் பிறந்தவர்களில் மௌலானா முகமதலியும் ஒருவர். முகமதலி உரிமை விதையில் தோன்றியவர். உரிமைப் பாலை உண்டவர். உரிமைக் காற்றில் வளர்ந்தவர்; அவர் எண்ணியது உரிமை; அவர் பேசியது உரிமை; அவரது வாழ்வே உரிமை வாழ்வாக விளங்கிற்று. அவர் இறுதிக்காலத்தில் கூறியதென்ன? உரிமை இந்தியாவிற்கே செல்வேன்; இல்லையேல் இங்கிலாந்தில் உயிர் துறப்பேன்’ என்றார். அவரது உரிமை வேட்கையை என்னவென்று இயம்புவது! அரிய உரிமைச் செல்வத்தை நாடு இழந்தது.

Subscribe to read full article

Goto Index


சீறாவின் மகத்தான பாய்ச்சல்

முஸ்லிம்களது மாபெரும் அணி திரளான ஹஜ் கிரியைக்குப் பின்பு இஸ்லாமிய உம்மத் ஹிஜ்ரத்தை நினைவுகூரத் தயாராகிவிடும். ஹிஜ்ரத் என்ற அரபு மொழிச்சொல் விட்டுச் செல்லல், துறந்து செல்லல் போன்ற கருத்துகளைத் தரும். நபி (ஸல்) அவர்கள் தான் பிறந்த தாயக மண் மக்காவை விட்டும் பிற்காலத்தில் மதீன துந் நபி (நபியின் நகரம்) எனப்பட்ட யத்ரிப் என்ற மதீனா நகரை நோக்கிச் சென்றதை இஸ்லாமிய வரலாறு ஹிஜ்ரத் என்கிறது.

நபியவர்கள் ஹிஜ்ரத், புலம்பெயர்வதற்கு முன்பே ஏறத்தாழ மக்காவைச் சார்ந்த பெரும்பாலான நபித் தோழர்களும் மதீனாவை அடைந்திருந்தனர். நபித் தோழர்களது ஹிஜ்ரத் எட்டு ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றி கொள்ளப்படும் வரை தொடர்ந்தது.

யத்ரிபுக்குச் செல்லும் முன்பே ஹபஷா (இன்றைய எதியோப்பியா) பகுதிக்கு இரு தடவைகளில் நபித் தோழர்கள் அனுப்பப்பட்டிருந்த போதிலும், யத்ரிப் (மதீனா) நோக்கிய புலப்பெயர்வுதான் ஹிஜ்ரத் என்று பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.

இதனை விடவும் ‘ஹிஜ்ரத்’ எனும் புலப்பெயர்வு நபிமார்களுக்கு அல்லாஹ் விதித்த ஒரு நியதியாகவும் கருதப்படுகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு முன்பே பல நபிமார்களும் தமது பிறந்த இடங்களை விட்டும் புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு வஹி அருளப்பட்ட முதற்கணம் எழுந்த அச்சத்தால் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களுடன் அவரது உறவுக்காரரும் வேதங்கள் பற்றி அறிந்திருந்த வயோதிப மனிதரான வரகத் பின் நவ்பலிடம் சென்ற போது அவரும் ‘உமது ஊரார் உம்மை இவ்வூரை விட்டும் வெளியேற்றும் போது நான் உங்களுக்குத் துணையாக இருக்க உயிர்பிழைத்து வாழ வேண்டுமே!’ என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

இக்கருத்துகளும் பின்னணிகளும் நபிமார்களது வாழ்வில் ஹிஜ்ரத் என்பது நியதி எனப் புரியவைக்கின்றது. அது தஃவா இயங்கியலில் தவிர்க்க முடியாத அம்சம். எனவே ஹிஜ்ரத் என்பது உயிர்பிழைப்பதற்காகத் தப்பியோடுதல் அல்ல. மாற்றாக அதுவொரு மகத்தான மைல்கல்லாகும். உமர் (ரலி) அவர்களது காலத்தில் இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது பற்றிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட பொழுது ஹிஜ்ரத் நிகழ்வுதான் இறுதியில் தெரிவானது.

நபி (ஸல்) அவர்களது பிறப்பு, மரணம், நுபுவ்வத், மிஃராஜ், பத்ர் மற்றும் மக்கா வெற்றிகள் போன்ற இன்னோரன்ன முக்கிய நிகழ்வுகள் நபியவர்களது சீறாவிலும் இஸ்லாமிய வரலாற்றிலும் இருந்தபோதும் ஹிஜ்ரத் உமர் (ரலி) அவர்களிடம் முதலிடம் பெற்று இஸ்லாமிய வருடக் கணிப்பீடு அதிலிருந்து துவங்கியது. இதனால்தான் ஹிஜ்ரத்தை சீறாவின் மகத்துவம் பொருந்திய பாய்ச்சல் என்கிறோம்.

Subscribe to read full article

Goto Index


என்புரட்சி: 12. சைத்தான்

14 வீடுகளில் கொள்ளையடித்ததாக எங்கள் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. மிடில்செக்ஸ் கவுண்ட்டி நீதிமன்றத்திற்கு போலீஸார் எங்களை அழைத்து வந்திருந்தனர். நீதிபதியின் வருகைக்காக காத்திருந்தோம். சோஃபியாவும் அவள் தங்கையும் தனியாக அமர வைக்கப்பட்டிருந்தனர். அப்போது, நீதிமன்றத்தில் இருந்தவர்களின் பேசு பொருளாக நாங்கள்தான் இருந்தோம்.

‘வெள்ளைக்காரிகளோடு சேர்ந்து கொள்ளையடிக்கும் அளவுக்கு அமெரிக்காவில் இருக்குற நீக்ரோக்களுக்கு துணிச்சல் வந்து விட்டது?..- இதுதான் அவர்களின் விவாதப் பொருளாக இருந்தது. கொள்ளையடித்ததைக் காட்டிலும், எப்படி வெள்ளைக்காரிகளோடு கறுப்பர்கள் இவ்வளவு நெருக்கமானார்கள் என்ற ஆராய்ச்சிதான் அந்த விவாதங்களின் மையப் பொருளாக இருந்தது. திருட்டுக் குற்றத்தை விட மிகப் பெரிய குற்றமாக, வெள்ளைக்காரிகளோடு பழகியதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல், அவர்களின் அறவுணர்ச்சி அவர்களை சீற்றம் கொள்ளச் செய்தது.

நீதிமன்ற வளாகத்தில் சூடுபிடித்த இந்த விவாதங்களை நான் பொருட்படுத்தவில்லை. அமைதியாக அவர்களின் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

‘‘ஜீஸஸ நல்லா பிரே பண்ணிக்கடா’’

ஷார்ட்டியின் அம்மா கேட்டுக் கொண்டார். ஷார்ட்டியின் தாயார் மிகுந்த இறைபக்திகொண்டவர். தன்பிள்ளையும் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்.

என் தரப்பில் நீதிமன்றத்திற்கு வந்திருந்த அக்கா யெல்லாவும், தம்பி ரெஜினால்டும் தீர்ப்புக்காக காத்திருந்தனர்.

ஷார்ட்டி, தேவனை நினைவுகூர்ந்ததோடு, மார்பில் சிலுவை அடையாளத்தைப் போட்டுக் கொண்டார். ஒருவித பதற்றத்தோடு அவர் இருந்தார்.

நீதிபதி வந்ததும், அவர் முன் நாங்கள் இருவரும் எழுந்து நின்றோம். முதலில் ஷார்ட்டி மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்த நீதிபதி தண்டனை விவரங்களை அறிவித்தார்.

‘‘முதல் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் தண்டனை’’

‘‘இரண்டாவது குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் தண்டனை’’

‘‘மூன்றாவது குற்றத்திற்கு’’

தண்டனைக் காலத்தை நீதிபதி அறிவிக்க அறிவிக்க ஷார்ட்டியின் கால்கள் தடுமாறி, நிலைகுலைந்து போனார்.

‘‘நூறு ஆண்டுகள் சிறைத் தண்டனை. தண்டனைக் காலத்தை கைதி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.’’ நீதிபதி இறுதியாக சொல்லி முடித்தார்.

Subscribe to read full article

Goto Index


கெட்டியான கயிறு – குர்ஆன் பாடம் 2

“(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார். அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 2:256)

இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையையும், பண்பையும், அதன் விளைவுகளையும் வரையறுத்துக் காட்டும் ஒரு அழகான வசனம். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் எந்தவொரு நிர்ப்பந்தமுமில்லை என்பது இதில் முதலாவது பாடமாகும். போர், அச்சுறுத்தல், காதல், ஆசையூட்டல் போன்றவற்றின் மூலம் மனிதனுக்கு அழுத்தம் கொடுத்து இஸ்லாத்தை பரப்புரைச் செய்கிறார்கள் என்ற இழிவான குற்றச்சாட்டு முஸ்லிம்கள் மீது சுமத்தப்படுகிறது. அதற்கான வலுவான பதிலாக இந்த வசனம் அமைந்துள்ளது. இஸ்லாத்தை மட்டுமல்ல, உலகில் எந்தவொரு கொள்கையையும் யார் மீதும் திணிக்க முடியாது என்பதுதான் உளவியல் ரீதியான உண்மை. இஸ்லாத்தில் நிர்ப்பந்தமில்லை என்ற கூற்றின் மூலம் மனிதனின் சுதந்திரமான சிந்தனையைத்தான் இஸ்லாம் வரவேற்கிறது.

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் திணித்தல் கூடாது என்ற குர்ஆனின் கூற்று பரம்பரை முஸ்லிம்களுக்கும் பொருந்தும். பரம்பரை மற்றும் பெற்றோரின் அழுத்தத்தின் மூலமே பெரும்பாலும் குழந்தைகளிடம் மதம் உருவாகிறது. நெருக்கடியான வலையத்திற்குள் நிறைவேற்றப்படும் சடங்கு, சம்பிரதாயங்களுக்கு அப்பால் பகுத்தறிவோடு விவாதிக்கும் அழகான ஒரு வாழ்வியல் கொள்கையாக இஸ்லாம் பின்பற்றப்படும்போது மட்டுமே, வளமான மண்ணில் செழிப்பாக வளரும் மரத்தைப் போல இஸ்லாம் தழைத்து வளரும். பிறருக்கும் அதன் பலம் கிடைத்தே தீரும்.

‘‘வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது” என்ற வாக்கியம், பரம்பரையாக கிடைப்பதை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதற்கு பதிலாக நன்மை & -தீமைகளை ஒப்பீடு செய்து நன்மையின் சிறப்புகளை புரிந்துகொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கற்பிக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள மனிதன் உருவாக்கிய மதங்கள், வழிப்பாட்டு முறைகள், வாழ்வியல் சிந்தனைகள், சித்தாந்த அமைப்பு முறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும்போது அதில் வெளிப்படையாகவோ, அந்தரங்கமாகவோ மனிதனுக்கும், இறைவனுக்கும் துரோகமிழைக்கும் பகுதிகளை காண முடியும்.அத்துடன் மனசாட்சியுள்ள மனிதன் இஸ்லாத்தை ஆய்வுச் செய்தால் அதன் மனிதநேய நன்மைகளும், விழுமியங்களும் உயர்ந்து நிற்பதை காண முடியும். இத்தகைய சுதந்திரமான நன்மை- தீமைகளை ஒப்பீடு செய்து ஆய்வு செய்யும் மனிதனுக்கு உண்மையைக் குறித்த கூடுதல் தெளிவும், வெளிச்சமும் கிடைக்கும்.

Subscribe to read full article

Goto Index

Comments are closed.