புதிய விடியல் – 2018 ஆகஸ்ட் 16-31

0

தலைப்புகள்

ஆதாரின் பாதுகாப்பு லட்சணம்

யார் தேசத் துரோகி?

கருத்து சுதந்திரத்தின் விலை என்ன?

கேள்விக்குறியாகும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் எதிர்காலம்!

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

ஹஜ் சொல்லும் செய்தி

என் புரட்சி

சிறைப்பட்டோர் விடுதலைக்கு ஓர் அமைப்பு

ஃபலஸ்தீன் மௌனம் சம்மதமா

அண்ணா பல்கலைக்கழக மெகா ஊழல்

ஆர்.எஸ்.எஸ்-ன் கரங்களில் இருந்து இந்தியாவை பாதுகாத்திட வலுவான கூட்டணி வேண்டும்

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு!

கலைஞர் மு. கருணாநிதி மறைவு!

மனிதனின் குரல்

மும்பையில் இந்துத்துவ தீவிரவாதிகள் கைது

எதிர்வினை அர்துகானை நம்ப முடியுமா?

குர்ஆன் பாடம்


தலையங்கம்: குடியுரிமையை நிலைநாட்ட மக்கள் போராட்டம் தேவை!

அசாமில் குடியுரிமை பட்டியலிலிருந்து 40 லட்சம் பேரை நீக்கிய மத்திய அரசின் மனிதாபிமானமற்ற செயல் நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக குடியேறிய வங்காள தேசத்தவர்கள் என்று முத்திரை குத்தி ஆண்டாண்டு காலமாக தாங்கள் வாழும் மண்ணிலிருந்து ஒரு சமூகத்தின் வேர்களை பிடுங்கி எறிந்து அவர்களை அநாதைகளாக்கி அகதிகள் முகாமில் தள்ளுவதற்கான அரசியல் சூழ்ச்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளது.

சங்கபரிவாரின் சூழ்ச்சியை 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து 2016ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்ஸிக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமையை அளிக்கும் அதிகாரத்தை வழங்குவதே இந்த மசோதா. வங்காளதேசத்திலிருந்து குடியேறிய முஸ்லிம்களுக்கு குடியுரிமையை வழங்கமாட்டோம் என்று அடம் பிடிக்கும் பா.ஜ.க. அரசு இதர மதத்தவர்களிடம் காண்பிக்கும் தயாள குணத்தின் பின்னால் உள்ள குறுகிய நலன் தெளிவானது. அசாம் மாநில அமைச்சரும் வட கிழக்கு பிராந்திய பா.ஜ.க. அமைப்பாளருமான ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா இதனை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். யார் எதிரி? என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கையே தேசிய குடியுரிமை பதிவேடு என்று கூறிய அவர், ‘‘55 லட்சம் எதிரிகளா? அல்லது வெறும் ஒன்றரை லட்சம் பேரா?’’ என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். வங்காள மொழி பேசும் அசாமில் ஒன்றரை லட்சம் இந்துக்களையும், 55 லட்சம் முஸ்லிம்களையுமே அவர் குறிப்பிட்டிருந்தார்.


ஆதாரின் பாதுகாப்பு லட்சணம்

Life Lock என்ற அமெரிக்க நிறுவனம் ஒன்று அமெரிக்க மக்களின் தகவல்களை தாங்கள் பாதுகாப்பதாகக் கூறி ஒரு சேவையை அறிமுகம் செய்தது. சேவையை விளம்பரம் செய்யும் முகமாக, அந்நிறுவனம் தங்கள் முதன்மை செயல் அலுவலர் (சி.இ.ஓ.) டாட் டேவிஸின் Social Security (அமெரிக்காவின் ஆதார் சமன்) எண்ணை ஒரு நகர் முழுவதும் பதாகைகள், துண்டு பிரசுரங்கள் வைத்து விளம்பரம் செய்து பரப்பியது. விளைவு, டாட் டேவிஸின் தகவல்கள் 13 முறை திருடப்பட்டது. இப்படியான ஒரு நிலையில் தான் TRAI (Telecom Regulatory Authority of India) தொலை தொடர்பு ஒழுங்கு வாரியத்தின் தலைவர் மற்றும் UIDAI (Unique Identification Authority of India ஆதார் ஆணையம் என்று இதனை சுருக்கமாக் கூறலாம்) முன்னாள் தலைமை இயக்குனர் ஆர்.எஸ். சர்மா சிக்கிக் கொண்டார்.

ஆதார் மிக பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க இதுவரை எவரும் துணியாத ஒரு செயலை செய்தார் ஆர்.எஸ்.ஷர்மா. தனது ஆதார் எண்ணை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து, முடிந்தால் ஹாக்கர்கள் தனது தகவல்களை திருடட்டும் என்று சவால் விடுத்தார். இந்த சவால் குறித்த பதிவு வெளியானதும் அவரவர் தங்கள் பாணியில் ஆர்.எஸ். ஷர்மாவை பதம் பார்க்க தொடங்கிவிட்டனர்.

@enggdhiman என்கிற பெயரில் டிவிட்டரில் இயங்கி வரும் ஒருவர் ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து பெறப்பட்ட தகவல் மூலம் அவரது பெயரில் போலியாக ஆதார் அட்டை ஒன்றை உருவாக்கி அதனை அமேசான் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு அடையாள சான்றிதழாக கொடுத்து ஆர்.எஸ். சர்மாவின் பெயரிலேயே கணக்கு தொடங்கி விட்டார். இந்த நிறுவனங்களும் அவர் அளித்த ஆவணங்களை அடையாள சான்றிதழாக ஏற்றுக்கொண்டன.

Go to Index

யார் தேசத் துரோகி?

நாம் நமது 72வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், தேசத் துரோகம், தேச விரோதம் சொல்லாடல்களை பயன்படுத்தி, சங்கபரிவார பாசிச சக்திகள், தங்களை, தங்களுடைய காட்டுமிராண்டித்தனத்தை எதிர்ப்பவர்களையெல்லாம் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த சூழலில் உண்மையிலேயே யார் தேசத் துரோகி, இந்த தேசத் துரோக, தேச விரோத சொல்லாடல் எவ்வாறு பாசிசவாதிகளால் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது, அந்த தந்திரத்தின் பின்னணி என்ன என்பதை, நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிந்து கொள்ள வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. நமது நாட்டில் பாசிச பரிவாரங்களின் கூச்சல் எந்தளவிற்கு இருக்கின்றது என்று பாருங்கள்!

  • இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழன் -தேசத் துரோகி
  • சாதிவெறியை எதிர்த்த ரோஹித் வெமூலா- தேசத் துரோகி
  • பாசிசத்தை எதிர்த்த ஜே.என்.யூ. மாணவர்கள் தேசத் துரோகிகள்
    மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்கள், அதனை ஆதரிப்பவர்கள் -தேசத் துரோகிகள்
  • முஸ்லிமாக இருந்தாலே தேசத் துரோகி
  • தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சிகள் கூட தேசத் துரோகிகள்
  • எல்லாவற்றிக்கும் மேல் ஹெச். ராஜாவிடம் கொஞ்சம் கஷ்டமான கேள்வியை கேட்டாலும் தேசத் துரோகி

இப்படி எல்லோரையும் தேசத் துரோகியாக்கிக் கொண்டிருக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி, சங்கபரிவாரக் கூட்டம் யார்? அவர்கள் இந்த நாட்டிற்கு அப்படி என்ன தியாகம் செய்துவிட்டார்கள்? எல்லோருக்கும் தேசப்பற்று சான்றிதழ் வழங்கும் அதிகாரம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இந்த சங்கபரிவார பாசிசக் கூட்டத்திற்கு சுதந்திரப் போராட்டத்தில் எந்த நேர்மறை பங்களிப்பும் இல்லை. உண்மையை சொல்வதென்றால் துரோகம்தான் இவர்களின் அடையாளமாக அன்றும் இருந்தது, இன்றும் இருந்து வருகிறது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., -பா.ஜ.க. பரிவார்கள் என்ன செய்தார்கள்?

இந்திய சுதந்திரப் போராட்டம் ஏறத்தாழ 300 வருடங்கள் நீளமானது. சில வரலாற்று ஆசிரியர்கள் துல்லியமாக 258 வருடங்கள் என்று கூறுகின்றார்கள். இந்திய சுதந்திரப் போர், மன்னர்கள் செய்த ஆங்கிலேய எதிர்ப்பு போர், ஆங்கிலேயனுக்கு எதிராக நடத்தப்பட்ட அரசியல் போராட்டங்கள், காந்திஜியின் அஹிம்சை வழி மக்கள் போராட்டங்கள், நேதாஜியின் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள், பகத்சிங் போன்ற இளைஞர்களின் புரட்சி வழிப் போராட்டங்கள் என்று விரிகின்றது. இதில் எந்த காலக்கட்டத்திலும் எந்த வழிமுறை போராட்டத்திலும் பாசிச பரிவாரங்கள் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை.

பாசிச பரிவாரங்களிடம், “நீங்கள் செய்த தியாகம் என்ன?” என்று கேட்டால், சாவர்க்கர் பெயரை குறிப்பிடுவார்கள். சாவர்க்கர் அப்படி என்ன செய்தார்? சாவர்க்கரைப் பற்றி, அவருடைய விடுதலைப்போர் வாழ்க்கையைப் பற்றி, ஆய்வு செய்த ஃப்ரண்ட்லைன் இதழ் கூறுவதை கேளுங்கள்:

Go to Index

கருத்து சுதந்திரத்தின் விலை என்ன?

2014ல் மத்தியில் ஆட்சியில் வருவதற்கு முன்னரே ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் மிரட்டியும் ஆசை காட்டியும் தனது கட்டுக்குள் கொண்டு வந்த பாரதிய ஜனதா கட்சி, தற்போது அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில் ஊடகவியலாளர்களை ஒடுக்கும் தனது வேலையை முடுக்கி விட்டுள்ளது. தற்போது நாட்டில் உள்ள பெரும்பான்மை ஊடகவியலாளர்கள் ஆளும் அரசாங்கத்தின் தாளத்திற்கு ஏற்ப ராகம் பாடும் நிலையில் ஒரு சிலர் மட்டுமே தங்களின் கருத்துகளை வெளிப்படையாகவும் தைரியமாகவும் முன்வைத்து வருகின்றனர். அந்த ஒரு சிலரை ஒடுக்கும் வேலைதான் தற்போது நடந்து வருகிறது.

பா.ஜ.க.வின் சமீபத்திய தாக்குதலுக்கு இரையாகி இருப்பவர்கள் ஏபிபி நியூஸ்-&ன் (ABP News)— ஆனந்த் பசார் பத்ரிகா குழுமம் இந்த சேனலை நடத்தி வருகிறது) தொலைக்காட்சியின் மிலிந்த் கண்டேகர், புன்ய பிரசுன் பாஜ்பாய் மற்றும் அபிசர் சர்மா. இந்த சேனல் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான பிரச்சனை ஜூன் 20ல் இருந்து தொடங்கியது.

திட்டங்களை அறிவிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி அதனை நடைமுறைக்கு கொண்டு வராத வாய்ச்சொல் வீரரான பிரதமர் மோடி, அன்றைய தினம் தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் சில விவசாயிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்பு கொண்டு தனது வழமையான வாய்ச்சொல் ஜாலங்களை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண், தனது வருவாய் தற்போது இரட்டிப்பாகியுள்ளதாக கூறினார். தனது வருமானம் மட்டுமின்றி தன்னுடன் பணியாற்றும் ஏனையவர்களின் வருமானமும் இரட்டிப்படைந்ததாக சந்திரமணி என்ற அந்த பெண் தெரிவித்தார்.

Go to Index

கேள்விக்குறியாகும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் எதிர்காலம்!

தகவல் அறிவதற்கான உரிமையை மறுப்பதும், கட்டுப்படுத்துவதும் கால, தேச பேதமில்லாமல் அரசுகளின் இயல்பாகும். பாசிச அரசுகளோ தகவல்களின் மீது மிகப்பெரிய கட்டுப்பாட்டை செலுத்துகின்றன. ஜெர்மனியில் நாசி அரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தகவல் அறிவதற்கான உரிமையை உலக சமூகம் அங்கீகரித்தது. ஐக்கிய நாடுகள் அவை உருவானபோது தகவல் அறியும் உரிமை மனித உரிமைகளில் சேர்க்கப்பட்டது. இந்தியாவில் ஜனநாயக அமைப்புகளின் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும், மக்களுக்கும் அரசு எந்திரங்களுக்கும் இடையேயான இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரவும் இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்தது.

1975ல் முக்கியத்துவம் வாய்ந்த ராஜ்நாராயணன் வழக்கில் விசாரணையின்போது ஜனநாயக அமைப்பு முறையில் அனைத்து பொது அதிகாரிகளும் பொறுப்புணர்வையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அரசிடம் ரகசியம் என்பது மிகவும் குறைவாகவே இருக்க வேண்டும் என்றும் அனைத்து பொது பணிகள் தொடர்பாக மக்களுக்கு அறியும் உரிமை உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதுவரை யாரும் சிந்திக்காத அறிவதற்கான உரிமைக்கு ஒளி வீசுவதாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்தது.

நாடாளுமன்றத்திற்கும் சட்டப்பேரவைக்கும் மறுக்காத எந்தவொரு தகவலையும் நாட்டின் குடிமகனுக்கும் மறுக்கக் கூடாது என்று தகவல் அறியும் உரிமை சட்டம் கூறுகிறது. 2005 அக்டோபர் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்த அன்றைய தினத்திலிருந்து அதிகார வர்க்கம் இந்த சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியை துவக்கியது. பல துறைகளையும் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு உட்படாதது என்று அறிவித்தனர். தேசப் பாதுகாப்பு என்ற பெயரால் எதனை, எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்பதையெல்லாம் விலக்கு அளித்தனர்.

Go to Index

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

‘‘குடியேற்ற நாடு அந்தஸ்து கேட்க நான் வரவில்லை. அதை நான் நம்பவும் இல்லை. நான் கேட்பது பூரண விடுதலையே. இதை கிழவன் கூறுகிறானே என நினைக்காதீர்கள். நான் வயதில் பெரியவன். ஆனால் உள்ளத்தால், உற்சாகத்தால் மனோ தைரியத்தால், சுபாவத்தால், சண்டையிடுவதன் ஆசையினால் நான் இளைஞன். நீண்ட உரையாற்றிய பின் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் பேசிவிட்டேன். இப்போது என் ஆசனத்தில் அமர்கிறேன். இங்கிலாந்தைப் போன்ற சுதந்திரம்இந்தியாவிற்கும் ஏற்பட்டுவிட்டது என்று நீங்கள் பகிரங்கமாய்க் கூறும் வரை மறுபடியும் என்னைப் பேசுமாறு கூப்பிடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்’’ என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

மௌலானாவின் வீர உரைக்குப் பின் அவரது உடல்நிலை மேலும் மோசமாகியது. ‘டைம்ஸ்’ பத்திரிகை ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட்ஷா போன்றவர்களுடன் தொலைபேசியில் நாட்டு விடுதலைக்காக பேசினார். மௌலானா சௌக்கத் அலி, லார்டு சாங்கே, இந்திய மந்திரி பென், சர் அக்பர் ஹைதலி, சர் அகமது ஸயீத் ஆகியோரிடமும் தொலைபேசியில் நாட்டு விடுதலை குறித்து பேசிக் கொண்டே இருந்தார்.

வட்டமேஜை மாநாட்டில் மௌலானா முகம்மது அலியின் வீரஉரை ராய்ட்டர் தந்தி மூலம் பத்திரிகைகளுக்கு வந்த போது அவரது விரோதிகளும் அவரைப் பாராட்டினார்கள். ‘முகமதலி ஏன் இவ்வாறு பேசமாட்டார்? எப்படியிருந்தாலும் அவர் முகம்மது அலி அல்லவா?’ என்று பாராட்டினர்.

கடிதங்கள் வாயிலாக தனது கருத்தைச் சொல்வதில் மௌலானா முகமதலி சளைத்தவர் அல்ல. 15.1.1924 இல் அலிகார் பல்கலைக் கழகத்திலிருந்து நேருவிற்கு கடிதம் எழுதியவர் முகமதலி. 21.1.1924 இல் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவிலிருந்து நேருவிற்கு கடிதம் எழுதினார். ஏப்ரல் 10, 1924இல் டெல்லி தேஜ் பத்திரிகைக்கும், சுவாமி ஷ்ரந்தான் மற்றும் முன்ஷிராம் மகாதுவிற்கும், 15.6.1924இல் நேருவிற்கும் 12.7.1924இல் காந்திக்கும் 27.8.1924இல் சாகிப் குரேஷிக்கும், 16.2.1925இல் அகில இந்திய காங்கிரஸ் செயளாலருக்கும் கடிதம் எழுதியவர் மௌலானா முகமதலி. அவரது அண்ணன் சௌக்கத் அலியும் 14.2.1924 இலும், 12.5.1924இலும் 25.10.1924ல் கிலாபத் கமிட்டி சார்பாக உள்துறைக்கு கடிதம் எழுதினார். இவை எல்லாம் நாட்டின் நலன் கருதியே இருந்தன.

Go to Index

ஹஜ் சொல்லும் செய்தி

ஹஜ் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. அது புவியியல் ரீதியாக மக்காவை மையமாகக் கொண்டு நடைபெறும் வணக்கம். வசதி உள்ள முஸ்லிம்கள் மீது இக்கடமை விதியாக்கப்பட்டுள்ளது. நபி இப்ராஹிம் (அலை) மற்றும் அவர்களது குடும்பத்தவர்களது அர்ப்பணம் நிறைந்த வாழ்வை நினைவுபடுத்தும் ஓர் உன்னத வணக்கமாக ஹஜ் கடமை விளங்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ் கடமையை மேற்கொள்ள ஹிஜ்ரி ஒன்பதில் அபூபக்கர் (ரலி) அவர்களின் தலைமையில் தோழர்கள் பலரையும் அனுப்பிவைத்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய முதலாவதும் இறுதியானதுமான ஹஜ்ஜின் போது “என்னிடமிருந்து நீங்கள் ஹஜ் செய்யும் முறையை எடுத்துக் கொள்ளுங்கள்” (அஹ்மத்) என்று கூறினார்கள். எல்லாவற்றுக்கும் மிகவும் அழகான வழிகாட்டல்களை வழங்கிய நபி (ஸல்) அவர்கள் ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றும் முறை பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.

இந்த ஹஜ் கடமை நமது உள்ளங்களில் இறை பயத்தை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது. எனவேதான் ஹஜ் என்பது அனைத்தையும் துறந்து அல்லாஹ்வின் கட்டளைக்கு செவிசாய்த்து ஆன்மீக ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் நம்மை புடம் போடக்கூடிய ஒரு உன்னத வணக்கமாகும். இதனைத்தான் அல்குர்ஆனும் ஸுன்னாவும் ஹாஜிகளின் கோஷமும் உணர்த்துகின்றது.

ஹஜ்ஜுக்காக தயாராகிவிடும் ஒருவர் இச்சையைத் தூண்டும் சொல், சச்சரவுகள், பாவச் செயல்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறு அல்குர்ஆன் வழிகாட்டுகின்றது. “ஹஜ் என்பது குறிப்பிட்ட சில மாதங்களாகும். அவற்றில் யாரும் ஹஜ் கடமையை நிறைவேற்ற நாடினால் ஹஜ்ஜின்போது இச்சையை தூண்டும் சொல், சச்சரவுகள், பாவச்செயல்கள் என்பவற்றில் ஈடுபடக்கூடாது.” (அல் பகரா: 197)

ஹஜ்ஜின் போது இவ்வாறான இச்சையைத் தூண்டும் மோசமான வார்த்தைகள், பாவச்செயல்கள், சச்சரவுகள் போன்றவற்றை விட்டும் தவிர்ந்த நிலையில் ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர் பாவச்சுமைகள் அற்ற நிலையில் எவ்வாறு திரும்புவார் என்பதை நபி (ஸல்) அவர்களது பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. “யார் இச்சையைத் தூண்டக்கூடிய மோசமான வார்த்தைப் பிரயோகங்களை விட்டும் தூரமாகி பாவச் செயல்களில் ஈடுபடாது அதை நிறைவேற்றுகிறாரோ, அவர் அன்று பிறந்த பாலகனைப் போல் பாவச்சுமைகளற்ற நிலையில் திரும்புவார்.”

Go to Index

என் புரட்சி: சிக்கினேன்

எதையும் நேர்த்தியாக செய்வதுதான் எனக்குப் பிடிக்கும். அது போதைப்பொருள் விற்பதாக இருந்தாலும் சரி, திருட்டுத் தொழிலாக இருந்தாலும் சரி.
வீடுகளில் இரவு நேரங்களில் புகுந்து திருடுவது என்று முடிவெடுத்தபின், நூறு சதவீதம் திட்டத்தை முழுமையாகப் போட்டு, கச்சிதமாக திருடி வந்தோம். திருடியதை உடனடியாக விற்று பணமாக்கினோம். திருட்டுப் பொருட்களை வாங்குவதற்கு சில வியாபாரிகள் இருந்தனர். நாங்கள் கஷ்டப்பட்டு திருடிய பொருட்களுக்கு அந்த வியாபாரிகள் குறைவான விலையே கொடுத்தனர்.

தொழில் சிறப்பாக போய்க் கொண்டிருந்து. ஒரு கொள்ளைக்கும், அடுத்த கொள்ளைக்கும் போதிய இடைவெளி விட்டோம். தொழிலுக்குச் செல்லாத நாளில் வழக்கமாகச் செல்லும் விடுதிக்குச் சென்றேன். சோஃபியாவுடன் சுற்றினேன். எங்கள் மீது பிறருக்கு சந்தேகம் வராதபடி நாங்கள் நடந்து கொண்டோம்.
நான் வழக்கத்தை விட அதிகமான விழிப்போடு இருந்தேன். ஹார்லெம் நகரின் அடியாள் தொழிலில் நான் கற்றுக் கொண்ட பாடங்களும், போலீஸாரின் உளவியலையும் அறிந்துவைத்திருந்ததும் திருட்டுத்தொழிலில் போலீஸாரின் கண்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்தது. ஒரு நாள் வழக்கம் போல, மதுக்கடைக்குச் சென்ற போது, அங்கிருந்த மேலாளர் வழக்கத்திற்கு மாறாக மற்ற வாடிக்கையாளர்களை வரவேற்பதுபோல வரவேற்றார். நட்பாக நடந்து கொள்ளக் கூடியவர் அவர்.

‘‘ஹலோ சார் வெல்கம்’’ சொல்லி விட்டு என்னிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டவர், மற்ற வேலைகளில் மூழ்கினார். அவருடைய பார்வையும் வித்தியாசமாக இருந்தது. எனக்குப் புரியவில்லை.

Go to Index

சிறைப்பட்டோர் விடுதலைக்கு ஓர் அமைப்பு!

(பத்தாண்டுகளுக்கு மேலான சிறைவாசிகளின் விடுதலை குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஜூலை 21, 2018 அன்று சென்னையில் தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு (ழிசிபிஸிளி) சார்பாக நடைபெற்றது. அதில் தமிழ் தேசம் பத்திரிகையின் ஆசிரியர் தோழர் தியாகு அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து..)


ஆயுள்தண்டனை என்றால் என்ன? அதில் தண்டனை கழிவுகள் உண்டா? பொய் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு மட்டும்தான் நாம் வாதாடுகின்றோமா? அல்லது பொதுவாக ஆயுள் கைதிகள், நீண்ட ஆயுள் கைதிகள் விடுதலைக்காகவும் நாம் பாடுபடுகிறோமா? என்பது குறித்த தெளிவு நமக்கு தேவைப்படுகிறது. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் கருத்துதான். பொதுமக்கள் ஒன்றை எதிர்த்தார்கள் என்றால் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. மரண தண்டனை ஒழிப்பு என்ற விசயத்தில் நாம் முன்னோக்கி செல்லும்போது நாட்டில் நடைபெறக்கூடிய சில கொடிய நிகழ்விற்கு மரணதண்டனை வேண்டும் என்ற குரல் ஓங்குகிறது. இதை நாம் எதிர்கொள்வது அல்லது முகம் கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது. முன்னாள் பிரதமரை கொன்றால் விட்டுவிடுவார்களா என்ற கேள்வி எழுகிறது.

1989 அல்லது 1990 கால கட்டத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சிறைக் கைதிகள் விடுதலை குறித்து கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தை மேற்கோள்காட்டி 490 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதில் விதிவிலக்கு என்று கூறி போதை பொருள், கடத்தல் வழக்குகளை நீக்கிவிட்டார். இந்த விடுதலைக்கு பிறகு ஜூ.வி.யில் முதல்வருக்கு மனம் திறந்த மடல் ஒன்றை “நன்றி. ஆனால்..?” என்ற தலைப்பில் எழுதினேன்.
எந்த ஓர் வழக்காக இருந்தாலும் குற்ற தீர்ப்பு வழங்கும் போது மூன்று கட்டங்களாக நாம் அணுக வேண்டும். முன்பு குற்றம் மற்றும் தண்டனை குறித்து ஒரே நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இன்று குற்றத்தை உறுதி செய்தாலும் தண்டனை தனித்தனியாக விவாதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Go to Index

ஃபலஸ்தீன்: மௌனம் சம்மதமா?

யூத மக்களின் தேச நாடாக (நேஷன் ஸ்டேட்) இஸ்ரேல் இருக்கும் என்ற புதிய சட்டத்தை ஜூலை 19 அன்று இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி தனது அத்துமீறலின் அடுத்த அத்தியாயத்திற்குள் இஸ்ரேல் நுழைந்துள்ளது. இஸ்ரேல் யூத மக்களின் வரலாற்று உறைவிடம், தேசிய நலனை கருத்தில் கொண்டே யூதர்களை மட்டும் உள்ளடக்கிய குடியிருப்புகள் உருவாக்கப்படுகின்றன, ஒருங்கிணைந்த ஜெரூஸலம் இஸ்ரேலின் தலைநகராக இருக்கும் என்று கூறும் இச்சட்டம் இஸ்ரேலில் வாழும் அரபு மற்றும் இதர சிறுபான்மையினரின் உரிமைகளை அதிகாரப்பூர்வமாக பறிக்கும் என்று அரசியல் நோக்கர்களும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இச்சட்டத்திற்கு 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், 55 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். இரண்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்தில் இருந்து அரபி மொழி கீழிறக்கப்பட்டு சிறப்பு அந்தஸ்து என்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இஸ்ரேலில் ஏறத்தாழ இருபது இலட்சம் அரபு மக்கள், அதாவது இஸ்ரேலிய மக்கள் தொகையில் இருபது சதவிகிதத்தினர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபலஸ்தீனியர்களின் நிலங்களை அபகரித்து இஸ்ரேல் என்ற தேசம் 1948ல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட போது தங்களின் நிலங்களை விட்டும் வெளியேறாமல் இருந்த ஃபலஸ்தீனியர்கள் அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அடிப்படை விஷயங்களில் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக இஸ்ரேலில் வாழும் அரபு மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். இஸ்ரேலில் உள்ள அரபு மக்கள் தொடர்ந்தும் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என்பதை இச்சட்டம் உறுதி செய்கிறது என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் அரபு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Go to Index

அண்ணா பல்கலைக்கழக மெகா ஊழல்!

மறுகூட்டலுக்கு விண்ணப்பக் கட்டணமாக பல கோடிகளை வசூல் செய்த அண்ணா பல்கலைக் கழகத்தை ஓவர் டெக் செய்து விட்டனர் அதன் அதிகாரிகள்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளை வழங்கும் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல், மே மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்கள் கழித்து வெளியிடப்படும். இதன்பிறகு அவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு கடந்த ஏப்ரல் &- மே 2017 தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 73 ஆயிரத்து 733 பேர் பாஸ் செய்துள்ளனர். இதில் 16 ஆயிரத்து 636 பேர் அதிக அளவில் மதிப் பெண் எடுத்து பாஸ் செய்துள்ளனர். இப்படி அதிக மதிப்பெண் போடுவதற்காக ஒவ்வொரு மாணவர்களிடம் 10 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளதாக க. மீனா என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் திண்டிவனம் மண்டலத்தை சேர்ந்த தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அலுவலர் ஜி.வி.உமா, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி முன்னாள் முதல்வர் பி.விஜய குமார், கணிதவியல் துறை உதவி பேராசிரியர் ஆர். சிவக்குமார், என்பிஆர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜன், எஸ்.கே.பி.பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த எம்.மகேஷ் பாபு, அன்புச் செல்வன், ஏசி தொழில் நுட்ப கல்லூரியைச் சேர்ந்த பிரகதீஸ்வரர், சேலம் பொறியியல் தொழில் நுட்ப கல்லூரியைச் சேர்ந்த ரமேஷ் கண்ணன், டி.ரமேஷ் மற்றும் பிரதீபா உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரிடம் கேட்ட போது, “சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாக காரணங்களுக்காக 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மண்டலங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் அனைத்து பணிகளும் அந்தந்த மண்டலங்களில் நடைபெறும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஒருங்கிணைப்பாளர், ஒரு அதிகாரி இருப்பார். இவர்களின் தலைமையில்தான் தேர்வுத்தாள் திருத்துதல் மற்றும் மறு கூட்டல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடைபெறும்.

இந்த விடைத்தாள் திருத்துதல் முகாமில் முகாம் அதிகாரி, தலைவர், துணைத் தலைவர், திருத்துனர், உதவி திருத்துனர் என்று ஐந்து பேர் இருப்பார்கள். திருத்துனர்கள் மட்டுமே விடைத்தாள்களை திருத்துவார்கள். இவர்கள் விடைத்தாளின் முதல் பக்கத்தில் பக்கம் வாரியாகயும், கேள்வி வாரியாகவும் மதிப்பெண் வழங்குவார்கள். இந்த இரண்டும் சரியாக வருகிறதா என்று அந்த முகாமின் தலைவர் சரிபார்ப்பார். இந்த முறைதான் மறுகூட்டலின் போதும் கடைபிடிக்கப்படும்.

இந்த மறுகூட்டலின் போதுதான் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஒருவர் மட்டும் தனியாக ஈடுபட முடியாது. ஒரு முகாமில் உள்ள அனைவரும் சேர்ந்துதான் இதில் ஈடுபட முடியும். அதன்படி முகாமின் தலைவராக இருப்பவர் தங்களிடம் லஞ்சம் கொடுத்த மாணவர்களின் விடைத்தாள்களை அவர் ஏற்கெனவே பேசி வைத்த திருத்துனர்களிடம் வழங்குவார். அவர்கள் அதை பார்த்து முழு மதிப்பெண் வழங்காத கேள்விக்கு முழு மதிப்பெண்ணும், மதிப்பெண்ணே வழங்காத கேள்விகளுக்கு பாதி மதிப்பெண்ணும் வழங்குவார்கள்.

எடுத்துக்காட்டாக 20 மதிப்பெண் கொண்ட கேள்விக்கு முதலில் திருத்திய திருத்துனர் 10 மதிப்பெண் வழங்கியிருந்தார் என்றால் மறுகூட்டலில் இவர் 18 மதிப்பெண் வழங்குவார். அதே கேள்விக்கு மதிப்பெண் வழங்காமல் இருந்தால் 10 மதிப்பெண் வழங்குவார். இவ்வாறு மதிப்பெண்களை வழங்கி அவர்களை அதிக மதிப்பெண் எடுக்க செய்து விடுகின்றனர். ஒரு முகாமில் இருக்கும் அனைவரும் கூட்டாக சேர்ந்து இதை செய்வதால் யாருக்கும் சந்தேகம் வருவதே இல்லை. இப்போது திண்டிவனம் மையத்தில் நடைபெற்றது மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது போன்று பல மையங்களில் நடைபெறும் என்று அதிர்ச்சி தகவலுடன் பேசி முடித்தார்.

Go to Index

ஆர்.எஸ்.எஸ்-ன் கரங்களில் இருந்து இந்தியாவை பாதுகாத்திட வலுவான கூட்டணி வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுக்குழு

கேரளா மாநிலம் மலப்புரத்தில் உள்ள மலபார் ஹவுசில் கடந்த ஆகஸ்ட் 10, 11, 12 ஆகிய நாட்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழு நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ்.-ஐ அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைத்திட ஒவ்வொரு மாநிலம் மற்றும் தொகுதிகளில் ஒருங்கிணைந்த அரசியல் எதிர்ப்பு இயக்கம் கட்டமைத்திட அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுடைய இயக்கங்கள் முன் வர வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுத்துள்ளது. சமீபத்திய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தேசிய பிரிச்சனைகள் குறித்த மற்ற தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்-ன் பிடியிலிருந்து இந்தியாவை பாதுகாத்திட வலுவான கூட்டணி மற்றும் ஒருங்கிணைந்த தேர்தல் யுக்திகளுக்கு திட்டமிட வேண்டும்

மதவாத மற்றும் ஃபாசிஸ சங்கபரிவாரத்தின ருடைய கட்டுப்பாட்டில் இருந்து தேசத்தை பாதுகாக்க நியாயமாக சிந்திக்கும் மக்களுக்கு, 2019 நாடாளுமன்ற தேர்தல் கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என்பதை பாஜக அரசாங்கத்தின் கீழ் தேசத்தில் நடைபெற்று வரும் அசாதாரண சூழல்கள் நமக்கு நினைவூட்டுகிறது. அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் மத்திய அரசு முழுமையான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தற்போது வகுப்புவாத மோதல்களை ஏற்படுத்தும் தனது உண்மையான அஜெண்டாவை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. பாஜகவை எதிர்க்க அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து பல்வேறு தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இது செயல்பாட்டிற்கு வரமால் இருக்கின்றது. அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் மதச்சார்பின்மை மீதான தங்களது உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டிய தருணமாகும். 2019 பொதுத் தேர்தலுக்காக ஒரு ஒருங்கிணைந்த மதச்சார்பற்ற தளத்தை உருவாக்க அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் அரசியல் தியாகங்களை செய்வதற்கு தயாராக வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் -ன் தேசிய பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.

அஸ்ஸாமில் NRC தவறாக பயன்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும்! குடியுரிமை மசோதாவை திரும்பப்பெற வேண்டும்!


அஸ்ஸாம் மாநிலத்தில் ழிஸிசி (தேசிய குடிமக்கள் பதிவு)-ஐ பாரபாட்சமற்ற நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும். மேலும், மொழி மற்றும் மத சிறுபான்மையினரை வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கும் நோக்கத்தோடு NRC முறையை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற அஸ்ஸாம் மக்களின் கோரிக்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய பொதுக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது. ஞி-க்ஷிஷீtமீக்ஷீs (சந்தேகத்திற்குறிய வாக்காளர்கள்) உடன் தொடர்புடைய அனைத்து வழிமுறைகளையும் செயல்பாடுகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் அவர்கள் அனைவரையும் ழிஸிசி (தேசிய குடிமக்கள் பதிவு) நடைமுறைக்குள் சேர்த்து கொள்ள வேண்டும் என்று பொதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. 40 இலட்சம் மக்கள் குடியுரிமை இல்லாமல் ஆக்கப்பட்டுள்ள அவல நிலையை சுட்டிக்காட்டியுள்ள பொதுக்குழு, தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளது.

பாபரி மசூதிக்கு நீதி வேண்டும், ரபேல் ஊழலை விசாரிக்க வேண்டும்.

நாட்டில் அதிகரித்து வரும் பசு தீவிரவாத கும்பல் தாக்குதலை குறித்து தேசிய பொதுக்குழு அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துள்ளது. பிரதமர் மற்றும் மத்திய அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படும் ரபேல் ஊழல் குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தேசிய பொதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. மற்றுமொரு தீர்மானத்தில், பாபரி மசூதி பிரச்சினையை வைத்து இந்துத்துவ சக்திகள் அரசியல் ஆதாயம் பெறுவதை தடுக்க உச்ச நீதி மன்றம் தலையிட வேண்டும் என்று பொதுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திட இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் முன் வந்திட வேண்டும் என்று தேசிய பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் இ.அபுபக்கர் தேசிய பொதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார். பொதுகுழுவில் இயக்கத்தின் கடந்த ஒன்றரை ஆண்டுகால பணிகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. மேலும், இயக்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது அலி ஜின்னா சமர்ப்பித்த பணிகள் குறித்தான ஆய்வறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வளர்ச்சி மற்றும் வட மாநிலங்களில் புதிய பகுதிகளில் இயக்கம் சென்று சேர்ந்துள்ளதற்கு காரணமான பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் தியாகங்கள் மற்றும் கடுமையான முயற்சிகளுக்கு அந்த அறிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது. வெவ்வேறு மாநிலங்களை சார்ந்த 200 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த பொதுக்குழு தேசிய துணைத்தலைவர் ஓ.எம்.ஏ. சலாம் அவர்களின் முடிவுரையோடு நிறைவுற்றது.

Go to Index

கோவை: பெட்ரோல் குண்டு வீச்சு! பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் நேரில் ஆய்வு!

கோவை சிவானந்தா காலனி காந்திநகர் பகுதியில் வசிக்கும் செய்யது அலைஹி என்பவர் அப்பகுதியில் பல ஆண்டுகளாக மளிகை கடை நடத்திவருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 8 அன்று இரவு சுமார் 11.30 மணியளவில் பாசிச சமூக விரோதிகள் திட்டமிட்டு செய்யது அலைஹி அவர்களின் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் நெருக்கமாக பல வீடுகள் இருப்பதை உணர்ந்து தன் சமையல் எரிவாயு சிலிண்டரை வெடிக்காமல் இருக்கும் அளவிற்கு பத்திரப்படுத்திவிட்டு கூரையை உடைத்து மேலே வந்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பலத்த தீக்காயம் அடைந்த அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீக்காயம் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர்கள் உட்பட மாவட்ட நிர்வாகிகள் பெட்ரோல் குண்டு வீச்சில் படுகாயமடைந்த செய்யது அலைஹி அவர்களை மருத்துவமனையில் ஆகஸ்ட் 9 அன்று நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்கள். முழுவதும் எரிந்த அவரின் கடையையும் சென்று பார்வையிட்டனர். அப்பகுதி மக்களிடம் நடந்த நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் இது குறித்து கோவை மாவட்ட போலிஸ் கமிஷ்னர் திரு. பெரியய்யா மற்றும் உளவுத்துறை துணை ஆணையர் திரு. சௌந்தரராஜன் ஆகியோரை தொடர்புகொண்டு இதில் சம்பந்தப்பட்ட பாசிச சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். செய்யது அலைஹியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இரவுநேர காவல் ரோந்துவாகனங்களை அப்பகுதியில் இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வைத்தனர்.

Go to Index

கலைஞர் மு. கருணாநிதி மறைவு! -பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில் இரங்கல்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நம்மிடையே இல்லை என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் பிரிவு தமிழகத்திற்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவரை பிரிந்து வாடும் உறவினர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னுடைய கவலைகளை பகிர்ந்து கொள்வதுடன் ஆழ்ந்த இரங்கலையும் பதிவு செய்து கொள்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் ஜூலை 27, 2018 அன்றைய தினம் உடல் நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 11 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவர் நலம் பெற்று விரைவில் பணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கையான செய்தியுடன் தமிழக மக்கள் காத்திருந்த வேளையில் மருத்துவ குழுவினரால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பெற்றும் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வயது மூப்பு காரணமாக தனது 95வது வயதில் 07.08.2018 அன்று மாலை 06.10 மணியளவில் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலில் தொடர்ந்து பிரதான பங்கு வகித்து வந்த தமிழகத்தின் அரசியல் சாணக்கியரான டாக்டர் கலைஞர் அவர்கள் 1957-ல் குளித்தலை சட்டமன்ற 

தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தோல்விகளை தோல்வி காணச் செய்தவர். 5 முறை தமிழக முதல்வராக மகுடம் சூடி ஆசிரியர், தலை சிறந்த சொற்பொழிவாளர், கவிஞர், திரைக்கதை ஆசிரியர், ஆட்சியாளர் என பன்முகத்தன்மையுடன் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட மாபெரும் ஆளுமை, உலகறிந்த மாமேதை இன்று நம்முடன் இல்லை என்பது தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் அறிவாற்றல், நெருக்கடியான சூழலில் அவர் எடுத்த துணிச்சலான முடிவுகள், அவரை நோக்கி வந்த இடர்பாடுகளை எதிர்கொண்ட விதம் போன்ற அவரின் வியக்கத்தகு ஆளுமையை யாரும் மறுப்பதற்கில்லை. இந்த ஆளுமை தி.மு.க மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
அவரின் பிரிவு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இருப்பினும் ‘‘மரணம்’’ யாருக்கும் விதிவிலக்கு அல்ல என்பதையும் புரிந்து கொண்டு மிகுந்த கட்டுப்பாட்டுடனும், பொறுமையுடனும் நடந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம். அதுதான் நாம் அவருக்கு செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும் என்று தனது இரங்கல் செய்தியில் கூறினார்.

Go to Index

மனிதனின் குரல்

கோமாதாக்களின்
கோமியம் குடிக்கும்
கூட்டத்தாருக்கு
அதீத தாகமெனில்
அக்பர்கானின்
குருதியை
ருசிப்பார்கள்!
அதுவும் போதவில்லையெனில்
பெஹ்லு கான்
அங்கங்களை
சிதைத்ததைப் போல்
செய்வார்கள்
பசு பாதுகாவலர்கள்
பெயரால்…

இன்று தங்களின்
கோரமுகத்தை
இன்னமும் கொஞ்சம்
மாற்றியிருக்கிறார்கள்…
உயிர் எடுப்பதோடு
மட்டுமின்றி
நடைபிணமாயும்
ஆக்கிவிடலாம் என்றே!

இலங்கையிலே
இனம் அழிக்க ஆயுதம்
ஏந்தினார்கள்…
இங்கே
அடையாளங்களை
அழிப்பதற்கு
ஆயத்தமாகி
விட்டார்கள்…

அகர வரிசையின்
முதல் எழுத்தாய்
அஸ்ஸாமில்

தொடங்கி
இருக்கிறார்கள்
வாக்காளர்
பட்டியலிலிருந்து
நீக்கம் செய்வதற்கு…

இந்தியா எனும்
ஏழைத்தாய்
பெற்றெடுத்த
மக்கள் அவர்கள்
அதனால்தான்
இன்று
அஸ்ஸாமில்
அருகதை
அற்றவர்களாக
ஆக்கப்பட்டிருக்கிறார்கள்…

நாளை
நாமாகவும்
இருக்கலாம்…
ஏனெனில்
இந்தியா எனும்
ஏழைத்தாய்
பெற்றது
நம்மையும்தான்!

அவர்களின் தீர்வுக்காய்
இன்று நாம் திரளாவிடில்
நாளை நமக்கு
ஆள் இல்லை…
தோள் தர!
-மு.செ

Go to Index

மும்பையில் இந்துத்துவ தீவிரவாதிகள் கைது

மும்பையில் சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்த வைபவ் ராவத், சுதன்வா கொந்தலேகர் மற்றும் சரத் கலஸ்கர் ஆகியோரை மஹாராஷ்டிராவின் தீவிரவாத எதிர்ப்பு படையினர் ஆகஸ்ட் 10 அன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து குவியல் குவியலாக வெடிகுண்டுகளும் ஜெலட்டின் குச்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சுதந்திர தினம் மற்றும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி தீவிரவாத செயல்களை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. முழு செய்தி இங்கே

Go to Index

எதிர்வினை அர்துகானை நம்ப முடியுமா?

துருக்கி அரசியல் கட்டுரை மிக விரிவான பார்வையை, வரலாற்றுப் பின்புலத்தோடு தந்தது. கிலாஃபத் வீழ்ச்சி, உலகப் போர்களின் பின்னணியில் இஸ்லாமிய நிலப்பரப்புகள் துண்டாடப்பட்டது ஆகியவற்றையும் துருக்கி அரசியல் கட்டுரை அலசியிருந்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, மேற்கத்திய அறிவுஜீவிகளுக்கு முகம் கொடுப்பதை மட்டுமே முக்கிய பணியாக முஸ்லிம் அறிஞர்கள் மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். இஸ்லாமிய உலகின் அரசியல், பொருளாதார வளர்ச்சி குறித்தோ, தொழிற்புரட்சிக்கு பிந்தைய உலகின் நெருக்கடியை தீர்ப்பதற்கான முயற்சிகளிலோ முஸ்லிம் அறிஞர்களால் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. மேற்கத்திய அறிவுஜீவிகளின் அழுத்தத்திற்கு ஆட்பட்டதால், இஸ்லாமிய உலகம் கடும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டது. ‘இஸ்லாம் நவீன அறிவியலுக்கு எதிரானது’, ‘இஸ்லாம் நவீன நாகரிகத்திற்கு எதிரானது’ இப்படி ஒவ்வொன்றாக மேற்கத்திய அறிவுஜீவிகள் தொடுத்த அறிவு நாணயமற்ற குற்றச்சாட்டுகளுக்கு, முஸ்லிம் அறிஞர்கள் சிரமேற்கொண்டு பதிலளித்துக் கொண்டிருந்தனர். இந்த வரிசையில் அமைந்ததுதான் ‘இஸ்லாம் ஜனநாயகத்திற்கு எதிரானது’ என்ற குற்றச்சாட்டும்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, கட்டமைப்பில் சீர்திருத்தங்களை தன்னளவிலேயே தொடங்கி விட்டது கிலாஃபத் அரசியல். செய்யித் நூர்ஸி-யின் சிந்தனையால், முஸ்லிம் மன்னர்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தப்படுவதை தவிர்க்க, குர்ஆன்&-ஹதீஸ் இருந்தாலும், அரசியல் நிர்ணய சட்டம் அவசியம் என்பதை கிலாஃபத் அரசியல் கட்டமைப்பு ஏற்கத் தொடங்கியது. கிலாஃபத் அதன் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் போதுகூட, நாடாளுமன்றம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனையும் ரியாஸின் கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. இருந்தாலும், இஸ்லாமிய அரசியல் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்ற கூக்குரல் ஓயவே இல்லை. உலகப் போருக்கு பின், தேச அரசுகள் அமைந்த பின், ஜனநாயகம் என்பது, அரசியல் களத்தில் ஓர் உயரிய தெரிவைப் போல காண்பிக்கப்படுகிறது. அதனால், இஸ்லாமிய நாடுகளும் ஜனநாயக அரசியல் அமைப்புக்கு மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி, அதனை நோக்கி முஸ்லிம் நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஜனநாயக அரசியல் கேலிக்கூத்தானது என்பது அரசியல் அறிவியல் படித்தவர்களின் கருத்து.

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின், மக்களிடம் புரட்சி மனப்பான்மையால் கலகம் தோன்றாமல் இருக்கவே, நாடாளுமன்ற ஜனநாயகம் அமலுக்கு வந்ததாக வலுவான கருத்து நிலவுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை, அவர்களின் செயல்பாடுகள் திருப்தியளிக்காவிட்டால், திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை இல்லை. இதனாலேயே, “அதிகார வர்க்க ஜனநாயகம்” என இந்த அமைப்பு அழைக்கப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமை இல்லாததால், தமிழக மக்கள் படும் அவதிகளை கண்டு வருகிறோம். மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், அதனை நோக்கி ஜனநாயகம் இன்னும் பயணப்படவில்லை. இந்த அமைப்புக் குறைபாடுகள் இல்லாத ஏற்பாடுதான் கிலாஃபத் அரசியல் அமைப்பு. ஆனால் கிலாஃபத் அமைப்பிலிருந்து வெகுதூரம் இஸ்லாமிய உலகம் இன்று வந்து விட்டது. இந்தச் சூழலில்தான், இரண்டு இஸ்லாமிய ஆளுமைகள், மேற்கத்திய அழுத்தங்கள் இன்றி, சுயமாக புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். துனிசியாவின் ராஷித் கன்னூசியும், துருக்கியின் அர்துகானும்தான் அந்த இருவர். ஒருவர் அதிகாரப் பகிர்வினூடாகவும், மற்றொருவர் அதிகாரக் குவிப்பினூடாகவும் பரீட்சித்துப் பார்த்து வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் அரசியல் வகுப்புகளை கண்டுகொள்ளாத இருவரும், ஐரோப்பிய அறிவுஜீவிகளின் அரசியல் சித்தாந்தங்களுக்கு முகம் கொடுக்காத இருவரும், கிலாஃபத் வீழ்ந்து ஒரு நூற்றாண்டை நெருங்கும் வேளையில் அரசியல் இஸ்லாத்தின் புதிய பரிணாமத்தை நோக்கி வீறுநடை போடுகிறார்கள். இது சன்னி முஸ்லிம் உலகில் முற்றிலும் புதிய முயற்சியாகும். சிலுவைப் போரின் ரணங்கள் ஆறாத ஐரோப்பிய உலகம், இந்த முயற்சியை எதிர்ப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. சர்வாதிகாரி மட்டுமல்ல, வேறு என்னென்ன மோசமான வார்த்தைகள் இருக்கோ அத்தனையையும் இந்த முயற்சிக்கு எதிராக பயன்படுத்தலாம். ஆனால், ஒரு நபரின் கையில் கட்சியையும் ஆட்சியையும் கொடுத்து அதிகாரக் குவிப்பிற்கு முன்னுதாரணமும் முன்னோடியுமாக விளங்கிய இடதுசாரிகள் இதனை விமர்சிப்பதுதான் நெருடலாக உள்ளது. “இஸ்லாமிய வரலாற்றைப் பொறுத்தவரை மரபை மாற்ற முயன்றவர்களும் சரி, மரபைப் பாதுகாத்து மாற்றத்தை எதிர்த்தவர்களும் சரி, மாற்றங்கள் நடந்து கொண்டிருந்ததை கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.” இது ஜமாலுதீன் ஆஃப்கானியின் கூற்று. இந்தக் கூற்றுக்கு மாறாக, கன்னூசியும் அர்துகானும் புதிய வரலாற்றை படைக்கும் தடத்தில் பயணிக்கின்றனர்.
-ஆகிஃப்

Go to Index

குர்ஆன் பாடம்- 1 இயற்கையின் அமைப்பு

“அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.”(அல் குர்ஆன் 3:83)
பசுமையான தாவரங்கள், பறவை -விலங்கினங்கள், இயற்கை நிகழ்வுகள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தும் அல்லாஹ் வகுத்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அணு முதல் பிரம்மாண்டமான அல்லாஹ்வின் ஒவ்வொரு படைப்பும் சொந்தமாக மற்றொரு வழிக்கு மாற முடியாத அளவு கட்டாயமாக(கர்ஹன்) அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்கின்றன. பிரபஞ்சம் முழுவதும் காணப்படும் படைத்த இறைவனுடனான இந்த கட்டுப்படுதலை,- கீழ்ப்படிதலை இஸ்லாம் என்று அல்லாஹ் அறிமுகப்படுத்துகிறான்.

பிரபஞ்சம் முஸ்லிமாக இருப்பது மட்டுமல்ல ஒவ்வொரு படைப்பும் அதற்கே உரிய குணாதிசயத்துடன் அல்லாஹ்வை வணங்கியும், புகழ்ந்தும் வருகின்றன. இதனை மனிதனால் அறிந்து கொள்ள இயலாது என்று குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது. அல்லாஹ்வின் படைப்பு என்ற நிலையில் மனிதர்களாகிய நாமும் படைத்த இறைவனுக்கு முழுமையாக அடிபணிந்து அவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதன் மூலம் இயற்கையோடு பயணிக்க வேண்டும். இல்லையெனில் வாழ்க்கையின் ஒழுங்கு சீர்குலைந்துவிடும்.அது அக்கிரமமாகவும், வரம்பு மீறலாகவும் கருதப்படும்.
பிரபஞ்சம் அல்லாஹ்விற்கு நிர்ப்பந்தமாக (கர்ஹன்) கட்டுப்படும்போது மனிதன் அல்லாஹ்விற்கு சுயமாக கட்டுப்பட வேண்டும். காரணம், மனிதனுக்கு அல்லாஹ் சுயமாக சிந்திக்கும் ஆற்றலையும், பகுத்தறிவையும் அளித்துள்ளான். அதனடிப்படையில் பிரபஞ்சத்தை நோக்கி நமது பார்வையை செலுத்தி சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

இந்த இயற்கையான மார்க்கத்தை புரிந்து கொள்ள தகுதியான நிலையில்தான் மனிதன் இவ்வுலகில் பிறக்கிறான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கையான நிலையில் (ஃபித்ராவில்) பிறக்கின்றன. பெற்றோர்கள்தான் அதனை யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ, நெருப்பு வணங்கியாகவோ மாற்றி விடுகின்றனர்” (நூல்: புகாரி)

விஞ்ஞானம் அறிமுகப்படுத்துவதற்கு அப்பால் முடிவில்லாத, அறிய முடியாத மிகப் பிரம்மாண்டமான இயந்திர தொழிற்சாலையைப் போல இயங்கிக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் பிரபஞ்சம் எந்த சக்தியின் முன்னால் அணு அளவு கூட வழி தவறாமல் கீழ்ப்படிகிறதோ அந்த இறைவனுக்கு முன்பு தான் நாமும் கீழ்ப்படிகிறோம். அவனுக்கு மட்டுமே நாம் வணக்கங்களைச் செலுத்த வேண்டும். அவனிடம் மட்டுமே நமது தேவைகளை கேட்க வேண்டும். அவனிடமே நமது கவலைகளை முறையிட வேண்டும். அவன் வழங்கிய வாழ்க்கை முறை மட்டுமே களங்கமில்லாதது. பிரபஞ்சத்தில் எங்கும் எந்தவொரு குறையும் காண முடியாத அளவுக்கு அதனைப் படைத்து, ஒழுங்கமைத்து, சீரமைத்தது யாரோ அவனால் மட்டுமே மனித வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் ஒழுங்குப்படுத்த முடியும்.

Go to Index

Comments are closed.