புழல் சிறையில் நடந்தது என்ன?

0

 

 செப்டம்பர் 25 மாலையில் புழல் சிறையில் கைதிகள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம் கைதிகள் என்றதும் பரபரப்பு இன்னும் அதிகரித்தது. கைதிகள் தாக்கியதில் ஜெயிலர் இளவரசன், வார்டன் ரவி மோகன், முத்துமணி உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. மறுதினம் சம்பந்தப்பட்ட கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இதனிடையே கைதிகள் சிறையில் சுரங்கம் தோண்டினர், கண்ணாடி துகள்களை கொண்டு காவலர்களை தாக்கினர் என்று சில இதழ்களில் செய்திகள் வெளியாகின.

உண்மையில் புழல் சிறையில் நடந்தது என்ன? பிரச்சனையின் பின்னணி என்ன?

புழல் சிறையின் ஜெயிலர் இளவரசனுக்கும் கைதிகளுக்கும் (முஸ்லிம் கைதிகள் மட்டுமல்ல) இடையே பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன. பெருநாள் அன்று முஸ்லிம் கைதிகள் அனைவரும் ஒன்றாக தொழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜெயிலர் இளவரசனிடம் முன்வைக்க அதனை அவர் மறுத்துள்ளார். பின்னர் கைதிகள் சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரனை அணுகி அவரிடம் அனுமதி வாங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளவரசன் பிரச்சனையை கிளப்ப ராஜேந்திரன் அவரை அமைதிப்படுத்தியுள்ளார். பெருநாள் அன்று கைதிகளுக்கு குடும்பத்தினர் அனுப்பிய உணவை கொடுப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இளவரசன் பிரச்சனைகளுக்கு ஒன்றும் புதியவர் கிடையாது என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. “2014ல் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஏறத்தாழ நூறு கைதிகள் காயமடைந்தனர். அந்த தாக்குதலை தலைமையேற்று நடத்தியவர் இளவரசன். இதற்கு முன்னர் தண்டனையாக பதவி குறைப்பும் பெற்றுள்ளார்” என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

சிறைவாசிகளை அவமானப்படுத்துவதும், சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்துவதும் இளவரசனின் வாடிக்கை. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் போலீஸ் ஃபக்ருதீன் ஆகிய மூவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் புகார் அளித்த போதும் இளவரசன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புழல் சிறையின் உயர் பாதுகாப்பு பிரிவில் இவர்கள் மூவரும் தனிச் சிறைகளில்தான் அடைக்கப்பட்டிருந்தனர். ஒன்றாக அடைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து சிறை நிர்வாகம் அதற்கு சம்மதித்தது.

சம்பவம் நடைபெற்ற அன்று சில கோரிக்கைகளை முன் வைப்பதற்காக மூவரும் சிறை கண்காணிப்பாளரை சந்திக்க சென்றனர். கண்காணிப்பாளர் மற்றும் ஜெயிலர் ஆகியோர் இல்லாததால், சந்தித்த பின் செல்கிறோம் என்று கூறி லாக் அப்பிற்கு வெளியே நின்றுள்ளனர். பின்னர் ஜெயிலர் இளவரசன் சில வார்டன்களுடன் அங்கே வர வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இளவரசன் ‘நான் உன்னை கொல்லாமல் விடமாட்டேன்’ என்று கூற வாய்த்தகராறு முற்றியது. காவலர் ஒருவர் கைதி ஒருவரை தள்ளிவிட வாய்த்தகராறு கைத்தகராறானது.

இதில் இரு தரப்பிலும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. காவலர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கைதிகள் உயர் பாதுகாப்பு சிறை பகுதிக்கு சென்று பூட்டிக் கொண்டனர். பொதுவாக இந்த பிரிவில் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் ஜெயிலர் ஒருவர் இருப்பது வழக்கம். கதவுகளை பூட்டும் போது அவர்களும் உள்ளே இருந்துள்ளனர். இதனைத்தான் சில பத்திரிகைகள், காவலர்களை கைதிகள் பிடித்து வைத்துள்ளதாக எழுதின. கைதிகள் அப்போது சென்றிருக்கவில்லையென்றால் பிரச்சனை விபரீதமாகியிருக்கும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

தங்கள் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தால்தான் வெளியே வருவோம் என்று கைதிகள் கூறினர். கண்காணிப்பாளர் உத்தரவாதம் கொடுத்ததை தொடர்ந்து அவர்கள் வெளியே வந்தனர். காயமடைந்த காவலர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். கைதிகளுக்கு சிகிச்சை கொடுக்கப்படவில்லை. மறுதினம் கைதிகள் பல்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

சிறையில் கைதிகள் சுரங்கம் தோண்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, “காவல்துறை இந்தளவிற்கா கீழ்த்தரமான பிரச்சாரத்தில் இறங்க வேண்டும்?” என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி.

பன்னா இஸ்மாயில் மதுரைக்கும் காஜா முகைதீன் கோவைக்கும் பிலால் மாலிக் கடலூருக்கும் போலீஸ் ஃபக்ருதீன் வேலூருக்கும் அப்துல்லாஹ் திருச்சிக்கும் மாற்றப்பட்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வழக்கறிஞர் நஜ்முதீன், மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயிலை நேரில் சந்தித்தார். மற்ற

சிறைகளுக்கு மாற்றப்பட்ட பின்னர் கைதிகள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல்லாஹ் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாக வழக்கறிஞர் கமருதீன் (ஒருங்கிணைப்பாளர், குடிமக்கள் உரிமைகள் பொதுமன்றம்) தெரிவித்தார். சிறை காவலர்கள் தன்னை மீண்டும் தாக்குவார்கள் என்ற அச்சம் உள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று தான் பயப்படுவதாகவும் அப்துல்லாஹ் கூறியதாக அவர் குறிப்பிட்டார். விசாரணை

சிறைவாசிகளை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சிறைமாற்றம் செய்ய சிறை அதிகாரிகளுக்கோ காவல்துறைக்கோ அரசுக்கோ அதிகாரம் கிடையாது என்றும் அவர் கூறினார்.

“அப்துல்லாஹ்விற்கு சிறை மருத்துவரை வைத்தே சிகிச்சை அளித்துள்ளனர். வெளியில் இருந்து மருத்துவரை அனுப்பி சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும்” என்று வழக்கறிஞர் கமருதீன் நம்மிடம் கூறினார். அப்துல்லாஹ் தாக்கப்பட்டதை உள்துறை செயலாளர் உள்ளிட்ட பலருக்கும் புகாராக அளித்துள்ளார்.

தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வரும் ஜெயிலர் இளவரசனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் காயமடைந்த சிறைகைதிகளுக்கு உடனடியாக மருத்துவம் வழங்க வேண்டும் என்றும் சிறைத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார். மேலும் “சிறை என்பது சீர்தருத்தத்திற்கான இடமாக இருக்க வேண்டும் என்றால்

சிறைத்துறையை காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து மாற்ற வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையிலான அமைப்பாக அதனை மாற்ற வேண்டும்” என்றும் கூறினார்.

நிலைமை இவ்வாறு இருக்க மக்களை பிளவு படுத்துவதில் மும்முரமாக உள்ள சில லட்டர்பேட் சங்பரிவார அமைப்புகள் இதில் குளிர்காய முயற்சிக்கின்றனர். காவல்துறையை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பும் வேலையை அவர்கள் செய்து வருகின்றனர்.

சிறைக்கைதிகளை அடித்து அதில் சுகம் காணும் போக்கு அதிகரித்து வருகிறதோ என்ற எண்ணத்தை இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றன. சிறைத்துறை சீர்திருத்த துறையாகுமா?

(அக்டோபர் 2015 இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.