பெருநாள் துணிமணிகள் வாங்கித் திரும்பிய இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

0

ஹரியானா மாநிலம் பள்ளப்கார் பகுதியை சேர்ந்தவர்கள் காசிம்(22), ஷாகிர்(20), ஜூனைத்(17), மற்றும் மொஹிசின்(16) ஆகியோர். இவர்களில் ஜுனைத் குரானை முழுமையாக மனனம் செய்த ஹாஃபிழ் ஆவார். இவர், தான் ஹாஃபிழ் ஆனதற்காக தனது தாய் அளித்த பரிசுத் தொகையில் ரமலான் பெருநாளைக்கென தனக்காக புதிய ஆடைகளை வாங்க நண்பர்களுடன் டில்லி சென்றுள்ளார். அத்துடன் ஜும்மா மஸ்ஜித் சென்று தங்களுக்கு துணிமணிகளையும் வாங்கிக்கொண்டு டில்லி மதுரா ரயிலில் இந்த நண்பர் குழு பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் சென்ற ரயில் துக்லகாபாத் பகுதியை அடைந்ததும் 20 பேர் கொண்ட ஒரு கும்பல் இவர்களின் பெட்டியில் ஏறியுள்ளது. அந்தபெட்டியில் தலையில் தொப்பி அணிந்த இவர்கள் இருப்பதைக் கண்டு இவர்கள் அருகில் வந்து இவர்களின் தொப்பியையும் தாடியையும் கேலி செய்துள்ளனர். இவர்களை தேச விரோதிகள் என்றும் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்றும் கூறிய அந்த கும்பல் அவரிகளின் தாடியை இழுத்து தொந்தரவு செய்துள்ளது. இதனை இந்த இளைஞர்கள் எதிர்த்துக் கேட்க அவர்களை அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது.

முதலில் ஜுனைதை தாக்கிய அந்த கும்பல் பின்னர் காசிம் மற்றும் ஷாகிரை அவர்கள் வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளனர். அவர்கள் ரயிலில் ஏறிய துக்லகாபாத் பகுதில் இருந்து பள்ளப்கார் பகுதிவரை இந்த இளைஞர்களை அவர்கள் தாக்கிக்கொண்டே வந்துள்ளனர். இதனை ரயிலில் இருந்த எவரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்த ஜுனைத் ரயிலிலேயே உயிரிழந்துள்ளார். ஷாகிர் மற்றும் காசிம் இதில் கடுமையாக காயமுற்றுள்ளனர். ஜுனைத் இந்த தாக்குதலில் உயிரிழப்பதற்கு முன்னர் தனது குடும்பத்தை தொலைபேசியில் அழைத்து நிலைமையை விவரித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் சிலர் ரயில் நிலையம் விரைந்துள்ளனர்.

இவர்களின் குடும்பத்தினர் ரயில் நிலையத்தை அடைந்தும் அந்த இளைஞர்களை ரயில் இருந்து இறங்க விடாமல் தடுத்துள்ளது அந்த கொலைகார கும்பல். இன்னும் இவர்களை பல்வால் ரயில் நிலையதிற்கு எடுத்துச் செல்ல அவர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது. ஜுனைத்தின் குடும்பத்தினர் பள்ளப்கார் நிலையத்தில் அந்த ரயிலில் ஏறி அந்த இளைஞர்களை அந்த கொலைகார கும்பலிடம் இருந்து மீட்டு அடுத்து வந்த அசோடி நிலையத்தில் இறக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமுற்ற ஷாகிர் மற்றும் காசிம் ஃபரீதாபாத்தில் உள்ள BK மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களில் இருவரின் புகைப்படங்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் முயற்ச்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்த ஜுனைத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில் தடத்தில் மோதல்கள் நடப்பது வழமை தான் என்றும் ஆனால் இப்பகுதியில் மத மோதல் நடைபெற்றுள்ளது இதுவே முதல்முறை என்று காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. வழமையாக மோதல்கள் நடைபெறும் வழித்தடம் என்ற போது அங்கே போதிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படாததோடு அங்கிருந்த காவல்துறையினர் கூட இந்த இளைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டும் அதனை தடுக்க எந்த முயர்ச்சியும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான மொஹ்சின், ரயில்வே போலீசாரோ, அவசர ஊர்தியோ அவர்களின் உதவிக்கு அழைத்தும் வரவில்லை என்றும் பள்ளப்கார் ரயில் நிலையத்தில் காவலர்கள் இருந்தும் இந்த தாக்குதலை அவர்கள் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர் என்று கூறியுள்ளார்.

ஜுனைத் மீதான இந்த தாக்குதல் குறித்து அவரது தந்தை ஜலாலுதீன் கூறிகையில், “ஜுனைத் தான் ஹாஃபிழ் ஆனது குறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். ரமலான் தொடங்கியதில் இருந்து அவர்கள் ஒவ்வொருநாளும் பள்ளிவாசல்களில் குரானை ஓதி வந்தனர். அவர்கள் ஈத் தினத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். அதனால் புதிய உடுப்புகளை வாங்க ஜூம்மா மஸ்ஜித் சென்றனர். அவர்களின் தாய், சிறந்த உடைகளை வாங்குமாறும் அனைவருக்கும் தருவதற்கு இனிப்புகள் வாங்கிவருமாரும் கூறியிருந்தார். விரைவில் வீடு வந்து சேர்வதாக உறுதியளித்து சென்ற ஜுனைத் வீடு வந்து சேர்ந்ததோ சடலமாக.” என்று கூறியுள்ளார். மேலும் “அவர்களால் எப்படி அவ்வளவு கொடூரமாக என் மகனின் உடலை இப்படி குத்திக் கிழிக்க முடிந்தது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அவன் ஒரு 16 வயது சிறுவன். இவனை இவ்வாறு கொலை செய்ய அவர்கள் எங்களை எப்படி இவ்வளவு வெறுக்க முடிந்தது? நான் சம்பவ இடத்தை அடைந்த போது என் மகன் ஹாஷிம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்க அவனது மடியில் ஜுனைதின் ரத்தம் தோய்ந்த உடல் கிடந்தது.” என்று கூறியுள்ளார்.

தன் மகன் கொலை செய்யப்பட்டது குறித்து ஜுனைதின் தாயார் சாய்ராவிற்கு ஜுனைதின் உடல் வீடு வந்து சேரும் வரை தெரிந்திருக்கவில்லை. “இந்த ஈத் ஜூனைதிற்கு விஷேஷமான ஈத். என் மகன் ஹாஃபிழ் ஆகியிருந்தான்.” என்று கூறியுள்ளார். இன்னும் “இது எப்படி நியாயமாகும்? இந்த இழப்பை என்னால் எப்படி ஈடு செய்ய இயலும்” என்று கேள்வி கேட்கும் அவர் இனி தன்னால் ஈத் திருநாளை கொண்டாடவே இயலாது என்று கூறியுள்ளார்.

இந்த ரமலான் மாதத்தில் முன்னதாக சண்டிகார் லக்னோ விரைவு ரயிலில் உடல்நிலைக் குறைவு காரணமாக சிகிச்சைக்கு சென்று திரும்பிய ஒரு முஸ்லிம் பெண்ணை ரயில்வே காவலர் ஒருவரே ரயிலில் வைத்து கற்பழித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.