பெற்றோருக்கு அழகிய நன்மை செய்யுங்கள்

0

பெற்றோருக்கு அழகிய நன்மை செய்யுங்கள்

‘‘அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப்(சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம். – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம். – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!’’ (அல்குர்ஆன் 17:23)

அல்லாஹ்வுடன் எவரையும் எவ்விதத்திலும் இணையாக கருதக்கூடாது என்பது இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் மிகப்பெரிய செய்தியாகும். காரணம் சர்வ வல்லமை படைத்த, அனைத்து சிறப்பு பெயர்களுக்கும் சொந்தமான, எல்லாவற்றையும் அறிந்த, மனிதர்களின் தேவைகளை நிறைவு செய்யும் ஆற்றல் பெற்ற, தனது அடியார்களிடம் மிக நெருங்கிய, பெருங் கருணையுடையவனே அல்லாஹ். அவனது அருளின் நிழலில்தான் ஒரு நம்பிக்கையாளர் வாழ்கிறார். எனவே அல்லாஹ் தனது அடியார்களுக்கு அவனே போதுமானவன்.

அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு அடுத்து மனிதன் பெற்றோருக்கு மிகவும் சேவை செய்ய கடமைப்பட்டுள்ளான். பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை குறித்து விவரிக்கும் ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் உள்ளன. பெற்றோர் முஸ்லிமாக இல்லாவிட்டாலும் கூட அவர்களுக்கான கடமைகளை நிறைவேற்ற ஒரு முஸ்லிம் கடமைப்பட்டுள்ளான் என்பதை குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் இஸ்லாத்திற்கு முரணாக கட்டளையிட்டால் மட்டும் அதனை பின்பற்றக்கூடாது என்று குர்ஆன் தெளிவுப்படுத்தியுள்ளது. பெற்றோர் நமக்காக அனுபவித்த தியாகங்களை வர்ணிக்க இயலாது. ஆகையால் அவர்கள் முதுமையை அடைந்து விட்டால் நாமும் அவர்களுடைய முதுமையின் சுமையையும், சிரமங்களையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாம் முதுமை அடையும் போது நமது பிள்ளைகள் நம்மை கைவிட்டு விடுவார்கள்.

வயதானவர்களின்  பேச்சில் ஏற்படும் குறைபாடுகள் பலருக்கும் சகித்துக்கொள்ள இயலாததாக இருக்கலாம். அப்பொழுது “அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்” என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு அட்சரம் பிசகாமல் கட்டுப்படவேண்டுமே தவிர மாற்றுக் கருத்து கூற எவருக்கும் அனுமதி கிடையாது.

வீட்டுக்காரியங்களில் அவர்களுக்கு தேவையான முன்னுரிமையையும், அங்கீகாரத்தையும், கண்ணியத்தையும் வழங்கவேண்டும். மனிதனை எப்பொழுதுமே கண்ணியமானவனாகவும், சுயமரியாதை உடையவனாகவும் கருதும் மார்க்கமே இஸ்லாம். முதுமையில் மனிதன் நிராசையடையாமல் இருப்பதற்கு அவனது  பிள்ளைகளின் கவனிப்பின் மூலம் அல்லாஹ் கண்ணியப்படுத்துகிறான்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) ‘பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும்பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்றார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)” என்றார்கள். (நூல்: புகாரி)

நன்மை செய்யுங்கள்!

Comments are closed.