பெஹ்லு கான் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை

0

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியில் பசு பயங்கரவாதிகளால் அடித்து கொலை செய்யப்பட்ட பால் பண்ணை உரிமையாளர் பெஹ்லு கானின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக பெஹ்லு கான் தனது மரண வாக்குமூலத்தில் பெயர் குறிப்பிட்ட நபர்களை அவர்களது அலைபேசி எண்கள் பெஹ்லு கான் தாக்கப்பட்ட இடத்தில் இல்லை என்று கூறி ராஜஸ்தான் காலவ்துறை விடுவித்தது(பார்க்க செய்தி). தற்போது இந்த வழக்கில் சிறையில் உள்ள கடைசி இரு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ராஜஸ்தான் உயர் நீதி மன்றம் பிணை வழங்கி விடுவித்துள்ளது.

இந்த பிணை உத்தரவு மூலம், தயானந்த் மற்றும் யோகேஷ் குமார் ஆகியோர் கடந்த செப்டெம்பர் 18 ஆம் தேதி விடுதலையாகியுள்ளனர். இவர்களுக்கு இந்த வழக்கில் முன்னதாக பிணை வழங்கப்பட்டவர்களுக்கு கூறப்பட்ட காரணங்களே பிணைக்கான காரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஹரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி ரவீந்திரா என்பவருக்கு பிணை வழங்கப்பட்டது. அவரை தொடர்ந்து காலுராம் என்பவருக்கு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதியும் விபின் எபவருக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதியும் பிணை வழங்கப்பட்டது.

ரவீந்திரா விற்கு ஆஜரான இந்திய பார் கவுன்சிலின் முன்னாள் தலைவர் பிரி சிங் சின்சிவார், ரவிந்திராவின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் சம்பவம் நடைபெற்ற போது அந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தான் ரவீந்திரா இருந்தார் என்று கூறி அவர் வாதிட்டார். இந்த வழக்கில் ரவிந்திராவின் பிணைக்கு எதிராக வழக்கறிஞர் வி.ஆர்.பாஜ்வா மற்றும் வழக்கறிஞர் அமீர் அஜிஸ் ஆகியோர் வாதிட்டனர். காலுராமின் பிணையின் போது அதனை வழகறிஞர் அஜிஸ் எதிர்த்தார்.

ஆனால் விபின் பிணையின் போது அதற்கு எதிராக வாதிட தனியார் வழக்கறிஞர் எவரையும் நியமிக்க பெஹ்லு கான் குடும்பத்தினரால் இயலவில்லை. இது குற்றம் சாட்டப்பட்டவர்களின் பிணையை மேலும் எளிதாக்கியது. இதனை பயன்படுத்திக்கொண்டு விபின் வழக்கும் ரவீந்திரா வழக்கு போன்றது தான் என்று கூறி பிணை விண்ணப்பித்துள்ளனர்.

ரவீந்திரா மற்றும் காலுராம் சம்பவ இடத்தில் இல்லை என்று கூரப்பட்டாலும் பெஹ்லு கானை தாக்கிய தடி ஒன்று விபின் உடன் காணப்பட்டுள்ளது. அப்படி இருக்க இவரது வழக்கை எப்படி ரவிந்திராவின் வழக்குடன் ஒப்பிட்டு பார்க்க இயலும் என்று கேள்வி எழுப்புகிறார் அஜிஸ்.

காவல்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், பெஹ்லு கானை தாக்கப் பயன்படுத்தப்பட்ட அந்த தடி, விபினின் வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கபட்டிருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அஜிஸ் கூறுகையில், “பெஹ்லு கான் கொலை வழக்கின் ஒட்டு மொத்த விசாரணையும் காவல்துறையால் சிதைக்கப்படுகிறது. முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் இந்த வழக்கிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் என்று கூறிய காவல்துறை கைது செய்த மற்றவர்களை முதல் தகவல் அறிக்கையில் பெயர் குரிப்பிடப்படாதவர்கள் என்று கூறி பிணையில் விடுவிகின்றது’ என்று கூறியுள்ளார்.

Comments are closed.