பெஹ்லு கான் கொலை வழக்கு: நீதிமன்றம் சென்ற சாட்சியங்கள் மீது துப்பாக்கிச்சூடு

0

பெஹ்லு கான் கொலை வழக்கு: நீதிமன்றம் சென்ற சாட்சியங்கள் மீது துப்பாக்கிச்சூடு

பசு பயங்கரவாதிகளால் கடந்த வருஷம் ராஜஸ்தான் மாநிலத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்ட பெஹ்லு கான் வழக்கில் சாட்சி கூற சென்ற அவரது இரு மகன்கள் மற்றும் இன்ன பிறர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பெஹ்ரோர் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு சாட்சியை கூறச் சென்ற இவர்கள் மீத தேசிய நெடுஞ்சாலையில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகிற காலங்களில் சாட்சிகள் நீதிமன்றம் செல்ல தக்க பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருந்தும் பெஹ்லு கானின் குடும்பம் வழக்கை பெஹ்ரோரில் இருந்து ஆள்வாருக்கு மாற்றும்படி கோரிக்கை வைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெஹ்லு கான் மகன்களின் வழக்கறிஞர் ஆசாத் ஹாயாத் கூறுகையில், “தாக்குதல் நடத்தப்பட்ட போது சாட்சிகள் அஸ்மத், ரஃபிக், ஓட்டுனர் அம்ஜத், பெஹ்லு கானின் மகன்கள் இஸ்ர்ஷத் மற்றும் ஆரிப் ஆகியோருடன் நானும் காரில் இருந்தேன். நாங்கள் எங்கள் தரப்பு சாட்சியத்தை வழங்க பெஹ்ரோர் சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் நீம்ரானா பகுதியை கடந்து செல்கையில், வாகனப்பதிவு எண் இல்லாத கருப்பு நிற ஸ்கார்பியோ வாகனம் எங்களை முந்திச் சென்று எங்களை நிறுத்த முயன்றது.” என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் நடந்தவற்றை விவரித்த பெஹ்லு கானின் மகன் இர்ஷத், அந்த வாகனத்தில் இருந்தவர்கள் சைகையினால் தங்களை நிற்கும்படி கூறியதாகவும் தங்களது வாகனம் நிற்காமல் சென்ற காரணத்தால் அவர்கள் தாங்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீம்ரனா காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றவாளிகள் மீது IPC 307 மற்றும் 507 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆள்வார் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பெஹ்லு கானின் குடும்பத்தினர் மீதான இந்த தாக்குதல் அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்றுள்ளது. தங்களது தந்தையை கொலை செய்தவர்களில் ஆறு நபர்கள் குற்றமற்றவர்கள் என்று பெஹ்ரோர் காவல்துறை விடுவித்ததானால் அவர்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதனால் தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது தாங்கள் நேரடியாக காவல்துறை கண்காணிப்பாளரை சென்று சந்தித்ததாகவும் பெஹ்லு கானின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்னும் இது போன்ற சூழ்நிலையில் தங்களால் எப்படி சாட்சி கூற இயலும் என்றும் அதனால் இந்த வழக்கு பெஹ்ரோரில் இருந்து ஆள்வாருக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் பெஹ்லு கான் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துளனர்.

Comments are closed.