பேரம் பேசும் என்.ஐ.ஏ.! தொடரும் குற்றச்சாட்டுகள்

0

பேரம் பேசும் என்.ஐ.ஏ.! தொடரும் குற்றச்சாட்டுகள்

தேசிய புலனாய்வு முகமை என்றழைக்கப்படும் என்.ஐ.ஏ.விற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் மசோதாவிற்கு நாடாளுமன்ற மக்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகளை முடிப்பதற்கு என்.ஐ.ஏ. பேரம் பேசுவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2008 மும்பை தாக்குதல்களை தொடர்ந்து தீவிரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட என்.ஐ.ஏ. 2014ல் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அமைந்த பிறகு முற்றிலும் முஸ்லிம்களை குறிவைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்துத்துவ தீவிரவாதிகள் தொடர்புடைய குண்டுவெடிப்பு வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போயின. குற்றம்சாட்டப்பட்ட இந்துத்துவ தீவிரவாதிகளில் பெரும்பான்மையினர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர், அல்லது ஜாமீனில் வெளியே உள்ளனர்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க., என்.ஐ.ஏ.விற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் என்.ஐ.ஏ. சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த புதிய திருத்தங்களின் பிரகாரம், வெளிநாடுகளில் இந்தியர்கள் மற்றும் இந்நிய நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை விசாரிக்கும் அதிகாரம் என்.ஐ.ஏ.விற்கு வழங்கப்படுகிறது. எந்தவொரு செசன்ஸ் நீதிமன்றத்தையும் என்.ஐ.ஏ. நீதிமன்றமாக அறிவிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படும். அத்துடன் சைபர் குற்றங்கள், ஆள் கடத்தல், கள்ளநோட்டு விவகாரம், ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை உள்ளிட்ட குற்றங்களையும் இனி என்.ஐ.ஏ. விசாரிக்கும். இந்த முக்கிய திருத்தங்கள் மற்றும் சில திருத்தங்களுடன் என்.ஐ.ஏ. (சட்டதிருத்த) மசோதா, 2019யை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கொண்டு வந்தது.

என்.ஐ.ஏ. சட்டம் குறித்த சட்டப்புர்வ அந்தஸ்து குறித்தே வழக்குள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த மசோதாவை அரசாங்கம் எவ்வாறு கொண்டு வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினாலும் இச்சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு (முஸ்லிம்களுக்கு) எதிராக மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை இன்னும் சிலர் சுட்டிக் காண்பித்தனர். இந்துத்துவ தீவிரவாத வழக்குளில் தொடர்புடையவர்கள் விடுவிக்கப்பட்ட போது அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ. ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்று மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் உவைசி எழுப்பிய கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதால் என்.ஐ.ஏ. மேல்முறையீடு செய்யவில்லை என்றும் உவைசி கூறினார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மென்மையான போக்கை கையாளுமாறு தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சாலியான் குற்றம்சாட்டியதை சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய போது, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் எதுவும் கூற இயலாது என்று கூறி ஒதுங்கிக் கொண்டார், புதிய மசோதாவை அறிமுகம் செய்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி. மசோதா மீதான விவாதத்தின் போது, அசாதுதீன் உவைசியை விரல் நீட்டி அமித் ஷா பேசியது சூடான விவாதங்களை கிளப்பியது.
எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முறையான பதில்களை அளிக்காத அரசு தரப்பு, இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது என்று மட்டும் கூறியது. மோடி அரசு இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தாது என்றும் ஆனால் பயங்கரவாதத்தை முடிப்பதற்காக அதை மத கண்ணோட்டத்துடன் பார்க்காது என்றும் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாதம். தேச பாதுகாப்பு என்ற தங்களின் வழக்கமான வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தி மசோதாவை ஆதரித்தார்.

மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய போது, அதனை எதிர்த்த அசாதுதீன் உவைசி, டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உறுப்பினர்களை எழுந்து நிற்குமாறு கூறி எண்ணுவதற்கு டிவிஷன் முறை எனப்படும். இதன் மூலம் மசோதாவை யார் ஆதரித்தார்கள், யார் எதிர்த்தார்கள் என்பது தெரிய வரும். உவைசியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து 278 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மசோதாவை ஆறு உறுப்பினர்கள் எதிர்த்தனர். என்.ஐ.ஏ. சட்டத்தை தனது ஆட்சியின் போது கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி, குரல் வாக்கெடுப்பு மூலமே மசோதாவை நிறைவேற்றலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மை மக்களை குறிவைப்பதுடன் மாநிலங்களின் சுயாட்சியையும் என்.ஐ.ஏ. பறித்து அரசியல் பழிவாங்கலுக்கும் பயன்படுத்தப்படுவதாக நியாயமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. என்.ஐ.ஏ.வின் விபரீதத்தை ஆரம்பத்தில் உணராத சில கட்சிகள் தங்களுக்கு எதிராக அது பயன்படுத்தப்பட்ட பின்தான் அதன் கடுமையை உணர்ந்து கொண்டனர். 272 வழக்குகளை (264 வழக்குகள் என்று அதன் இணையதளம் கூறுகிறது). தற்போது விசாரித்து வரும் என்.ஐ.ஏ. 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 51 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் 46 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி 90 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று பெருமையுடன் கூறினார்.

2009இல் இருந்து 2013 வரை 78 வழக்குகளை மட்டுமே என்.ஐ.ஏ. விசாரித்து வந்தது. இதில் இந்துத்துவ தீவிரவாதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரிவினைவாத குழுக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தன. ஆனால் 2014ல் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகுதான் முஸ்லிம்களை குறிவைக்கும் விதத்தில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை வழக்குகள் தெரிவிக்கின்றன. மாநில காவல்துறை விசாரிக்க வேண்டிய வழக்குகளை, தனது பழிவாங்கும் போக்கிற்காக, என்.ஐ.ஏ.விடம் பா.ஜ.க. அரசு ஒப்படைத்து வருகிறது. 90 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக் கொடுத்துள்ளோம் என்று உள்துறை இணை அமைச்சர் பெருமைபட்டுக் கொண்டாலும் வழக்குகளை என்.ஐ.ஏ. எவ்வாறு முடிக்கிறது என்பது குறித்தும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்து அவர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன.

இந்து சமூகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கர்நாடகாவில் கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறி 13 நபர்கள் மீது 2012ல் குற்றம் சாட்டியது என்.ஐ.ஏ. ஜாமீனில் கூட வெளிவர முடியாத அளவிற்கு யு.ஏ.பி.ஏ. என்ற கடும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட இவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2016ல் பேரத்தில் ஈடுபட்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாத என்.ஐ.ஏ., குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள், குறைந்த தண்டனை பெற்றுத் தருகிறோம் என்று இந்த அப்பாவிகளிடம் பேரம் பேசியது. முடிவின்றி நீடித்து செல்லும் விசாரணை, உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதை என கடும் வலிகளை சந்தித்த இந்த அப்பாவிகளும் பேரத்திற்கு படிந்தனர். குற்றத்தை ஒப்புக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளை குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் நீதிபதியும் எடுத்துக் கூறிய போதும் வேறு வழியின்றி 13 நபர்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வழக்குகளை முடிப்பதற்கு என்.ஐ.ஏ. இதே வழிமுறையை இனி தொடர்ந்து கையாளுமோ என்ற கேள்வியும் அப்போது எழுப்பப்பட்டது.

இதே பேரம் பேசும் வழிமுறையை மற்றொரு வழக்கிலும் என்.ஐ.ஏ. கையாண்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. வலதுசாரி இந்து அரசியல் தலைவர்களை மகாராஷ்டிராவின் நந்தித், ஆந்திவின் ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவின் பெங்களுர் ஆகிய நகரங்களில் கொலை செய்ய திட்டமிட்டதாக முகம்மது கவுஸ் உள்ளிட்ட ஐந்து நபர்களை மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்பு படை (ஏ.டி.எஸ்.) 2012ல் கைது செய்தது. இவர்களை லஷ்கர் இ தய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் அது கூறியது. 2013ல் இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்டது. ஏழு வருடங்கள் கழித்து இந்த வழக்கில் முகம்மது கவுஸிற்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்கள் ஐவரும் தங்களின் குற்றங்களை ஒப்புக் கொள்வதாக நீதிபதியிடம் கூறினர். ஆனால் அவர்களின் ஒப்புதலை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

அப்போது கவுஸின் ஜாமீன் மனுவையும் நிராகரித்த நீதிபதி, எட்டு மாதங்களுக்குள் இந்த வழக்கின் விசாரணையை எடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்த எட்டு மாதங்களில் வெறும் மூன்று சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டதாகவும், தற்போது இறுதி சாட்சியின் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கவுஸ் தெரிவித்தார். தாங்கள் நிரபராதிகள் என்ற போதும் நீடித்துக் கொண்டே செல்லும் விசாரணை மற்றும் தங்களின் குடும்பத்தினரின் நிலையை கருத்தில் கொண்டே குற்றத்தை ஒப்புக் கொள்ளும் முடிவை தாங்கள் எடுத்ததாக கவுஸ் இப்போது கூறியுள்ளார்.

பெங்களுரில் இதே போன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் ஐந்தாண்டுகள் மட்டும் தண்டனை பெற்றுக் கொடுத்ததாகவும் அதே முறையை தாங்களும் பின்பற்றலாம் என்று என்.ஐ.ஏ. கூறியதாகவும் கவுஸ் கூறியுள்ளார். ஏற்கனவே ஐந்தாண்டுகளை சிறையில் கழித்து விட்டதால் குற்றத்தை ஒப்புக் கொண்டால் சிறையை விட்டும் வெளியே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தாங்கள் இவ்வாறு செய்ததாகவும் கவுஸ் தெரிவித்தார்.
சென்ற வாரம் கவுஸிற்கு ஜாமீன் வழங்கிய பம்பாய் உயர்நீதி மன்றம், எங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்து பார்க்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு (கவுஸிற்கு) எதிரான குற்றச்சாட்டுகள் உண்மை என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. அப்பாவிகளை அநியாயமாக கைது செய்து அவர்களின் வாழ்க்கையை சிதைத்து இறுதியில் பேரம் பேசி குற்றவாளிகளாக்கும் என்.ஐ.ஏ.வின் கீழ்த்தரமான போக்கை இந்த வழக்கும் நிரூபித்துள்ளது.

அப்பாவிகளை ஆதாரமின்றி குற்றவாளிகளாக சித்தரித்து அவர்களின் வாழ்வை நாசமாக்குவதுடன் மாநில சுயாட்சியையும் கேள்விக்குறியாக்கும் என்.ஐ.ஏ.வை உடனடியாக கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் உரக்க எழ வேண்டியதன் அவசியத்தையே இந்த வழக்கும் உணர்த்துகிறது.

-ரியாஸ்

Comments are closed.