பேரா.சாய்பாபா வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுக்கும் டில்லி பல்கலைகழகம்

0

டில்லி பல்கலைகழகத்தின் ராம் லால் ஆனந்த் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் டாக்டர் ஜி.என்.சாய்பாபா. இவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர் என்று கூறி 2014 மே மாதம் மகாராஷ்டிரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக 2015 ஜூலை மாதம் இவருக்கு பிணை வழங்கப்பட்டது. அந்த பிணை உத்தரவை பாம்பே உயர்நீதிமன்றம் 2015 டிசெம்பர் மாதம் ரத்து செய்திருந்தது. இறுதியாக கடந்த 2016 ஏப்ரல் மாதம் உச்சநீதி மன்றத்தில் நிபந்தனையற்ற பிணையில் வெளியான இவர் இன்னும் தனது பணியில் சேர்க்கப்படவில்லை.

சக்கர நாற்காலியில் வலம்வரும் பேராசிரியர் சாய் பாபா தனக்கு 2015 ஏப்ரல் மாதம் பிணை கிடைத்தப்பின் தனது கல்லூரிக்கு செல்கையில் அங்கு வலது சாரி மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி.யினர் தேச துரோகியே வெளியே போ என்று கோஷம் எழுப்பினர். அடுத்ததாக ஐந்து நாட்களுக்குள் பேராசிரியர் சாய்பாபாவை கல்லூரி வளாகத்திற்குள்ளேயே தாக்க இதே வலதுசாரி மாணவ அமைப்பினர்களால் மூன்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பேராசிரியருக்கு பெரும் அதிர்ச்சியாக கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து அவரை இடைநீக்கம் செய்ததற்கான முடிவு அவர் மீதான வழக்கு முடியும் வரை நீடிக்கும் என்று கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் சாய்பாபா கூறுகையில், “எனது வழக்கு குறித்து விசாரிக்க கல்லூரி நிர்வாகம் நியமித்த ஒரு நபர் விசாரணை குழுவின் முடிவுக்காக நான் காத்திருந்தேன். ஆனால் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து நான் மீண்டும் பணியில் தொடர்வதை தடை செய்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.” என்று கூறியுள்ளார்.

” பிணையில் வெளிவந்த நபர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவது குறித்த ஆயிரம் ஆயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. மேலும் எனக்கு நிபந்தனை இல்லா பிணை வழங்கப்பட்டுள்ளது, இருந்தாலும் நாள் கல்லூரியில் சேர்ந்து பணியாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

கல்லூரியின் இந்த முடிவு குறித்து பேராசிரியர் சாய்பாபாவிற்கு ஆதரவான குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த கல்லூரி, ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக அயராது பாடுபடும் பேராசிரியர் சாய்பாபாவை குற்றம் சுமத்தி, குற்றவாளியாக்கி மிரட்டுகிறது என்று தெரிவித்துள்ளது.

பேராசிரியர் சாய்பாபா கல்லூரியில் பணியாற்றுவதை தடை செய்தது குறித்து கல்லூரி நிர்வாகம் கருத்து தெரிவிக்கையில், பல்கலைகழக துணை வேந்தரின் ஒப்புதல் இல்லாமல் பேராசிரியரை மீண்டும் பணியமர்த்த முடியாது என்றும் மேலும் இவரை விசாரணை செய்த குழு சமர்ப்பித்த அறிக்கையில், மாவோயிஸ்டுகளுடன் பேராசிரியருக்கான தொடர்பு குறித்து மறுக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Comments are closed.