பேர்ணாம்பேட் கஸ்டடி மரணம்

0

பேர்ணாம்பேட் கஸ்டடி மரணம் குறித்து நமது செய்தியாளர்கள் தரும் முதல் அறிக்கை

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஜமீல் பாஷா (26) என்பவர். இவர், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பேட்டில் உள்ள தனியார் தோல் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குடும்பத்துடன் பேர்ணாம்பெட்டில்தான் வசித்து வந்தார். இவர் வேலை பார்க்கும் கம்பெனியில் பணிபுரியும் பெண், அவருடைய வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையைப்பற்றி இவரிடம் கூறியுள்ளார்.

இவரும் மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண்ணை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, தன்னுடைய மனைவியிடம் அந்தப் பிரச்சனையைப் பற்றி கூறியுள்ளார். அவருடைய மனைவியும் வீட்டிற்கு எல்லாம் ஏன் அழைத்து வந்துள்ளீர்கள் என்று கூறி இருக்கிறார். அடுத்தநாள், அந்தப் பெண் இவரிடம் எந்த தகவலும் சொல்லாமல் இவருடைய வீட்டை விட்டு வெளியேறிவிட்டது. இந்த சம்பவம் அறிந்து அந்தப் பெண்ணின் குடும்பத்தார், பெண்ணை காணவில்லை என்று கூறி, பாளைக் கொண்டான் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

காவலர்கள் அந்தப் புகாரின் பேரில் ஜமீல் பாஷா இல்லாத நேரம் வீட்டிற்கு சென்று, தகாத வார்த்தைகளை கூறி திட்டியுள்ளனர். எந்த தவறும் செய்யாத இவர், தானாகவே காவல்நிலையம் சென்றுள்ளார். அப்பொழுது, காவல்துறையினர் இவரை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, நான்கு நாட்களாக எந்தவித புகாரும் பதிவு செய்யாமல், சிறையில் வைத்து கடுமையான முறையில் தாக்கியுள்ளனர்.

நான்கு நாட்களாக தேடியும், ஜமீல் பாஷாவை காணவில்லை என்று குடும்பத்தார் விசாரித்து விட்டு, வழக்கறிஞர்கள் ஆலோசனையின் பேரில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை(ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்ய இருந்திருக்கின்றனர். இதை அறிந்து, காவல்துறையினர் ஜமீல் பாஷாவை வீட்டில் கொண்டு விட்டுள்ளனர். காவல்துறையினரின் சித்திரவதையால் உடல் மிகவும் பலஹுனமடைந்து காணப்பட்ட இவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கும், உடல்நிலை தேராததால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து அவரின் உடல்நிலை மோசமாகவே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு 25.06.2014 அன்று இரவு 12.00 மணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அங்கு தொடர் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 26.06.2015 அன்று மாலை 5.45 மணிக்கு ஜமீல் பாஷா உயிரிழந்துள்ளõர்.

இவருடைய இறப்புக்கு முக்கியக் காரணமாக காவல்துறையினரின் சித்திரவதையே காரணமாக இருந்துள்ளது. அதை மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். பேர்ணாம்பெட்டில் உள்ள பள்ளிக்கொண்டான் காவல்நிலையத்தில் உள்ள காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின் மற்றும் ஆறு காவலர்கள் இணைந்து தான் இவரை தாக்கியுள்ளனர் என்றும், இவர் மீது உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவருடைய குடும்பத்தார் தெரிவித்தனர்.

மேலும், அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களின் சார்பாக, ஜமீல் பாஷாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை வீடியோ கவரேஜ் செய்ய வேண்டும் என்றும், இறந்தவரின் குடும்பத்தாருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி, தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைத்து ஜூன் 27 அன்று சென்னையில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பள்ளிக்கொண்டான் காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளர் மார்ட்டினால் இதோடு மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பேர்ணாம்பேட்டை சேர்ந்த ரிஸ்வான் என்பவரும் இதே காவல் ஆய்வாளர் மார்டினால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவருடைய குடும்பத்தார் மற்றும் அவரின் இறப்பிற்கு நீதி கேட்டு போராடும் அனைவரின் எதிர்பார்ப்பாகும். இல்லையேல், தொடரும் இந்த காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி இல்லாமல் போய்விடும் நிதர்சனமான உண்மை.

Comments are closed.