புதுடெல்லி: டெல்லி துருக்மான் கேட் அருகே பைக்கில் பயணித்தவரை காரில் சென்றவர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளை டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மி பாதுகாப்பதாக கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.குற்றவாளிகள், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் இணைந்து நிற்கும் ஃபோட்டோவை அவர்கள் இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு பதினொன்றரை மணியளவில் பைக், காருடன் மோதியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஷாநவாஸ் என்ற இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டார்.ஷாநவாஸ் தனது மனைவி, பிள்ளைகளுடன் ஒரு திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.வழியில் ஒரு காரின் சைலன்ஸரில் பைக் மோதிவிட்டது.உடனே காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி ஷாநவாஸ் மற்றும் அவரது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் ஷாநவாஸின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.அவரது மனைவிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.இச்சம்பவத்தை தொடர்ந்து ஷாநவாஸின் ஊர் மக்கள் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.சிலவற்றை தீக்கிரையாக்கினர்.இப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஷாநவாஸை நான்கு பேர் தாக்கியதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.இவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மீதமுள்ள மூன்று நபர்களை காவல்துறை தேடி வருகிறது.ஷாநவாஸின் படுகொலையில் உள்ளூர் ரியல் எஸ்டேட் மாஃபியாவுக்கும் தொடர்பு இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.