பைக்கில் முந்திச் சென்றதால் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்

0

மகாராஷ்டிராவில் அம்பேத்கர் படம் ஒட்டப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் தங்களை முந்திச் சென்று விட்டார்கள் என்பதற்காக இரண்டு தலித் இளைஞர்கள் மீது ஆதிக்க சாதியினர் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மகாராஷ்டிராவின் பீத் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் சுமார் 25 பேர் கூடி இந்த இளைஞர்களை தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட இருவரும் அப்பகுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மஜால்கோன் பகுதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹரி பாலாஜி கூறுகையில், இந்நிகழ்வு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் புகாரின் அடிப்படையில் இந்த தாக்குதலுக்கு காரணம் தலித் இளைங்கர்களின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கரின் படம் ஒட்டப்பட்டிருந்தது தான் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த ஞாயிற்று கிழமை மஹாராஷ்டிராவில் ஒரு தலித் குடும்பம் மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்று குற்றம் சாட்டி ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டது. மேலும் பஹுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தலித் என்பதால் அவர் விபச்சாரியை விட கேவலமானவர் என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தலித் சமூகத்தினர் மீதான வன்முறைகளை தற்பொழுது அதிகரித்து வருகின்றது கவலையை தருகின்றது.

தங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக குஜராத், உத்திர பிரதேசம் மற்றும் பல இடங்களில் தலித் சமூகத்தினர் போராடி வருகின்றனர்.

Comments are closed.