பொது இடங்களில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள் மீது தாக்குதல்-:ஹரியானாவில் இந்துத்துவ அராஜகம்!

0

பொது இடங்களில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள் மீது தாக்குதல்-:ஹரியானாவில் இந்துத்துவ அராஜகம்!

ஹரியானா மாநிலம் குட்காவில் கடந்த மே 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக வந்த முஸ்லிம்கள் மீது இந்துத்துவாவினர் தாக்குதல் நடத்தினர். இந்துத்துவாவினர் இங்கு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது இது இரண்டா-வது முறையாகும். கடந்த மாதம் 20-ஆம் தேதி ஜும்ஆ தொழுகைக்காக முஸ்லிம்கள் வந்தபோதும் தாக்குதல் நடத்தப்பட்டது.குட்காவின் திறந்த வெளி மைதானங்களில் முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையை நடத்திக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த இந்துத்துவாவினர் தாக்குதலை நடத்தினர். பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத், சிவசேனா, இந்து ஜாக்ரன் மன்ச், அகில பாரதீய இந்து கிராந்தி தள் ஆகிய அமைப்புகளின் கூட்டமைப்பான சன்யுக்த் இந்து சங்கர்ஷ் சமிதியின் தலைமையில் இந்த தாக்குதல் நடந்தது.

அதுல் கத்தாரியா சவுக், சிக்கந்தர்பூர், சைபர் பார்க், மெஹ்ரோலி குட்காவ் சாலை ஆகிய இடங்களில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. மெட்ரோ ஸ்டேஷனுக்கு அருகே ஜும்ஆ தொழுகைக்கு தயாரான முஸ்லிம்களை பல வாகனங்களில் வந்த இந்துத்துவாவினர் தடுத்து நிறுத்தியதாக சிக்கந்தர்பூரைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் ராகுல் ராய் தெரிவித்தார். சம்பவம் நடந்த இடத்திலிருந்தவர்கள் செல்ஃபோனில் பதிவு செய்த காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவின. ஆனால், தொழுகையை தடுத்ததாக யாரும் புகார் அளிக்காததால் வழக்கு பதிவு செய்ய முடியாது என்று காவல்துறை கூறுகிறது.

இந்த பிரச்சனையைக் குறித்து விசாரித்தபோது குட்காவ் டிவிசனல் கமிஷனர் வினய் பிரதாப் சிங் பதில் அளிக்க மறுத்துவிட்டதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குட்காவ் செக்டர் 53ல் ஏப்ரல் 20-ஆம் தேதி ஜும்ஆ தொழுகையை தடுத்த சம்பவத்தில் ஆறு பேரை போலீஸ் கைது செய்து ஜாமீனில் விடுவித்திருந்தது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் 27-ஆம் தேதி அங்கு தொழுகை நடந்தது.ஆனால், இந்துத்துவாவினர் பிரச்சனையை உருவாக்கலாம் என்ற செய்தி கிடைத்ததை தொடர்ந்து முஸ்லிம்கள் அங்கு தொழுவதை தவிர்த்து இதர 10 இடங்களில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால், இந்த இடங்களிலும் கும்பலாக வந்த இந்துத்துவாவினர் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர். குட்காவ் செக்டர் 54 ஒரு சோதனை ஓட்டம் என்றும் பொது இடங்களில் எங்குமே தொழுகை நடத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் பஜ்ரங்தளத்தின் மாவட்ட தலைவர் அபிஷேக் கவுர் மிரட்டல் விடுத்துள்ளார்.

பொது இடங்களை ஆக்கிரமிக்க முஸ்லிம்கள் முயற்சிப்பதாக சங்கபரிவார அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுவதை எதிர்த்து ஹரியானா மாநில தலைமைச் செயலகம் முன்பாக சன்யுக்த் இந்து சங்கர்ஷ் சமிதி போராட்டம் நடத்தியது. அதேவேளையில், இந்துத்துவா அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், முஸ்லிம்களுக்கு தொழுவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த 130 குடும்பங்கள் குட்காவ் டிவிசன் கமிஷனருக்கு மனு அளித்துள்ளனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.