பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்?

0

பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்?

கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்த பொன்னார் என்று அழைக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மக்களுக்கு என்ன செய்தார் என்பதற்கு பொய் மூட்டைகளை தவிர பாஜகவினரிடம் எந்த பதிலும் இல்லை.

காற்றில் பறக்க விடப்பட்ட வாக்குறுதிகள்
பொன்னார் 2014ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது 63 வாக்குறுதிகள் குமரி மக்களுக்கு தந்தார். ஆனால் அதில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.

குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என அவர் கூறினார். ஆனால் அதைவிடுத்து குமரியின் கடல் வளத்தையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் விதமாக கோவளம் சரக்கு பெட்டக மாற்று முனையத்தை அமைக்க கடும் முயற்சி செய்து வருகிறார்.

சுவாமி தோப்பு பகுதியில் விமானநிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் அதற்காக எந்த வித முயற்சியும் எடுக்க வில்லை.
இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க பாடுபடுவேன் என வாக்குறுதியளித்து கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெரிய போராட்டங்களையெல்லாம் நடத்தினார். ஆனால் வெற்றிபபெற்ற பிறகு இது குறித்து அவர் வாய் திறக்கவில்லை.

குமரி மாவட்டத்தில் ஐ.ஏ.ஸ், ஐ.பி.எஸ் போன்ற மத்திய, மாநில அரசு உயர் பணிகளில் சேரவும் படித்த இளைஞர்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவும் உலக தரத்தில் நூலகம் உள்ளடக்கிய பயிற்சிமையம் உருவாக்கப்படும் என கூறினார். ஆனால் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
குமரி மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் புற்றுநோய்க்கு நிவாரணம் அளிக்கும் விதமாக ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் இது தொடர்பாக சிறு முயற்சி கூட எடுக்கவில்லை.

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை அதிநவீன வசதியுடன் கூடிய (Multi Speciality Hospital) மருத்துவமனையாக தரம் உயரத்தப்படும் என்று கூறினார். ஆனால் தற்போது ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கடற்கரை மற்றும் மலையோர சுற்றுலா மையங்களையும் மேம்படுத்தி பராமரிப்பதோடு குமரி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி விட்டு தற்போது குமரியை பாலை நிலமாக மாற்றி வருகிறார்.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ஏவிஎம் கால்வாய் சீர் செய்யப்பட்டு சிறந்தமுறையில் பராமரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார். மத்திய அரசின் மூலமாக இந்த திட்டத்தை எளிதாக நிறைவேற்ற முடியும். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் அதிகம் பயனடைபவர்கள் கிறிஸ்தவ மீனவர்கள் என்பதால் இந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டார்.
நாகர்கோவில் நகராட்சிப்பகுதிகளில் தீராத பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க உலக்கை அருவி குடிநீர்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் நாளுக்குநாள் நாகர்கோவில் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கன்னியாக்குமரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தகம் ரப்பர் ஆகும். ஆசியாவிலேயே தரமான ரப்பர் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் விற்பனை அதிகாரம் அனைத்தும் கேரளாவை நம்பி இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது. குமரி மக்கள் நீண்ட நாட்களாகவே குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால் ரப்பர் தொழிலாளிகளுக்கு இந்த ஐந்து வருடத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. இது குறித்து பாரபட்சமாகவே இருந்தார் பொன்னார்.

கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் வசதிக்காக நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய தொலைத்தொடர்பு வசதிகள் செய்யப்படும். கடலில் காணாமல் போகும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க ரேடார் வசதியுடன் கூடிய ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என்று ஆசைவார்த்தைகள் கூறி கடந்த தேர்தலில் மீனவர்கள் வாக்குகளையும் கணிசமாக பெற்றார். ஆனால் ஓகி புயலில் மீனவர்கள் கடலில் செத்து மிதந்த போது ஆறுதல் கூறக்கூட கடல் புறத்திற்கு அவர் வரவில்லை.

மேலும், குமரி மாவட்டத்தில் சாதி, சமய, மொழி நல்லிணக்கம் பேணப்பட்டு அமைதியுடன் கூடிய வளர்ச்சிக்காக முழுநேரம் பாடுபடுவேன் என்று கூறியவர் ஆர்.எஸ்.எஸ் கும்பலால் கிறிஸ்த்தவர்கள் பாதிக்கப்பட்டபோது திரும்பி கூட பார்க்கவில்லை பொன்னார்.

வளங்கள் கொள்ளை
2014 நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்களித்த எதையும் நிறைவேற்றாத பொன்னார் வாக்களிக்காத மேம்பாலங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்தினார். இதன் மூலம் கோடிக்கணக்கில் ஊழலும் செய்துள்ளதாக குமரிமாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நீர்வளம், மலைவளம், கடல்வளம் என அனைத்து வளங்களையும் சுரண்டி குமரியை ஐந்து வருடத்தில் பாலைநிலமாக மாற்றிய பெருமை பொன்னாரையே சாரும். 2007ம் ஆண்டு திமுகவை சார்ந்த டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்த போது என்.ஹெச் 47 மற்றும் என்.ஹெச்.47 பி ஆகிய சாலைகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் உறுதிப்படுத்தல் திட்டத்திற்கு அனுமதி வாங்கியிருந்தார். ஏற்கனவே இருந்த சாலைகளைதான் விரிவுப்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் பொன்னார் மத்திய அமைச்சர் ஆன பிறகு மத்திய அரசின் எந்த வித அனுமதியும் இல்லாமல் புதிய வழிதடங்களில் நான்கு வழி சாலைகளை கொண்டு வந்தார். இதன் மூலம் குமரி மாவட்டத்தின் முக்கியமான நீர்வழித்தடங்கள் மூடப்பட்டு சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. வாறுதட்டு, நட்டாலம், அதங்கோடு, ஆலத்துறை, வெள்ளங்கெட்டி, நீராம்பல் குளம், புங்கறை, கண்ணாட்டுவிளை, சுனைப்பாறை, புத்தேரி ஆகியப்பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன.

நீர்வழித்தளங்க்ளை அழித்து விட்டு எந்த திட்டத்தையும் நிறைவேற்ற உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்திருந்த நிலையிலும் உச்சநீதி மன்ற தீர்ப்புகளை சிறிதும் மதிக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து வாங்கிய கமிஷன் பணத்திற்காக தொடர்ந்து நீர் ஆதாரங்களை அழித்து வருகிறார்.

மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள மலை வளங்களை எல் அண்ட் டி கம்பெனி உடைத்து விளிஞ்ஞத்தில் உள்ள பன்னாட்டு சரக்குப்பெட்டக மாற்றுமுனைய கட்டுமான பணிக்கு கொண்டு செல்ல அவர்களிடம் இருந்து கமிஷன் வாங்கி கொண்டு பொன்னார் அனுமதியளித்திருக்கிறார். இதனால் மலை குன்றுகள் குமரி மாவட்டத்தில் மாயமாகி உள்ளது.
தேவையில்லாத மேம்பாலங்கள்

மேலும் குமரி மாவட்ட மக்கள் கேட்காமலேயே பார்வதிபுரம், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் தேவையில்லாத மேம்பாலங்களை கொண்டு வந்தார். கொண்டு வந்த மேம்பாலங்கள் சிறிது நாட்களிலேயே பழுதானது வேறு விஷயம். இந்த மேம்பால கட்டுமான பணிகளில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்ததாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் சி.பி.ஐ.க்கு புகார் அனுப்பியுள்ளார்.

மறக்க முடியாத ஓகி
ஓகி புயலின் போது சின்னமுட்டம் முதல் நீரோடி காலனி வரை சுமார் 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் பெரும் உயிர் இழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் சந்தித்தது. மீன்கள் கொத்தி குரூரமான தோற்றங்களில் கரை ஒதுங்கிய குமரி மீனவர்களுக்காக உலகமே கண்ணீர் வடித்து கொண்டிருந்த கணத்தில் மீனவர்களின் வலிகளை ஆர்.எஸ்.எஸ் கும்பல் மிகவும் கொச்சையாக விமர்சித்து வந்தது. அவர்களுடன் இணைந்து பொன்னாரும் மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார். சொந்த ஊர் மக்களைபார்க்க பொன்னார் கடைசி வரை வரவில்லை. மீனவர்கள் நிவாரணம் கேட்டு போராடியதை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக குமரி விவசாயிகளை ஒருங்கிணைத்து மீனவர்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டி விட்டார். மேலும் பாஜக ஓகியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு நடந்த பந்தில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஏராளமான பேருந்துகளை அடித்து நொறுக்கியது. இதற்கெல்லாம் மவுன அனுமதியளித்து

ஆசீர்வதித்தார் பொன்னார்.
என்ன செய்தார்?
குமரி மாவட்டத்திற்கு பொன்னார் ஒன்றும் செய்யாவிட்டாலும் பிரச்சினை இல்லை. இருப்பதையாவது பாதுகாத்தால் போதும் என்பதுதான் குமரி மக்களின் பதிலாக உள்ளது. அனைத்து வளங்களும் கொளித்த குமரியை சுரண்டியது போதும் பொன்னாரே எங்களை சுத்தமான தண்ணீரும் உணவும் உண்ண அனுமதியுங்கள். எங்கள் நிலத்தில் எங்களை விவசாயம் செய்ய அனுமதியுங்கள். எங்கள் இருப்பிடத்தில் வாழ அனுமதியுங்கள் என்பதுதான் குமரி மக்கள் இப்போது பொன்னாருக்கு வைக்கும் கோரிக்கை.

– நாஞ்சிலான்

Comments are closed.