போபால் சிறையில் முஸ்லிம் விசாரணைக் கைதிகள் சித்திரவதை: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட NHRC

0

போபால் சிறையில் அடைக்கப்பட்ட சுமார் 21 முஸ்லிம் கைதிகளின் குடும்பம் அவர்கள் அங்கு சித்திரவதை செய்யப்படுவதாகவும் அவர்களின் நிலை சிறையில் மிக மோசமாக உள்ளதாகவும் தேசிய மனித உரிமை கழகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து இது தொடர்பாக உயர்மட்ட குழு ஒன்று அங்கு நேரில் சென்று விசாரிக்க தேசிய மனித உரிமை கழகம் உத்தரவிட்டுள்ளது.

போபால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளின் உறவினர்களில் நான்கு பெண்கள் உட்பட, ஒன்பது பேர் தேசிய மனித உரிமை கழகத்தின் தலைமையகத்திற்குச் சென்று நீதிபதி D.முருகேசன் முன்னிலையில் நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளனர். அவர்களுடன் சமூக ஆர்வலர்களான கவிதா ஸ்ரீவஸ்தவா மற்றும் மாதுரி கிரிஷ்ணசாமி ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கெடுத்தனர்.

பெரும்பாலும் தங்களின் முப்பது வயதுகளில் உள்ள சிறைவாசிகள் கடந்த மூன்றரை வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2016 போபால் என்கெளவுண்டருக்குப் பிறகு சிறையில் சித்தரவதை செய்யபப்டுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

விசாரணை கைதிகளாக நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்கள் உடல்ரீதியிலும் மன ரீதியிலும், துன்புறுத்தப்படுவதாகவும் அவர்களுக்கு மருத்துவம் உட்பட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்றும் அவர்கள் தனிமைச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டும் அவர்களின் குடும்பத்தினரை ஐந்து நிமிடங்கள் சந்திக்கக் கூட அனுமதி மறுக்கப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக போபால் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருக்கும் முஹம்மத் சுபைர் என்பவரது மனைவி நஸ்மா பீ, “எனது கணவர் மத்திய சிறையில் கடந்த மூன்றரை வருடங்களாக அடைக்கப்பட்டுள்ளார். போபால் என்கெளவுண்டர் சம்பவத்திற்கு பிறகு அவர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார். அவர் தொழுகை செய்யவோ அல்லது குரான் ஓதவோ முறையாக உறங்கவோ அனுமதிக்கப்படவில்லை.” என்று கூறியுள்ளார்.

இன்னும் “அவருக்கு உடைகள் வழங்கப்படவில்லை. ஒரே ஒரு 20 லிட்டர் தண்ணீர் பாட்டில் மட்டும் வழங்கப்பட்டு அதிலேயே அவர் குளிக்க மற்றும் குடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எங்களை சந்திக்க அவருக்கு வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கும் அவருடன் நாங்கள் நிம்மதியாக பேச இயலாதவாறு எங்களை சுற்றி தீவிரவாத தடுப்புப் படையை சேர்ந்தவர்கள் நின்று கொண்டிருப்பார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த NHRC  தனது DIG இடம் ஒரு தனிப்படை உருவாக்குமாறு கூறியுள்ளது. இது குறித்து தனது முதல் உத்தரவில், “இவ்விஷயம் குறித்து முழுமையாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முதலில் இது குறித்த உண்மை நிலவரங்களை அறிய வேண்டும். SSP தலைமையிலான குழு ஒன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மிக விரைவில் உண்மை நிலவரத்தின் அறிக்கையை சமர்பிக்க DIG யிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.” என்று NHRC தனது முதல் உத்தரவு 1126/12/8/2017 இல் தெரிவித்துள்ளது.

இந்த சிறைவாசிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து மாநில மனித உரிமை கழகத்திடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று சிறைவாசிகளின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.