போலியான சான்றிதழ்கள் மூலம் ஹலால் அல்லாத உணவை விற்கும் KFC

0

போபாலை மையமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையாளர் அனம் இப்ராஹீம் நடத்திய விசாரணையில் KFC நிறுவனம் ஹலால் இறைச்சி என்கிற பெயரில் போலியான சான்றிதழ்களை வைத்து தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறது என்று தான் கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளார்.

இப்ராஹீம் போபாலில் உள்ள DB மாலில் உள்ள KFC க்கு செல்கையில் அங்குள்ள மேலாளரிடம் பரிமாறப்படும் இறைச்சி ஹலாலானதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கேள்விக்கு பதிலாக மும்பையில் உள்ள முஃப்தி அன்வர் கான் என்பவரால் இறைச்சி ஹலாலானது என்று KFC க்கு இறைச்சி வழங்கும் வென்கீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழ் ஒன்றினை காட்டியுள்ளனர்.

அந்த சான்றிதழில் KFC இன் பெயர் இல்லாதது கண்டு இது குறித்து மேலும் விசாரிக்க துவங்கியுள்ளார் இப்ராஹீம். சம்பந்தப்பட்ட வென்கீஸ் நிறுவனத்தினரிடம் சென்று விசாரிக்கையில் KFC உடனான தங்களது ஒப்பந்தம் மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே முடிந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பின்னர் அந்த ஹலால் சான்றிதழ் வழங்கிய முஃப்தி அன்வர் கானை தொடர்பு கொண்டு விசாரிக்கையில், அவர் சென்னையின் வென்கீஸ் நிறுவனத்திற்கு அந்த சான்றிதழ் வழங்கியதாக கூறியுள்ளார்.

அப்படியென்றால் தற்போது KFC நிறுவனத்திற்கு கோழி இறைச்சி வழங்குபவர்கள் யார் என்று இப்ராஹீம் விசாரணையில் இறங்கியுள்ளார். அதில் மும்பையில் உள்ள கோத்ரேஜ் நிறுவனம் இவர்களுக்கு இறைச்சிகளை வழங்குவது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இம்மாதம் 6ஆம் தேதி எம்.பி.நகர் காவல்நிலையத்தில் இப்ராஹீம் மற்றும் இன்னும் 8 பேர்கள் சேர்ந்து KFC நிறுவனத்திற்கு எதிராக புகாரளித்துள்ளனர். மேலும் KFC நிறுவனத்தின் இந்த மோசடிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் இப்ராஹீம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.