போலி என்கவுண்டர் கொலை:சொஹ்ராபுதீன் ஷேக்கின் சகோதரர் அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை வாபஸ்பெற்றார்!

0

அஹ்மதாபாத்:போலி என்கவுண்டர் மூலம் அநியாயமாக சொஹ்ராபுதீன் ஷேக் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து அமித் ஷாவை விடுவித்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை சொஹ்ரபுதீனின் சகோதரர் ருபாபுதீன் ஷேக் வாபஸ் பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சொஹ்ராபுதீன் ஷேக், அவரது மனைவி கவுசர்பீ, சாட்சி துளசிராம் பிரஜாபதி ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து 2014 டிசம்பர் 30-ஆம் தேதி அமித் ஷாவை விடுவிப்பதாக சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து சொஹ்ராபுதீன் ஷேக்கின் சகோதரர் ருபாபுதீன் ஷேக் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் இவ்வழக்கை வாபஸ் பெறுவதாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அனுஜா பிரபு தேசாயிடம் ருபாபுதீன் மனு அளித்தார்.தனது வழக்கறிஞருடன் தகவல் தொடர்பு இடைவெளி இருப்பதால் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்திருந்தார்.ஆனால், நீதிபதி அனுஜா பிரபு தேசாய், ‘இவ்வழக்கில் உங்களுக்கு ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பி, முடிவை மறுபரிசீலனை செய்ய இரண்டு வார காலம் அவகாசம் அளித்தார்.ஆனால், தற்போது அமித் ஷாவுக்கு எதிரான மனுவை வாபஸ் பெறுவதாக ருபாபுதீன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவ்வழக்கை வாபஸ் பெறுவது குறித்த காரணம் தொடர்பாக ருபாபுதீன் ஷேக் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில்,’நான் எனது வாழ்க்கையில் பல அச்சுறுத்தல்களை பெற்றுள்ளேன்.ஆனால், இது கடுமையானது.நான் உங்களிடம் எதனையும் கூடுதலாக கூற இயலாது.நான் என்னை யார்? எப்படி? மிரட்டினார்கள் என்பதை நீதிமன்றத்தில் கூறுவேன்.அவர்கள் இந்த மனிதரை(சொஹ்ராபுதீன் ஷேக் கொலையின் சாட்சியான துளசி ராம் பிரஜாபதி) இரத்தம் உறைய வைக்கும் கொலையை செய்துள்ளனர்.இது எனக்கான எச்சரிக்கை.நான் கூடுதலாக எதனையும் உங்களிடம் கூற இயலாது” என்று தெரிவித்திருந்தார்.

ருபாபுதீன் ஷேக் கேட்ச் நியூஸிற்கு அளித்த பேட்டியில்,’இந்த சட்டப்போரை தொடர என்னிடம் பணமோ, ஆற்றலோ இல்லை.குறிப்பாக காங்கிரஸ் உள்பட யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.