போலி என்கெளவுண்டரில் கொல்லப்பட்ட சாதித் ஜாமால் தந்தை 50 லட்சம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு

0

2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி குஜராத்தின் அஹமதாபாதில், அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை கொலை செய்ய வந்த லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதி என்று குற்றம்சாட்டி சாதிக் ஜமால் போலி என்கெளவுண்டர் மூலம் கொலை செய்யப்பட்டார். தற்போது சாதிக் ஜமாலின் தந்தை அவரது கொலைக்கு மாநில அரசு 50  லட்ச ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக நீதிபதி ஜே.பி.பர்திவாளா மாநில அரசிற்கு கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகவும் அங்கு இது போலி  என்கெளவுண்டரா இல்லையா என்று தீர்மானிக்கப்படவில்லை என்றும் அதனால் தற்போது நஷ்டஈடு பற்றிய கேள்விக்கு தற்போது இடமில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேலும் பல விசாரணைகளை சி.பி.ஐ நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது கொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நியாம் கேட்டும் அவரது இழப்பிற்கு 50 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டும் ஜமால் மெஹ்தர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து அவர் கூறுகையில், “காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே தனது மகன் கொலை செய்யப்பட்டது இந்திய அரசியல் சாசனப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்றும் இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் 2009 ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் குஜராத் மாநில அரசு, போலி என்கெளவுண்டரில் கொலை செய்யப்பட்ட சொராபுதீன் ஷேக் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டதையும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக 2012 இல் சி.பி.ஐ தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், சாதிக் ஜமாலின் என்கெளவுண்டர் போலியானது என்று சி.பி.ஐ கூறியிருந்தது. மேலும் சாதிக் ஜமால் மும்பை காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து அகமதாபாத்திற்கு காவல்துறை அதிகாரி தருண் பரோட் மற்றும் இன்னும் ஏழு அதிகாரிகளால் கொண்டுவரப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சாதிக் ஜமால் நகர குற்றவியல் காவல்துறையின் சட்ட விரோத கட்டுப்பாட்டில் இருக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்றும் சி.பி.ஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.