போலி தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு முதன்முறையாக மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் காவல்துறை இழப்பீடு

0

போலி தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு முதன்முறையாக மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் காவல்துறை இழப்பீடு.

வரலாற்றில் முதன் முறையாக போலியான தீவிரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 14 ஆண்டுகள் சிறையில் கழித்த ஒருவருக்கு மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் காவல்துறை இழப்பீடு வழங்கியுள்ளது. டெல்லியை சேர்ந்த முகமது ஆமீர் கான் 1997ம் ஆண்டு டெல்லி சிறப்பு காவல்துறையால் போலியான தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையலடைக்கப்பட்டார். இவரை காவல்துறை கைது செய்த போது இவருக்கு 18 வயது. இவர் சிறையில் இருந்த போதே இவர் மீது மேலும் பதினெட்டு பயங்கரவாத வழக்குகளை காவல்துறை சுமத்தியது. இறுதியாக 14 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு 2012ம் ஆண்டு அவர் அனைத்து வழக்குகளிலிருந்தும் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். இவர் சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவரும் வேலையில் இவரது தந்தையை இழந்திருந்தார்.

இந்நிலையில் பத்திரிகையில் வெளியான ஆமிரின் செய்தியை அறிந்த தேசிய மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்துக்கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி 2014ம் ஆண்டு விளக்கம் கேட்டது.

இந்த நோட்டீசிற்கு 2014 ஏப்ரல் – மே மாதங்களில் விளக்கமளித்த உள்துறை அமைச்சகம் மற்றும் டில்லி காவல்துறை, முஹம்மத் ஆமிர் கான் டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1996 டிசம்பர் முதல் 1997 டிசம்பர் வரை நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக கைது செய்யபட்டார் என்றும் இவருடன் மேலும் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த குண்டு வெடிப்புகள் நின்றுவிட்டது என்றும் தெரிவித்திருந்தது.

இந்த பதில்களில் திருப்தியடையாத தேசிய மனித உரிமை ஆணையம் ஆமிர் குற்றமற்றவர் என்று வெளியான தீர்ப்புகள் குறித்து  விளக்கம் கேட்டது. இந்நிலையில், 2015 டிசம்பரில், தவறாக கைது செய்யப்பட்டு பதினான்கு வருடம் சிறையில் கழித்து தனது இளமையை தொலைத்த  ஆமீருக்கு ஏன் இழப்பீடு வழங்கக்கூடாது என்று டில்லி அரசிடம் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வினவியது.

தங்களது இந்த நோட்டீசிற்கு ஆறு வாரங்களில் விளக்கமளிக்கும்படி தேசிய மனித உரிமை ஆணையம் கூறியிருந்தது. ஆனால் ஆறு மாதங்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் 2016 ஜூன் மாதம் ஆமிருக்கு எதிராக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் இந்த தருணத்தில் இழப்பீடு வழங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று டில்லி அரசு விளக்கமளித்தது.  இதிலும் தேசிய மனித உரிமை ஆணையம் திருப்தியடையவில்லை.

2017 ஜனவரியில் ஆமீருக்கு எதிராக நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் குறித்து தங்களுக்கு கவலையில்லை என்றும் அவர் 18  வழக்குகளில் நிரபராதி என்று விடுதலையாகியுள்ளார் என்றும் இந்த தவறான வழக்குகளுக்காக 14  வருடங்களை சிறையில் கழித்துள்ளார் என்றும் அதனால் 6 வாரங்களில் ரூ.5லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடாக அவருக்கு வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. மேலும் ஆமிருக்கு இழப்பீடு வழங்கியதற்கான ஆதாரத்தை ஆறு வாரங்களில் சமர்பிக்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது. எனினும் ஒரு வருடகாலம் இழப்பீடு வழங்காமல் டெல்லி காவல்துறை இழுத்தடித்து வந்த நிலையில், 2018 ஜனவரில் காவல்துறை தலைவர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு அவர்கள் மனித உரிமை ஆணையம் முன் நேரில் ஆஜராக் சம்மன் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மாதம் (2018, ஏப்ரல்) ஆமீருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி, இரண்டு காவலர்கள் ஆமிரின் இல்லத்திற்கு சென்று காவல்துறை துணை ஆணையர் ஆமிரை சந்திக்க அழைத்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆமிர் தெரிவிக்கையில், “நான் அந்த காவலர்களுடன் காவல்துறை துணை ஆணையரை சந்திக்கச் சென்றேன். அவர், “உனக்கு நிகழ்ந்தது மிகவும் வருத்தமானது. அந்த வருடங்களை திருப்பதித் தருவது என்பது இயலாத காரியம். ஆனால் இனி உள்ளவற்றை சரி செய்ய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுப்படி நாங்கள் ஐந்து லட்ச ரூபாயை உனக்கு வழங்குகிறோம். இந்த உத்தரவு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டு அது டில்லி காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த உத்தரவை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.” என்று கூறியதாக ஆமிர் தெரிவித்துள்ளார். துணை ஆணையரின் இந்த கூற்றை எழுத்துப் பூர்வமாக ஆமிர் கேட்க அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக ஆமிர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முனேற்றம் ஒரு நல்ல நடவடிக்கை என்றும் ஆனால் இதன் மூலம் நான் முழுமையாக திருப்தியடைந்துவிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐந்து லட்சங்கள் அல்ல, ஐம்பது லட்சங்களாலும் 14 வருட சிறை வாழ்க்கையினால் தான் இழந்த வாழ்வை யாராலும் திருப்பித் தர இயலாது. ஆனால் இது தன்னுடைய காயங்களுக்கு மருந்தாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுவும் மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டினால் தனக்கு கிடைத்தது என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இது போன்று தவறாக சிறையில் அடைக்கப்பட்டவர்களின் நலனுக்காக ஏதாவது ஒரு வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் விண்ணப்பம் வைத்துள்ளார்.

தீவிரவாதிகள் கூட அவர்களின் வழிமுறையை விட்டு பொது வாழ்க்கைக்குத் திரும்ப அரசு திட்டகளை வைத்துள்ளது. அது சிறந்த திட்டம் தான் என்றாலும், தீவிரவாதிகளுக்கே அத்தகைய திட்டங்கள் இருக்கின்ற போது போலியான/தவறான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அப்பாவிகளுக்கு எந்த ஒரு திட்டமும் ஏன் இல்லை என்பது தான் தனது கேள்வி என்று ஆமிர் தெரிவித்துள்ளார்.

தன்னைப்போல இந்த நாட்டில் பலர் உள்ளனர் என்றும் டில்லி அரசின் இந்த முடிவு தேசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் ஆமிர் தெரிவித்துள்ளார். இருந்தும் இது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிறந்த மறுவாழ்வு என்பது ஒரு சுய மதிப்புள்ள வேலை தான் என்றும் அது அவர்களது வாழ்க்கையை புதியதாக தொடங்க வழிவகுக்கும் என்றும் ஆமிர் தெரிவித்துள்ளார். இன்னும் தனக்கு கிடைத்த இந்த இழப்பீட்டில் ஒரு பகுதியை தன்னைப்போன்று பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் சட்ட உதவிக்கு வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் சங்க்பரிவார் அமைப்புகளால் நிகழ்த்தப்பட்ட ஐதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் போலியாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆந்திர மாநில அரசால் இழப்பீடு வழங்கப்பட்டது. தற்போது டெல்லி காவல்துறையின் போலியான வழக்கால் 14 ஆண்டுகால வாழ்வை இழந்த ஆமீருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.