“போஸ்னியாவின் கசாப்புகாரன்” சர்வதேச நீதிமன்றத்தால் இனப்படுகொலை குற்றவாளி என்று அறிவிப்பு

0

போஸ்னிய செர்பிய படை தளபதி ராட்கோ ம்லாடிக் ஐக்கிய நாடுகளின் நீதிமன்றத்தால் இனப்படுகொலை குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பால்கன் போரின் போது லட்சகணக்கான அப்பாவி முஸ்லிம்களை இவர் தலைமையிலான படை கொன்று குவித்தது.

இவர் மீதான இந்த விசாரணையை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், இனப்படுகொலை மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர் குற்றம் உட்பட 1992 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் இவர் புரிந்ததாக கூறப்பட்ட பத்து குற்றங்களை உறுதி செய்தனர். நகராட்சிகளில் இவர் புரிந்ததாக கூறப்பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டு ஒன்றில் இருந்து மட்டும் இவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த காலகட்டத்தில் யுகோஸ்லேவியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் ம்லாடிக்கின் போஸ்னிய செர்பிய படைகளால் கொலை செய்யப்பட்டும், 2.2. மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர். இவர்களின் இந்த செயல் மனித உயிர்களுக்கோ அதன் கண்ணியத்திற்கோ எவ்வித மதிப்பும் கொடுக்கவில்லை என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்துள்ளார்.

போஸ்னியாவின் கசாப்புக்காரன் என்று அழைக்கப்படும் இவர் இந்த விசாரணையின் தீர்ப்பு வழங்கப்படும் போது நீதிமன்றத்தில் இல்லை. விசாரணை தொடங்கும் போது கட்டை விரலை தூக்கிக் காட்டிக்கொண்டு நீதிமன்றத்திற்கு உள்ளே வந்த ம்லாடிக் விசாரணையின் போது வழக்கை விசாரித்த நீதிபதிகளை பொய்யர்கள் என்று கத்தி கூச்சலிட்ட காரணத்தினால் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது வெளியான இந்த நீதிமன்ற முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக இவரது மகன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.