போஸ்னியா படுகொலைகள்: மௌனம் சாதிக்கும் சர்வதேச சமூகம்

0

 – செய்யது அலீ

கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியாவின் ஸ்ரெப்ரெனிகாவில் கடந்த ஜூலை 11 அன்று சனிக்கிழமை நடைபெற்ற ஒரு நினைவு அஞ்சல் நிகழ்ச்சி உலக சமூகத்தின் மௌனம் குறித்த கேள்வியை எழுப்பியது. 199295 காலக்கட்டத்தில் போஸ்னியாவில் உலகம் கண்ட கொடிய பயங்கரவாதத்தின் இறுதி நாட்களில் ஐக்கிய நாடுகள் அவையால் ‘பாதுகாக்கப்பட்ட பகுதியாக’ அறிவிக்கப்பட்ட ஸ்ரெப்னிகா என்ற பகுதியில் செர்பிய இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து குழந்தைகள் உள்பட எட்டாயிரம் போஸ்னிய முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்தனர்.

 அப்பகுதியில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டுக் கல்லறைகள் இந்த பயங்கரவாதத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. அங்கே கண்டெடுக்கப்பட்ட இறந்த உடல்களின் எச்சங்கள் மரபணு சோதனையின் மூலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகளை நிறைவேற்றும் நடைமுறை பல வருடங்களாக தொடர்கிறது.

1995ம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையின் 20வது ஆண்டு நினைவு தினம் கடந்த ஜூலை 11 அன்று கடைபிடிக்கப்பட்டது. துயரமான நிகழ்வை நினைவு கூரவும், மரபணு சோதனையில் அடையாளம் காணப்பட்ட 136 பேர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகளை நிறைவேற்றவும் ஐம்பதாயிரம் பேர் ஸ்ரெப்ரெனிகாவில் ஒன்று கூடினர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் செர்பிய பிரதமர் அலெக்ஸாண்டர் வூசிக் கலந்து கொண்டது அங்கிருந்தவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. ‘கொல்லப்பட்ட ஒவ்வொரு செர்பியருக்கும் பதிலாக 100 போஸ்னிய முஸ்லிம்களை கொல்வோம்’ போன்ற வெறியை தூண்டும் அறிக்கைகள் மூலம் இனப்படுகொலை நடைபெற்ற நாட்களில் கொடிய சம்பவத்திற்கு எரியூட்டியவர்தாம் வூசிக். ஸ்ரெப்ரெனிகாவில் நடந்த பயங்கரவாதத்தை கண்டித்தும், தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டு வருவேன் என்றும் அறிக்கை வெளியிட்ட பிறகு கூட்டுப்படுகொலையின் நினைவு தினத்தில் பங்கேற்க வந்தார் வூசிக்.

ஆனால், வூசிக்கின் இரண்டு வரி அறிக்கையால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொடூரத்தை போஸ்னியா முஸ்லிம்கள் மன்னிக்கவோ, பொறுத்துக் கொள்ளவோ தயாரில்லை. அவர்கள் கற்கள், செருப்புகள் என கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து வீசி வூசிக்கை விரட்டியடித்தனர்.

 13,500 பேரை கொன்றொழித்த இனப்படுகொலையின் பாவக்கறையை ஒப்புக் கொள்வதால் தீர்ந்து விடுவதல்ல தங்களின் துயரம் என்பதே போஸ்னியா முஸ்லிம்களின் நிலைப்பாடு. கல்வீச்சிலிருந்து தப்பித்து பெல்கிரேடுக்கு திரும்பிய

வூசிக், போஸ்னியர்களை கொன்றொழித்து அகண்ட செர்பியாவிற்காக வாதிட்ட தனது கடந்த காலத்திலிருந்து மாறி செர்பியபோஸ்னியா நல்லிணக்கத்திற்கான தனது நல்லெண்ணத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்று அங்கலாய்த்தார்.

குழந்தைகளையும், உறவினர்களையும் அடையாளம் காண்பதற்காக அவர்களது உடல் எச்சங்களுடன் மரபணு பரிசோதனைக்காக பல வருடங்களாக சோதனைக் கூடங்களின் படிகளில் ஏறி இறங்கும் போஸ்னியா முஸ்லிம்களுக்கு, அரசியல் தலைவர்களின் கபட நாடகங்கள் தெரியாதா என்ன? போஸ்னியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட ஸ்ரெப்ரெனிகா உள்ளிட்ட கொடிய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.

 ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பிறகு ஐக்கிய நாடுகள் அவையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஸ்ரெப்ரெனிகாவும், சிபா பகுதிகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. டச்சு (நெதர்லாந்து) அமைதிப் படையினர் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் கண் முன்னாலேயே 1995 ஜூலை 11ம் தேதி கமாண்டர் ராட்கோ மிலாடிச்சின் தலைமையிலான செர்பிய படை ஸ்ரெப்ரெனிகாவில் அத்துமீறி நுழைந்தனர்.

மூன்று நாட்கள் கோரத்தாண்டவமாடிய செர்பியர்கள் ஆண்களையும், ஆண் குழந்தைகளையும் தேடிப்பிடித்து வரிசையாக நிறுத்தி சுட்டுக் கொலை செய்து கூட்டாக புதைத்தனர். நேட்டோவின் பூரண ஆதரவு கிடைத்தபோதிலும் இந்த கொடியவர்களை துரத்துவதற்கு கூட பல வாரங்கள் ஆனது. இதனிடையே கூட்டுக் கல்லறைகளை அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்தன.

எட்டாயிரம் பேரை இன, வெறியின் பெயரால் கொடூரமாக கூட்டுப்படுகொலை செய்த ஸ்ரெப்ரெனிகா துயர சம்பவத்தை இனப்படுகொலையாக அறிவித்து, இத்தகையதொரு துயர சம்பவம் இனி உலகில் எங்கும் நடந்துவிடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க இதுவரை சர்வதேச சமூகம் தயாராகவில்லை. சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயமும், சர்வதேச நீதிமன்றமும் இச்சம்பவத்தை இனப்படுகொலை என்றும் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த கொடிய குற்றம் என்றும் தீர்ப்பு எழுதின. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் இன்னமும் தீர்ப்பு எழுதப்படவில்லை.

பழைய கம்யூனிஸ்ட் யூகோஸ்லேவியாவின் ஒரு பகுதியான செர்பியர்களை பாதுகாக்க ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதே இதற்கு காரணம். ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் போஸ்னிய படுகொலையை இனப்படுகொலையாக கூறிவரும்போது அதற்கு எந்த மதிப்பும் அளிக்காமல் தனது வீட்டோ அதிகார திமிரில் ரஷ்யா வீம்புடன் செயல்படுகிறது.

 அதேவேளையில் ஸ்ரெப்ரெனிகாவில் இனப்படுகொலைகள் அரங்கேறுவதற்கு ஆறு வாரங்கள் முன்பாகவே அதுகுறித்து அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் தெரியும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர்கள் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சூழலில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சியில், இனப்படுகொலைக்கு ஊதுகுழலாக செயல்பட்ட அலெக்ஸாண்டர் வூசிக்கிடம் தங்களது எதிர்ப்பை பலியானவர்களின் உறவினர்கள் வெளிப்படுத்தினர். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கொலையாளிகளுக்கு தலைமை தாங்கியவர்கள், நல்லவர்களாக வேடம் பூண்டு நடமாடும்போது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டிய சர்வேதச சமூகம் அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கும்போது உதவியற்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்?

(ஆகஸ்ட் 2015 இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.