மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆதார் சொதப்பல்: ஒரே ஆதார் எண்ணில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு

0

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதில் முறைகேடுகளை தவிர்க்க ஆதார் பெரிதும் உதவும் என்று கூறி விவசாயிகளை ஆதாரில் இணைத்தது மகாராஷ்டிர அரசு. மேலும் இதனால் போலிக் கணக்குகள் மற்றும் ஒரே நபர் பலமுறை பயனடைவது போன்ற முறைகேடுகள் தடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அரசு அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒரே ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா கூட்டுரவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “போலியான விண்ணப்பங்களை கண்டறிய ஆதார் பெரிதும் உதவும் என்று நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனால் தற்போது இந்த பிரச்னையை எவ்வாறு சமாளிப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. தற்போது நாங்கள் தனித்தனியாக அனைத்தையும் சரிபார்க்க வேண்டும். இதற்கு எங்களுக்கு பல வாரங்கள் பிடிக்கும். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர்.“ என்று அவர் கூறியுள்ளார்.

இன்னும் இந்தத் திட்டத்தில் பல விவசாயிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளது என்றும் மேலும் பலரின் நிலங்களின் மதிப்பீடு அல்லது அவர்கள் வாங்கிய கடன் நிஜ அளவிற்கு மாறாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வங்கி பணியாளர் ஒருவர் கூறுகையில், “பல வழக்குகளில் கடன் வாங்கிய தொகையும் அதற்கான் வட்டியும் ஒத்துப்போகவில்லை. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து மாநில அரசு அதிகாரிகள் சோதனை செய்து கூறாதவரை கடன்களை ரத்து செய்ய முடியாது” என்று கூறியுள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடிக்கென மகாராஷ்டிரா மாநில அரசு ஒதுக்கியிருந்த 34,000 கோடி ரூபாயில் முதல் தவணையாக 4000  கோடி ரூபாயை கடந்த வாரம் கடன் தள்ளுபடிக்கு என்று வழங்கியது.

Comments are closed.