மகாராஷ்டிர பாட புத்தகங்களில் இருந்து முகாலயர்கள் குறித்த பாடங்கள் நீக்கம்

0

ஹல்டிகாட்டி யுத்தத்தில் ரானா பிரதாப் அக்பரை தோற்கடித்ததாக வரலாற்றுப் பாடங்களில் ராஜஸ்தான் பல்கலைகழகம் மாற்றம் செய்ததை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா பாட புத்தகங்களிலும் வரலாற்றுத் திரிபுகளை செய்துள்ளது பாஜக அரசு

மும்பை மிரர் பத்திரிக்கை அறிக்கையின்படி ஏழாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகங்களில் முகலாயர்கள் மற்றும் அவர்கள் கட்டிய சின்னங்கள் குறித்து அனைத்து தகவல்களும் மறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக சிவாஜியின் மராத்தா சாம்ராஜ்யத்தை குறித்த செய்திகள் புகுத்தப்பட்டுள்ளன.

கடந்த வருடம் வரை அக்பரை சகிப்புத் தன்மையுடைய அரசர் தேச நிர்வாகி என்று கூறியவர்கள் தற்போது திருத்தப்பட்டுள்ள பாடத் திட்டத்தின்படி அவர் இந்தியாவை ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டுவர நினைத்தவர் என்றும் அவரது இந்த முயற்சிக்கு ரானா பிரதாப் போன்ற மன்னர்களிடத்தில் இருந்து எதிர்ப்பை பெற்றார் என்றும் கூறுவர். கடந்த வருட பாடப்புத்தகத்தில் மக்கள் அரசனாக இருந்த சிவாஜியோ இந்த வருடத்தில் முன்மாதிரி ஆட்சியாளனாக மாற்றப்பட்டுள்ளார். சிவாஜியின் வரலாறு, அவரது குடும்பம் மற்றும் மராத்தா தளபதிகள் குறித்த பாடங்களும் இவ்வருட புத்தகங்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் ராசியா சுல்தானா, முஹம்மத் பின் துக்ளக் உட்பட முகலாயர்களுக்கு முந்தைய முஸ்லிம் மன்னர்கள் பலரை குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முதலில் ஆஃபகாணிய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நாணயமான ருபையா குறித்த தகவலும் புதிய பாடத்தில் இல்லை.

இப்படியிருக்க ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்திலோ 1975-1977 ஆண்டு வரையிலான அவசர நிலை குறித்தும் போபோர்ஸ் ஊழல் குறித்தும் பாடங்கள் இடம் பெற்றுள்ளது. டில்லியை ஆண்ட முதல் பெண் ஆட்சியாளர் ராசியா சுல்தானா ஆவார். இவரை குறித்த பாடப் பகுதிகள் நீக்கப்பட்டதோடு நாட்டில் பல நிர்வாக சீரமைப்பை கொண்டு வந்த ஷேர் ஷா சூரி குறித்த பாட பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன. ஷேர்ஷாவின் ஆட்சிக் காலம் வெறும் ஐந்து வருடங்கள் தான் நீடித்தது என்ற போதிலும் அவரது நிர்வாகத் திறமை பெரும் போற்றுதலுக்குரியது. இன்றைய IAS அதிகாரிகள் நியமனம் போல ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நிர்வாக அதிகாரி மற்றும் ஒரு நீதித்துறை அதிகாரியை அவரது ஆட்சியில் அவர் நியமித்தார். இவரது ஆட்சியில் தான் கிரான்ட் டிரன்க் சாலை அமைக்கப்பட்டது.

தற்போதைய இந்த பாட திருத்தங்கள் குறித்து வரலாறு பாட கமிட்டி உறுப்பினர் பாபுசாஹெப் ஷிண்டே குறிப்பிடுகையில், இந்த பாடத் திருத்தங்கள் நவீன கால நிகழ்வுகளை பாடத்திட்டங்களில் சேர்ப்பதற்காக செய்யப்பட்டது என்று கூறியுள்ளார். அதனால் முகலாயர்களுக்கு கொடுக்கப்பட்ட இடங்கள் குறைக்கப்பட்டு நவீன கால நிகழ்வுகள் பாடத்தில் சேர்க்கப்பட்டன என்று கூறியுள்ளார்.

இந்த பாடத்திட்ட திருத்தங்கள் தொடர்பான ஆலோசனை ஆர்எஸ்எஸ் முன்னிலைப்லைப்படுத்திய சிந்தனைவாதியான ம்ஹல்கி பிரபோதினி நடத்திய கூட்டம் ஒன்றில் நடைபெற்றது. கடந்த வருடம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே பங்குபெற்றிருந்தார்.

தற்போதைய வரலாறு பாடப்புத்தகத்தின் அட்டைப்படம் குறித்து தனது ஆட்சேபனையை தெரிவித்த ஆய்வாளர் கிசோர் தரக், இந்த புதிய பாடப் புத்தக அட்டையில் இந்திய வரைபடம் முழுவதும் காவிக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது அக்காலத்தில் இந்து சாம்ராஜ்யம் இருந்தது போன்ற தோற்றத்தினை மாணவர்களுக்கு ஏற்ப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறான கருத்து என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்திய வரலாற்று பாட கமிட்டி தலைவர் சதானந் மூர், தாங்கள் வரலாற்றை மகாராஷ்டிர கண்ணோட்டத்தில் இருந்து கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அது டில்லி சுல்தான்களை குறித்தாக இருந்தாலும் சரி முகலாய ஆட்சியாக இருந்தாலும் சரி அதில் மகாராஷ்டிராவிற்கே முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் மகாராஷ்டிராவை சேர்த்தவர்கள் என்பதால் இவ்வாறு யோசிப்பது இயற்கை தான் என்றும் அதில் என்ன தவறுள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2015 இல் அவுரங்கசீப் சாலை பெயர் மாற்றம் தொடங்கி தற்போதைய முகல்சாராய் ரயில் நிலைய பெயர் மாற்றம் வரை அனைத்திலும் பாஜக அரசு காவி மயமாக்கி வரும் நிலையில் பாட புத்தகத்திலும் தங்களது இந்த காவி மயமாக்கலை மும்முரமாக செயல்படுத்தி வருவது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

Comments are closed.