‘மக்கள் மீது மதத்தை திணிப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது’ – ராஷித் கன்னோஸி

0

துனீசியா அல் நஹ்தா கட்சியின் தலைவரும் சமகால இஸ்லாமிய சிந்தனையாளருமான ராஷித் கன்னோஸி அவர்களை இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரான சித்தார்த் வரதராஜன் சில தினங்களுக்கு முன் பேட்டி கண்டார். அப்பேட்டி ராஜ்ய சபா தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மத்திய கிழக்கில் ஜனநாயத்தின் எழுச்சி, இஸ்லாமிய இயக்கங்கள் சந்திக்கும் சவால்கள், பரபரப்பை ஏற்படுத்தும் நவீன இயக்கங்கள் என பல விஷயங்கள் இந்தப் பேட்டியில் அலசப்பட்டன.

ராஷித் கன்னோஸியின் பேட்டியை சித்தார்த் வரதராஜனின் அனுமதியுடன் விடியல் வாசகர்களுக்கு இங்கு வழங்குகிறோம்.

சித்தார்த் வரதராஜன்: இந்நிகழ்ச்சிக்கான எனது இன்றைய விருந்தினர் துனீசியாவின் அந் நஹ்தா கட்சியின் தலைவர் ஷேக் ராஷித் கன்னோஸி. அந் நஹ்தா கட்சி துனீசியாவில் மட்டுமல்லாமல், வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்காசியாவில் முக்கிய அரசியல் கட்சியாக பார்க்கப்படுகிறது. துனீசியாவில் தற்போதைய ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

அரபு வசந்தத்தின் அனைத்து நிலைகளையும் கண்ட ஒரு தேசம் துனீசியா. வீதிகளில் இறங்கி மக்கள் நடத்திய போராட்டங்கள், மாற்றப்பட்ட அரசியல் சாசனம், பல கட்சிகள் பங்கு பெற்ற தேர்தல்  என அமைதியான அரசியல், சமூக மாற்றங்களை கண்டது.

ஷேக் கன்னோஸி, இந்திய மக்களுக்கு துனீசியாவின் அரசியல் மற்றும் சமூகம் குறித்து சிறிது கூறுங்கள். அரபு வசந்தம் துனீசியாவில் எப்படி முழுமை அடைந்தது? அதன் அண்டை நாடுகளில் இல்லாத ஜனநாயகம், நிலையான தன்மை, பேச்சுரிமை, மக்கள் உரிமைகள் ஆகியவை அங்கே உள்ளன. துனீசியா இதை எப்படி சாத்தியமாக்கியது?

ராஷித் கன்னோஸி: வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய தேசம் துனீசியா. அது அரபு, முஸ்லிம் உலகின் ஒரு பகுதி. துனீசியா சர்வாதிகாரிகளால் ஆட்சி செய்யப்பட்டது. அதன் கடைசி சர்வாதிகாரி பென் அலீ. ஒரு கட்சி ஆட்சி முறை நடத்தி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கினார். பொதுவாக, அவர் 95 சதவிகிதம், 99 சதவிகிதம் வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார். ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

சித்தார்த் வரதராஜன்: நீங்களும் சிறையில் அடைக்கப்பட்டீர்களே?

ராஷித் கன்னோஸி: ஆம். நான் மூன்று முறை கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டேன். துனீசியாவின் மாற்றத்திற்கான வழிகள் அடைக்கப்பட்டன. எனவே, மக்கள் போராட்டங்களை நடத்தி இந்த சர்வாதிகாரியை நீக்கி உண்மையான ஜனநாயகத்தை நிலை நாட்டினார்கள். உண்மையான தேர்தல்களும் நடத்தப்பட்டன.

புதிய துனீசியா உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஒரு இஸ்லாமிய கட்சி என்ற அடிப்படையில் இதற்கு நாங்கள் ஒத்துழைக்கிறோம். இஸ்லாமும் ஜனநாயகமும் ஒத்துப்போகக் கூடியதே. மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இஸ்லாமிய மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஆகிய இரண்டும் அரபு நாடுகளில் முக்கியமானவை. இவை இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும். ஜனநாயகத்திற்கு மாறும் ஒரு நாட்டில் மக்கள் எதிர் எதிர் திசையில் நிற்பது நல்லதல்ல.

எகிப்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம். அங்கு இஸ்லாமியவாதிகளும் மற்றவர்களும், இஸ்லாமியவாதிகளும் இராணுவமும் எதிர் எதிர் திசையில் நின்றார்கள். துனீசிய இராணுவம் அரசியல் இராணுவமாக இல்லாதது எங்களுக்கு நல்லதாக அமைந்தது. இங்கு இராணுவம் அரசியலில் தலையிடுவது இல்லை. துனீசியாவில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் நாங்கள் வெற்றி கண்டோம். எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் என்ன நடந்ததோ அவை இங்கு நடக்காமல் தடுத்தோம். அரபுலகில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறோம்.

சித்தார்த் வரதராஜன்: மக்கள் எதிர் எதிர் திசையில் நின்றதால் எகிப்து புரட்சி பாதிக்கப்பட்டது. லிபியாவிலும் இதே நிலை ஏற்பட்டது. மக்களிடம் ஒற்றுமை இல்லை. வெளிப்புற சக்திகளின் தலையீட்டை இதற்கு காரணமாக கூறலாமா?

ராஷித் கன்னோஸி: இந்த நாடுகளின் உள்நாட்டு சக்திகள் ஒன்றிணைவதில் வெற்றி பெறவில்லை. அவர்களிடையே விட்டுக் கொடுப்புகள் இல்லை. வெளிப்புற சக்திகளின் தலையீட்டிற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. லிபியாவில் பெட்ரோலிய வளம் உள்ளது. துனீசியாவில் எண்ணெய் இல்லாதது எங்களின் அதிர்ஷ்டம்தான். இங்கு ஆலிவ் எண்ணெய் மட்டும்தான் உள்ளது.

சித்தார்த் வரதராஜன்: முதல் தேர்தலில் வெற்றி பெற்ற பெரிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் உங்களை நாட்டின் தலைவர் பதவிக்கு நீங்கள் முன்நிறுத்தவில்லை. அல் நஹ்தா கட்சியை கொண்டு மட்டும் அல்லது இஸ்லாமிய கட்சிகளை மட்டும் இணைத்து ஆட்சியை அமைக்கவில்லை. இவற்றை குறிப்பிடத்தக்க விஷயங்களாக நான் காண்கிறேன். தற்போது முந்தைய ஆட்சியின் தொடர்புடையவர்கள் அங்கத்தினர்களாக இருக்கும் நிதா டூன்ஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் பங்கெடுக்கிறீர்கள். இவற்றிற்கு காரணம் என்ன?

(ஜனநாயகம் தழைத்தப்பிறகு துனீசியாவில் நடைபெற்ற முதல் தேர்தலில் அந் நஹ்தா கட்சி மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இருந்தபோதும் மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்தது. சென்ற வருடம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும், நிதா டூன்ஸ் கட்சியுடன் கூட்டணி அரசில் பங்கு பெற்றுள்ளது)

ராஷித் கன்னோஸி: அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயக முறையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். மற்ற நாடுகளில் நடைபெற்ற சம்பவங்களில் இருந்து நாங்கள் பாடம் படித்தோம். அண்டை நாடுகளில் முந்தைய அரசாங்கத்தில் அங்கத்தினர்களாக இருந்தவர்களை முற்றிலுமாக புறக்கணித்தார்கள். தற்போது நிதா டூன்ஸ் கட்சியுடன் கூட்டணி அரசில் உள்ளோம். இக்கட்சி சில இடதுசாரிகள் மற்றும் முந்தைய அரசாங்கத்தை சேர்ந்த சிலரால் தொடங்கப்பட்டது. ஆனால், நாங்கள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே இவர்களுடன் பணியாற்றி வருகிறோம்.

துனீசிய மக்களின் 94 சதவிகிதத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் சாசனம் இது. முந்தைய அரசாங்கத்தில் தொடர்பில் உள்ளவர்களும் இதே அரசியல் சாசனத்தின் அடிப்படையிலதான் எங்களுடன் பணியாற்றுகின்றனரே அல்லாமல் பழைய சட்டங்களின் அடிப்படையில் அல்ல. பழைய முறை சிதிலமடைந்து முடிவுக்கு வந்துவிட்டது.

சித்தார்த் வரதராஜன்: 2013ல் இடதுசாரி தலைவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கான பழி அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டது. அந்த வழக்குகளின் நிலை என்ன? இதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ராஷித் கன்னோஸி: வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. தீவிரவாத இயக்கமான அன்ஸர் அல் ஷரீயா இதற்கு முன்னர் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை போன்று துனீசியாவும் தீவிரவாதிகளால் பாதிக்கப்படுகிறது. இவர்களை நாங்கள் தீவிரவாத குழுவாக அறிவித்துள்ளோம். இவர்கள் தங்களை மட்டுமே முஸ்லிம்கள் என்று நினைத்துக் கொண்டு எங்களை முஸ்லிம் அல்லாதவர்கள் என்று கூறி வருகின்றனர்.

சித்தார்த் வரதராஜன்: சமீபத்தில் துனீசியாவின் தேசிய அருங்காட்சியகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பு துனீசியாவிற்கு எந்தளவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது?

ராஷித் கன்னோஸி: துனீசியாவில் தீவிரவாதம் என்பது ஒரு சிறிய விஷயம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அருங்காட்சியகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எங்களின் கலாச்சாரத்தின் மீது நடத்தப்பட்ட  தாக்குதல் ஆகும். தீவிரவாத குழுக்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாம் கருணை மற்றும் நீதியின் மார்க்கம். அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்தான் முஹம்மது நபி (ஸல்). அப்பாவிகளை கொலை செய்வதும் நாகரீகங்களை அழிப்பதும் இஸ்லாம் இல்லை.

சித்தார்த் வரதராஜன்: நாட்டு சட்டங்களின் அடிப்படையாக ஷரீஅத் சட்டங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் நிராகரித்தீர்கள். இதற்காக சிறிது எதிர்ப்பும் கிளம்பியது. நீங்கள் இவ்வாறு கூறியதற்கு காரணம் என்ன?

ராஷித் கன்னோஸி: துனீசியா ஒரு அரபு முஸ்லிம் நாடு என்பதை அனைத்து மக்களும் ஏற்றுள்ளார்கள். ஆனால், ஷரீஅத் சட்டங்கள் மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்ட விஷயங்கள்தான் அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளன. மக்கள் ஏற்றுக்கொள்ளும் போது நாம் ஷரீஅத் சட்டங்களை கொண்டு வரலாம். எனவேதான் தற்போது அதை தவிர்த்துள்ளோம்.

சித்தார்த் வரதராஜன்: துனீசியாவில் ஸலஃபி குழுக்களின் வளர்ச்சியை கண்டு நீங்கள் கவலை கொள்கிறீர்களா? இது துனீசியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா?

ராஷித் கன்னோஸி: ஸலஃபிகள் இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளும் முறையை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இஸ்லாத்தை பல வழிகளில் விளங்கிக் கொள்ள முடியும். இஸ்லாமிய மார்க்கம் ஒரு திறந்த புத்தகம். எனவேதான் சன்னி, ஷாஃபி, ஹனஃபி என பல விளக்கங்களை காண்கிறோம். நமக்கு ஸலஃபிய கொள்கை ஒரு பிரச்சனை அல்ல. ஆனால், தீவிரவாதம்தான் நமக்கு பிரச்சனை. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கிடையாது. மார்க்கம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. மக்கள் மீது மதத்தை திணிப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது. நாட்டை பாதுகாப்பதும் மக்களுக்கு சேவை செய்வதும்தான் அரசாங்கத்தின் வேலை.

எங்களின் அரசியல் சாசனம் மக்களுக்கு மத சுதந்திரத்தை வழங்குகிறது. இத்தகைய சிறு குழுக்களுக்கு இஸ்லாத்தை குறித்த அறிவு இல்லை. இதுதான் பிரச்சனைக்கு காரணம். தாங்கள் கூறும் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் மட்டும்தான் சுவனம் செல்வார்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள். அது அல்லாத மற்றவர்களை கொலை செய்வதே சரியானது என்று நம்புகிறார்கள். இது அவர்களின் அறியாமையை காட்டுகிறது.

சித்தார்த் வரதராஜன்: எதுவுமே இல்லாத நிலையில் இருந்த ஐ.எஸ். குறுகிய காலத்திலேயே ஒரு சக்தி மிகுந்த இயக்கமாக மாறியுள்ளது. இதை எவ்வாறு விளங்குகிறீர்கள்?

ராஷித் கன்னோஸி: இவை எல்லாம் சர்வாதிகாரத்தின் பலன்கள். மத்திய கிழக்கு நீண்ட காலமாக சர்வாதிகாரிகளால் ஆட்சி செய்யப்பட்டது. அதுதான் இந்த நிலைக்கு காரணம். அதற்காக நான் வன்முறையை ஆதரிக்கவில்லை. சர்வாதிகாரத்தின் காரணமாகத்தான் மத்திய கிழக்கில் தீவிரவாதம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகம் மற்றும் நீதியை பரப்புரை செய்வதன் மூலமே தீவிரவாதத்தை நிறுத்த முடியும்.

சித்தார்த் வரதராஜன்: ஐ.எஸ். மீதான இராணுவ தாக்குதல்களை நீங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்கிறீர்கள்?

ராஷித் கன்னோஸி: ஈராக்கில் நுழைந்த அமெரிக்க இராணுவம் அந்நாட்டையும் அதன் இராணுவத்தையும் நிர்மூலமாக்கியது. உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்ட தவறியவர்கள் அந்நாட்டை குழப்பத்தில் தள்ளினார்கள். ஈராக்கின் கதவுகளை அல் காய்தா, ஐ.எஸ். போன்றவர்களுக்கு திறந்துவிட்டார்கள். சதாம் ஹூசைனின்

ஆட்சிக்காலத்தில் அல் காய்தா, ஐ.எஸ். போன்றவை இல்லை. இவையெல்லாம் அமெரிக்க இராணுவ தலையீடுகளின் பலன்களாக உள்ளன. இவை ஒருபோதும் பிரச்சனைக்கு தீர்வாகாது. ஜனநாயகம், நீதி, பொருளாதார வளர்ச்சி, இஸ்லாத்தை சரியான முறையில் விளங்கிக் கொள்வது ஆகியவையே பிரச்சனைகளை தீர்க்கும்.

சித்தார்த் வரதராஜன்: இந்திய மக்களுக்கு நீங்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன?

ராஷித் கன்னோஸி: துனீசியா ஒரு இளமையான ஜனநாயக நாடு. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. அரசியல், பொருளாதாரம், வளர்ச்சி, பன்முகத்தன்மை உள்ளிட்ட விஷயங்களை நாங்கள் இந்தியாவிடமிருந்து கற்றுக் கொள்கிறோம்.

தமிழில்: ரியாஸ்

(ஜூன் 2015 இதழில் வெளியான பேட்டி)

Comments are closed.