மக்கள் வாழ்வாதாரத்துக்கு மரண அடி தரும் நியூட்ரினோ பூதம்!

0

அறிவியல் வளர்ச்சி மனித சமுதாயத்திற்கு பல வகையில் பெரிதும் உதவியிருக்கிறது. பல விஞ்ஞானிகளின் அயரா உழைப்பால் ஒட்டுமொத்த சமூகமே இன்று பயன்பட்டு கொண்டிருக்கிறது. சில கண்டுபிடிப்புகள் ஆரம்பக் காலத்தில் நன்மையாக தெரிந்தாலும் பின்னர் அது மனித வாழ்விற்கே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியிருக்கின்றன.

உதாரணத்துக்கு, அணு பிளவை குறிப்பிடலாம். அதிலிருந்துதான் இன்றைக்கு எண்ணற்ற வளர்ச்சியை சமூகம் கண்டிருக்கிறது. ஆனால், அதே அணு மனித சமுதாயத்தை கொன்றொழிக்க பயன்படுகிறது என்பது வேதனையான செய்தி. எனவே வளர்ச்சியாகட்டும் கண்டுபிடிப்பாக இருக்கட்டும். இது மனித சமூகத்திற்கு இயற்கைக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் எந்த வகையிலும் இடையூறு இருக்காதபட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இன்றைக்கு கூடங்குளம் அணுஉலை, மீத்தேன் திட்டம், இப்பொழுது இந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் நியூட்ரினோ திட்டம் இவை அனைத்தும் மனித வாழ்க்கைக்கும் இயற்கை சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்த கூடியது.

இயற்கையை அழிக்கக்கூடிய நியூட்ரினோ திட்டத்தை செயல்ப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் இறுதி வாரத்தில் மோடி அரசு ரூபாய் 1500 கோடி நிதியை ஒதுக்கி வேலையை தொடங்கி விட்டார்கள். அது என்ன நியூட்ரினோ திட்டம் என்று மக்களுக்கு விளங்குவதற்குள் பாதி வேலையை முடித்து விடுவார்கள் போல அந்தளவிற்கு வேலை மும்மரமாக நடக்கிறது.

நியூட்ரினோ என்றால் என்ன?

சூரியனையும் பூமியின் மேற்பரப்பையும் அறிந்து கொள்ளும் திட்டம்தான் நியூட்ரினோ திட்டம். சூரியனிலிருந்து பலவிதமான கதிர்கள் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு, காஸ்மிக் கதிர்கள், புற ஊதா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் இன்னும் பல கதிர்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் நியூட்ரினோவும் இருக்கின்றன. நம் பிரபஞ்சம் உருவான போது நியூட்ரினோக்களும் தோன்றின. அடிப்படை துகளான அணுக்களை பிளக்கும் பொழுது அதில் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் இருக்கும். இதில், இன்னொரு அணுவும் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பெயர்தான் நியூட்ரினோ.இதுவும் அணுவே.

இந்த நியூட்ரினோவின் குணங்கள் எல்லா பொருட்களிலும் ஊடுருவும் தன்மை கொண்டது. சூரியன் முதல் சந்திரன், பூமி என எல்லா இடங்களிலும் சுற்றி திரிகிறது. இதனைப்பிடித்து ஆய்வு செய்தால் பூமி, சூரியன் தோற்றங்கள் அதன் வயது அதனை படைத்தவன் யார் என பிரபஞ்ச ரகசியங்களுக்கு விடை கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

நல்ல விஷயம்தானே, தாராளமாக ஆய்வு செய்யலாமே என்று நீங்கள் நினைக்கலாம். இதில்தான் சிக்கல் இருக்கிறது. மிகவும் எளிமையாக மற்ற அணுக்களுடன் சேரும் இந்த நியூட்ரினோ காஸ்மிக் கதிர்களுடன் சேர்ந்தே காணப்படுகிறது. இப்படிப்பட்ட காஸ்மிக் கதிர்களுடன் சேர்ந்து இருந்தால் நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்வது கடினம் என்பதால் பூமிக்கு கீழே சென்று மலையைக் குடைந்து காஸ்மிக் கதிர்களை தடுத்து நிறுத்தி நியூட்ரினோக்களை மட்டும் ஆய்வு செய்ய உள்ளார்கள்.

இப்படி காஸ்மிக் கதிர்கள் இல்லாமல் நியூட்ரினோவை ஆய்வு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் கிலோ மீட்டர் அளவுள்ள மலை தேவை. அதனால்தான், தேனி மாவட்டம் பொட்டி புரம் பகுதியிலுள்ள அம்மரப்பர் மலையை தேர்வு செய்திருக்கிறார்கள்.

நியூட்ரினோ ஆய்வுக்கூடம்

மலையின் உச்சியிலிருந்து 1,500 அடி ஆழத்தில் 132 மீட்டர் நீளத்திலும் 26 மீட்டர் அகலத்திலும் 20 மீட்டர் உயரத்திலும் இரண்டு குகை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற பொட்டிபுரத்தில் 66 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று, 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று ராட்ச டேங்கர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 54 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக 100 அடி சாலை போடும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.

இவ்வளவு துரிதமாக நடக்க காரணம் என்ன? ஏன்? இத்திட்டத்தை விரைந்து முடிக்க மத்திய அரசு துடிக்கிறது? இதில் மாநில அரசின் நிலைப்பாடு என்ன? மற்ற அரசியல் கட்சிகள் ஏன் மௌனம் காக்கின்றன என்பதைப்பற்றி நாம் பலரை நேரடியாக சந்தித்து கேட்டோம்.

இயற்கை எழில் கொஞ்சும் தேனி மேற்கு மலை தொடர் முழுவதும் திட்டத்தின் மூலம் சேதமடையும், அணைக்கட்டுகள் பாதிக்கப்படும், இயற்கை பல் உயிர்கள் அழிந்துவிடும். இம்மலைக்கு மிக அருகில் கேரளா இருக்கிறது. கேரளாவில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட அணைக்கட்டுகள் உள்ளன. இதனால், மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வேண்டி வரும் என பலரும் கண்டித்தார்கள். ஆனால், இக்கண்டிப்பு ஏனோ தமிழக அரசிற்குக் கேட்கவில்லை. தமிழகத்திலுள்ள மற்ற கட்சிகளுக்கும் கேட்கவில்லை.

நியூட்ரினோ திட்டம் தேனியில் தொடங்குவதற்கு முன்னர் அஸ்ஸாமில் தொடங்க இருந்தது. அங்கு எதிர்ப்பு கிளம்பவே அது கர்நாடகம் கோலாருக்கு மாற்றப்பட்டது. இங்கு மிகப்பெரிய போராட்டத்தால் இறுதியில் தமிழகத்தில் பல இடங்கள் பார்த்துவிட்டு, இறுதியாக தேனி பொட்டிபுரம் தேர்வு செய்யப்பட்டது.

அச்சத்தில் மக்கள்

2009ல் இத்திட்டத்திற்கான அறிவிப்பு தொடங்கிய உடனே அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், அன்றைய மாவட்ட ஆட்சியாளர் முத்து வீரன் பல அப்பாவி மக்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தது மட்டுமல்லாமல் யார் இனிமேல் போராட்டம் நடத்தினாலும் அவர்கள் மேல் குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை செய்தார். இதன் காரணமாக அப்பகுதியில் பலர் போராட பயப்படுகிறார்கள் என்கிறார் புதுக்கோட்டை பகுதியை சர்ந்த ஜக்கையன்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான பொதுமக்கள் எதிர்ப்பில் அரசு நிலை குலைந்தது. அதுபோன்ற பிரச்சனை நியூட்ரினோ விஷயத்தில் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறது. போராட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே கிள்ளி எரியும் முயற்சியில் பல வகையில் இறங்கியிருக்கிறது. இதில் சிலரிடம் பணத்தைக் கொண்டு சரி கட்டுவது சிலரிடம் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளிப்பது. இன்னும் அப்பாவி விவசாயிகளிடம் நிலத்தை அதிக விலைக்கு வாங்குவது என பலகட்டமாக முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் மசியாதா மக்களை குண்டர் சட்டம் மூலம் அடக்குவது என்கின்ற போக்கும் அதிகரிக்கின்றது.

பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 6 கிராம மக்களும் எதிர்ப்பை பதிவு செய்ய முடியாத ஒருவித அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் ரியல் எஸ்டேட் தரகர்களை ஏவிவிட்டு சாதாரணமாக இடங்களை அதிக விலை வாங்கும் மோசடி நடந்து கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஏக்கர் 28 ஆயிரம் இருந்தது. ஆனால், இன்று ஒரு ஏக்கர் 8 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இது வேண்டும் என்றே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பலர் தாங்களாகவே முன்வந்து நிலத்தை விற்பதற்கு தயார் நிலையில் இருக்கிறார்கள்.

நியூட்ரினோ திட்டம் ஏற்படுத்தும் சிக்கல்

கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பொட்டிபுரம் சுற்றிலும் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலமும் (இருபோக சாகுபடி) 18 ஆயிரம் ஏக்கர் (தென்னை, வாழை, திராட்சை) புன்செய் சாகுபடி நிலமும் 10 ஆயிரம் ஏக்கர் பழங்கள், காய்கறிகள் சாகுபடி நிலமும் உள்ளது. இதனை சுற்றி மிக முக்கியமான அணைகள் ஐந்து உள்ளன. இரவங்காறு அணை, சண்முகா நதி, சோத்துப்பாறை, வைகை அணை, மஞ்சளாறு, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அணைகள் உள்ளது. இவற்றுக்கெல்லாம், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் திட்டம்தான் இந்த நியூட்ரினோ திட்டம். கரும்பாறைகளை துகல்போட்டு தான் இத்திட்டம் நிறைவேற உள்ளது.

17 லட்சம் டன் கற்களை உடைத்தால்தான் இத்திட்டம் நிறைவேறும், அடிப்படையில் 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் உயரம் என ஒரு சதுரமீட்டர் கல்லை தோண்டி எடுத்தால் அது நான்கு டன் எடை வரும். 1500 அடி ஆழத்தில் 132 மீட்டர் நீளத்திலும் 26 மீட்டர் அகலத்திலும் 20 மீட்டர் உயரத்திலும் இரண்டு குகை துளை போட்டால் எத்தனை டன் கற்கள் வெளியே கொட்டப்படும்? அப்படி கொட்டப்படும் கற்களை எப்படி இங்கிருந்து அகற்றுவார்கள்? கிட்டத்தட்ட 20 லட்சம் டன் கற்களை மலையிலிருந்து பெயர்க்க போதுமான தண்ணீர் தேவை படும். அதற்கு என்ன செய்யப்போகிறார்கள். தேனி மாவட்டத்தில் 6 முதல் 8 மணி நேரம் வரை மின்சாரம் கிடைக்கிறது. இப்படி இருக்க மின்சாரத்திற்கு என்ன செய்யப்போகிறார்கள்? 30 முதல் 50 டன் எடையை கொண்ட லாரிகளை இயக்கப்போவதாக கூறுகிறார்கள்.

53,000 டன் இரும்பும் 4 ஆயிரம் டன் ஸ்டீலும், 12 ஆயிரம் டன் சிமிண்டுகளும் 3,500 டன் மணலும் பயன்படுத்தி சுரங்கத்தை நிலை நிறுத்துவார்களாம்.. இந்தப் பொருட்களெல்லாம் வந்து சேர்வதற்காக என்ன மாதிரி சாலை வசதிகள் செய்யப்போகிறார்கள்? ஆனால், அதற்கு தகுந்த சாலை வசதி செய்யப்படுமா? அப்படி செய்யப்படும் பட்சத்தில் ஒட்டுமொத்த பொட்டிபுரம் புதுக்கோட்டை, ராமகிருஷ்ணம்புரம், தேவாரம், கோம்பை, சின் செட்டிபுரம் உள்ளிட்ட ஊர்களில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்கிறார் மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான தனராசு. இவர் நியூட்ரினோ திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறார். தற்பொழுது, தள்ளாத வயதில் வீட்டிலிருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நியூட்ரினோ சம்பந்தமாக புத்தகம் எழுதி விநியோகம் செய்து வருகிறார்.

இத்திட்டத்தால் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. மாறாக, கேடுதான் அதிகமாக இருக்கிறது என்கிறார் ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் எம்.ஏ. அப்பாஸ். “நாங்கள் ஆரம்பம் முதல் இத்திட்டத்தை எதிர்த்து வந்திருக்கிறோம். நாங்கள் அன்றைய கலெக்டர் முத்து வீரனிடம் 16 கேள்விகளை கேட்டோம். ஒன்றுக்குகூட அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

உலக நாடுகள் பல இத்திட்டத்தை கை விட்டுவிட்டது. அத்திட்டத்தை இந்தியா எடுத்திருப்பதில் ஏதே அரசியல் இருக்கிறது. இத்தாலி, ஜப்பான் இரண்டு நாடுகளுமே இத்திட்டத்தை விட்டுவிட்டன. அமெரிக்க ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலும் பிரஞ்சு பனி மலைக்கு அடியிலும் இத்திட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியா யாரை திருப்திப்படுத்த இத்திட்டத்தை கொண்டுவர துடிக்கிறது என்பது தெரியவில்லை.

மக்களை மதிக்காமல் இயற்கையை மதிக்காமல் அறிவியல் முன்னேற்றம் என்கின்ற போர்வையில் களம் இறங்கிருப்பது துரதிக்ஷ்டவசமானது. மற்ற மாநிலங்கள் புறகணித்த திட்டத்தை தமிழகம் மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்?

நியூட்ரினோ திட்டம் என காரணம்காட்டிஉயர்தரமான கிரானைட் கற்களை எடுக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் இறங்கியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இத்திட்டம் முழுவதும் நிறைவேறுவதற்குள் 4 ஆயிரம் கோடி செலவாகும் என்று கணிக்கப்படுகிறது.

அப்போது 4 ஆயிரம் கோடி செலவழித்து 2 லட்சம் கோடி லாபம் பார்க்கவே இத்திட்டம் தொடங்கி இருக்கிறார்கள். வெளிப்படையாக நியூட்ரினோ என்றாலும் உயர்தரமான கற்களை எடுக்கவே அரசு இத்தில்லுமுள்ளு வேலையை செய்வதாக இன்னொரு தகவலும் வருகிறது.

நாங்கள் வேண்டாம் என்கின்ற இத்திட்டத்தை கொண்டுவரும் அரசு நாங்கள் வேண்டும் என்று சொல்லுகின்ற திண்டுக்கல், குமுளி ரயில் பாதைக்காக திட்டத்தை கடந்த 50 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளது. அதைபோல் போடி மதுரை அகல ரயில் பாதை திட்டம் கடந்த பத்தாண்டாக முடங்கி கிடக்கிறது. இதை நிறைவேற்றினாலே மக்களுக்கு மிகப்பெரிய பயனாக இருக்கும். இதையெல்லாம், கேட்கும்பட்சத்தில் என்மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.”

அணு கழிவு கொட்ட திட்டமா?

உலகில் உள்ள நியூட்ரினோ ஆய்வு மையங்கள் எல்லாம் சுமார் 150 ஆண்டுகளாக தோண்டப்பட்டு இனி அதில் நிலக்கரியோ இரும்போ தங்கமோ எடுக்க முடியாது என்று கைவிடப்பட்ட சுரங்கங்களில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த சுரங்கம் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தகுதியற்றது என்று கைவிடப்பட்டாலும் படலாம். அப்பொழுது, இந்த சுரங்கத்தை அணுக்கழிவுகளை கொட்டுவதற்கு பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த டாக்டர் சிவராமன் கூறும்பொழுது, “ஒட்டுமொத்தமாக தமிழகத்தை சிதைக்கும் திட்டம்தான் இந்த நியூட்ரினோ திட்டம். உலக அரங்கில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மேற்கு தொடர்ச்சி மலையை சிதைப்பது மிகப்பெரிய அவலம். இதனை தமிழக அரசு கேட்க வேண்டும். நம்மூர் அரசியல்வாதிகள் கேட்க வேண்டும்.

அவர்கள் நியூட்ரினோ திட்டம் என்று வெளியில் சொன்னாலும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அணுக்கழிவை கொட்டுவதற்கு அனுமதி வாங்கி இருக்கிறார்கள். எனவே, இது பெரிய மோசடி.அப்படி நியூட்ரினோ திட்டம் வரும்பட்சத்தில் மிகப்பெரிய அளவில் தமிழகத்தையும் கேரளாவையும் பாதிக்கும். இதற்காக நாங்கள் சட்ரீதியாக நீதிமன்றத்தை நாட உள்ளோம். இது விஷயத்தில் தமிழக அரசும் மற்ற அரசியல் கட்சிகளும் மௌனமாக இருப்பது வேதனை அளிக்கின்றது என்றார்.

மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் இத்திட்டத்தை அரசாங்கம் கைவிடுமா? அல்லது வழக்கம்போல் மௌனமாக இருக்குமா? மக்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Comments are closed.