மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்த NIA சிறப்பு நீதிமன்றம்

0

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்த NIA சிறப்பு நீதிமன்றம்

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் NIA சிறப்பு நீதிமன்றம் ஏப்ரல் 16  விடுதலை செய்துள்ளது. ஒன்பது உயிர்களை வாங்கி ஏறத்தாழ 50 பேரை படுகாயமடையச்செய்த இந்த குண்டு வெடிப்பு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது நடத்தப்பட்டது.

இவ்வழக்கில் முன்னர் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் அவர்கள் மீதான குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி NIA சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் இது குறித்து கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை வாதத்தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதால் நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட வலதுசாரி இந்து அமைப்புகளை சேர்ந்த சுவாமி அசீமானந்தா, தேவேந்தர் குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய் மற்றும் ராஜேந்தர் சவ்திரி ஆகியோர் விடுதலையாகியுள்ளனர். இந்த வழக்கு மற்றும் வலது சாரி இந்து அமைப்பினர் குற்றம் சாட்டப்பட்ட மேலும் பல வழக்குகளில் மத்திய புலனாய்வு நிறுவனங்கள் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் இந்த குண்டு வெடிப்பில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களுக்கு உள்ள பங்கு குறித்தும் அவர்களின் பெயர்களையும் சுவாமி அசீமானந்தா அளித்த வாக்குமூலங்கள் அடங்கிய இரண்டு பக்கங்களை கொண்ட “Memo of Disclosure No88” என்கிற ஆவணம் நீதிமன்றத்தில் இருந்து மாயமானது. இந்த ஆவணம் அசீமானந்தா மற்றும் இந்த வழக்கில் ஆர்எஸ்எஸ் இன் தொடர்பை உறுதி செய்ய மிக முக்கியமான ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் இவ்வழக்கு விசாரணையின் போது சிபிஐ விசாரித்த 68 சாட்சியங்களில் DRDO விஞ்ஞானி வட்லாமணி வெங்கட் ராவ் உட்பட 54 பேர் பிறழ் சாட்சியாக மாறியிருந்தனர்.

2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு தரப்பில் வாதாடிய NIA வின் வழக்கறிஞரான ரோகினி சாலியன், அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு கேடையம் போல NIA செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் NIA தன்னை இந்த வழக்கில் மென்மைப்போக்கை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டதாக அவர் குற்றம்சாட்டியதும் மக்கா மஸ்ஜித் வழக்கில் வாதத்தரப்பு குற்றம்சாட்டப்பட்டவர்களின் குற்றங்களை நிரூபிக்கத் தவறியதும்  இங்கு குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞர் ரோகினி சாலியன் NIA மீதான இந்த குற்றச்சாட்டிற்குப் பிறகு அந்த வழக்கு விசாரணையில் இருந்து மாற்றப்பட்டார். மேலும் குண்டு வெடிப்பு வழக்கில் NIA தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஒரு குற்றப்பத்திரிகையே அல்ல என்றும், இதில் அவர்கள் இந்த வழக்கு குறித்து எந்தவித விசாரணையும் நடத்தவில்லை என்றும் மாறாக இவ்வழக்கை முன்னர் விசாரித்த ATS அதிகாரிகள் மீது தான் விசாரணை செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.