மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்தார்

0

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்தார்

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து சுவாமி அசீமானந்தா உட்பட அனைவரையும் குற்றமற்றவர்கள் என்று விடுவித்த நீதிபதி K.ரவீந்தர் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது இந்த முடிவிற்கும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு தீர்பிற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் தனது தனிப்பட்ட காரணங்களால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவித்த மூத்த நீதித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அவர் அவரது ராஜினாமா கடிதத்தை மெட்ரோபொலிட்டன் செஷன்ஸ் நீதிபதிக்கு அனுப்பியுள்ளார். தனது ராஜினாமாவிற்கு தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாகவும் அதற்கும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு தீர்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.

2007ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி நானூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த மக்கா மஸ்ஜிதில் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் போது ரிமோட் மூலம் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், 58 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் வலதுசாரி இந்து அமைப்பை சேர்ந்த 10 பேர் குற்றம்சாட்டபட்டாலும் அதில் சுவாமி அசீமானந்தா என்ற நப குமார் சர்கார், லோகேஷ் ஷர்மா, தேவேதிர குப்தா, பாரத் மோகன்லால் ரடேஷ்வர் என்ற பாரத் பாய், மற்றும் ராஜேந்திர சவுத்திரி ஆகிய ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். தற்போதைய தீர்ப்பிற்கு பின்னர் இவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.