மங்களூரு பாப்புலர் ஃப்ரண்ட் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்

0

மங்களூருவின் கைகம்பா பகுதியை சேர்ந்தவர் அஹமத் குரேஷி. இவரை மங்களூர் காவல்துறையினர் சட்டவிரோதமாக கடத்திச் சென்று காவலில் வைத்து சித்தரவதை செய்துள்ளனர். காவல்துறையினரின் சித்திரவதையினால் குரேஷிக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவரை மாவட்ட வென்லாக் மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். அங்கு அவரது சிறுநீரகத்தில் ஒன்று பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட குறேஷியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் காவல்துறையின் இந்த அராஜகப் போக்கின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை சேர்ந்தவர்கள் காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், ககுரேஷியை சட்டவிரோதமாக கைது செய்து விசாரணை என்கிற பெயரில் காவல்துறை மனிதத் தன்மையற்ற முறையில் துன்புறுத்துவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவியல் ஆய்வாளர் சுனில் நாயக், துணை ஆய்வாளர் ஷியாம் சுந்தர் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த காவலர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ள குரேஷியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும் என்றும் அவருக்கு நிகழ்த்தப்பட்ட இந்த கொடுமைகளுக்காக அவருக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கைகள் மூன்று நாட்களில்  நிறைவேற்றப்படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டமாக இது மாறும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் காவல்துறை கொடுமைகளுக்கு ஆளான குரேஷிக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தவர் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை காவல்துறையினர் கைதும் செய்துள்ளனர். இதற்கு காரணமாக இவர்கள் போராட்டம் நடத்த அனுமதி பெறவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப் பட்டவர்கள் உர்வா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஓவியரான குரேஷி பல சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருபவர். இவரை கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் அருகே வைத்து காவல்துறையினர் விசாரனை என்கிற பெயரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இவர் மார்ச் மாதம் 27 ஆம் தேதி வரை காவல்துறையினரின் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் இவர் காவல்துறையினரால் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் கைது தொடர்பாக குரேஷிஇன் குடும்பத்தினருக்கு எந்த ஒரு தகவலும் காவல்துறையினரால் அளிக்கப்படவில்லை.

குரேஷி குறித்து தகவல்களை அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் கேட்கவே குரேஷியின் குடும்பத்தினரும் காவல்துறையினரால் மிரட்டப்பட்டுள்ளனர். குரேஷியை விடுவிக்க அவரது குடும்பத்தினர் விடாமல் எடுத்த முயற்ச்சியின் காரணமாக மார்ச் 27 ஆம் தேதி ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறி காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.